Published:Updated:

ஆண்டாள் பிரச்னையை பெரிதுபடுத்துவது தவறு!- முத்தரசன் கண்டனம்

பாலமுருகன். தெ
ஆண்டாள் பிரச்னையை பெரிதுபடுத்துவது தவறு!- முத்தரசன் கண்டனம்
ஆண்டாள் பிரச்னையை பெரிதுபடுத்துவது தவறு!- முத்தரசன் கண்டனம்

சி.பி.ஐ மாநிலத் தலைவர் முத்தரசன், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் சி.பி.ஐ.ஒன்றியச் செயலாளர் அய்யாதுரை மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சிவகங்கை வந்தார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக காவிரியில் தண்ணீர் திறந்து பயிர்களைக் காப்பாற்றுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 28-ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் திருச்சியில் நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஜெயலலிதா அறிவித்த இலவச சைக்கிள் இதுவரை வழங்காமல் இருப்பதற்கு பேரம் முடியாமல் இருப்பதே காரணம்.

தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய முடியாது என போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். மற்றொரு அமைச்சரான செல்லூர் ராஜூ, 'பேருந்துக் கட்டணத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர்' என்று கூறிவரும் நிலையில், தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் தானாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, 27-ம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்டணத்தை திரும்பப் பெறவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

டெல்டா மாவட்டங்களில் மூன்றாவது முறையாக பயிர் செய்தும் தண்ணீர் இல்லை. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள தமிழக அரசு காவிரியில் இருந்து தண்ணீரை பெற்றுத்தரவேண்டும். ஆண்டாள்குறித்த சர்ச்சைக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்து உள்ளார். இப்பிரச்னை பெரிதுபடுத்துவது கண்டனத்துக்குரியது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பதை மத்திய அரசு தடுத்து, விலையை குறைக்க வேண்டும். அ.தி.மு.க அரசு பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டாக சிறையில் உள்ளவர்களை கெளரவம் பார்க்காமல் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.