Published:Updated:

நெல்லையில் சைவ சபை மாநாடு! 107 வருடங்களுக்குப் பின்னர் நடத்த ஏற்பாடு

நெல்லையில் சைவ சபை மாநாடு! 107 வருடங்களுக்குப் பின்னர் நடத்த ஏற்பாடு
நெல்லையில் சைவ சபை மாநாடு! 107 வருடங்களுக்குப் பின்னர் நடத்த ஏற்பாடு

நெல்லையில் சைவ சபை மாநாடு! 107 வருடங்களுக்குப் பின்னர் நடத்த ஏற்பாடு

நெல்லையில் 107 வருடங்களுக்குப் பின்னர் சைவ சபை மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சைவ சமய அரங்கு, தமிழ்மொழி வளர்ச்சி அரங்கு ஆகியவை குறித்து பல்வேறு அறிஞர்கள் பங்கேற்றுப் பேசும் இந்த மாநாடு இரு தினங்களுக்கு நடைபெற உள்ளது.

நெல்லையில் சைவ சபை மாநாடு! 107 வருடங்களுக்குப் பின்னர் நடத்த ஏற்பாடு

சைவ சித்தாந்தத்தைப் போற்றவும் தமிழ் மொழியை வளர்க்கவும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 1886-ம் வருடம் சைவசபை தொடங்கப்பட்டது. பின்னர், நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான பாண்டித்துரைத் தேவர் தலைமையில் சைவ சபையின் வெள்ளிவிழாவுடன் சேர்த்து 1911-ம் வருடம் சைவ சபை மாநாடு நடத்தப்பட்டது. அதில், செந்தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், ரா.பி.சேதுப்பிள்ளை, திரு.வி.க போன்ற தமிழ் அறிஞர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள்.

தற்போது சுமார் 107 வருடங்களுக்குப் பின்னர் சைவ சபை மாநாட்டினை நடத்த நெல்லையின் சைவசபை அமைப்பு முடிவு செய்துள்ளது. இது பற்றி அந்த அமைப்பின் தலைவரான மீ.வள்ளிநாயகம், துணைத்தலைவரான ச.சுந்தரசுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கத்தில் சைவசபை மாநாடு, வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டின் முதல் நாளில் சைவசபை அரங்கமாக நடைபெற உள்ளது. இரண்டாம் நாளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கான அரங்காக நடைபெறுகிறது. மாநாட்டில் அதினகர்த்தர்கள் , சித்தாந்தப் பேரறிஞர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பிக்க உள்ளனர். மேலும் சமய இலக்கிய சொற்பொழிவுகளும், திருமுறைப் பண்ணிசை, கதாகாலட்சேபம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் சைவ சமயத்தின் மேன்மையினையும் தமிழ் மொழியின் உயர்வையும் எடுத்துக் காட்டும் வகையில் கண்காட்சிகள் புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. பாளையங்கோட்டை சைவ சபையின் வரலாறு நூலாகவும் ஆவணப்படமாகவும் வெளியிடப்படுகிறது. இம்மாநாட்டில் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்கப் பதிவு செய்வோர்க்கு இரண்டு நாட்களும் உணவு வசதி, வெளியூரில் இருந்து வருவோர்களுக்கு தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. 

வரும் 22-ம் தேதி திங்கள் கிழமை காலை 9.15 மணிக்கு மாநாட்டு பந்தல் கால் நடுதல் சிறப்பாக நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள 9443539638, 9865630387 என்ற எண்களில் பதிவு செய்யலாம். இதுவரையிலும் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்’’ எனத் தெரிவித்தனர். செய்தியாளர் சந்திப்பின் போது சைவ சபை செயலர் கிருஷ்ணன், துணைச் செயலர் காந்தி, பொருளாளர் வேலாயுதம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

அடுத்த கட்டுரைக்கு