Published:Updated:

’’பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்தத் தவறுகிறதா அரசு?’’

’’பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்தத் தவறுகிறதா அரசு?’’
’’பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்தத் தவறுகிறதா அரசு?’’

நாடு முழுவதும் பொதுப்போக்குவரத்தை ஊக்கப்படுத்தத் தவறும் அரசுகள், காற்று மாசுபாடு குறித்தும் கவலை கொள்வதில்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.  


ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பணி நிமித்தமாகவே அல்லது மற்ற காரியங்களுக்காகவோ செல்வோர் அதிக எண்ணிக்கையில் பொதுப் போக்குவரத்தை நம்பியே தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரைப் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களே அதிகம். ஆனால், பொதுப்போக்குவரத்தை அரசுகள் ஊக்குவிப்பதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

இதுதொடர்பாக சூழலியல் மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘’இன்றைய சூழலில் பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பதும், அந்த வாகனங்களை முறையாகப் பராமரித்து காற்று மாசுபாட்டைக் குறைப்பதும் மிக அத்தியாவசியமான பிரச்னைகளாகப் பார்க்கப்படுகிறது. 

காற்று மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் உலக அளவில் நமது நாடு ரொம்பவே பின்தங்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புகுறித்த செயல்பாடுகள் தொடர்பாக வெளியிடப்படும் Environmental Perfomance Index (EPI) தரவரிசையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் 141-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 177-வது இடத்துக்குப் பின்தங்கிவிட்டது. அண்டை நாடுகளைப் பொறுத்தவரை, வங்கதேசம் இந்த தரவரிசையில் 179-வது இடத்தில் இருக்கிறது. உலக அளவில் முக்கியமான மருத்துவ நாளிதழான லேன்செட் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வின்படி தமிழகத்தைப் பொறுத்தவரை 73.4 சதவிகிதம் இறப்புகள் தொற்ற நோய்கள் (Non-Communicable diseases) மூலம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதில், இதயம் தொடர்பான பிரச்னைகளில் உயிரிழப்பவர்கள் 38 சதவிகிதம். காற்று மாசுபாடு நுரையீரல், இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. சுத்தமில்லாத காற்றைச் சுவாசிப்பதால் ஏற்படும் இன்னல்கள் அதிகம். பொதுப்போக்குவரத்து வாகனங்கள் டீசல் எரிபொருளால் இயங்கக் கூடியவை. அந்த வாகனங்கள் உமிழும் புகையில் காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் காரணிகள் அதிகம். இந்தசூழலில் காற்று மாசுபாட்டையும், பொதுப்போக்குவரத்தையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் 22,533 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், ஏறக்குறைய 15,000 பேருந்துகள் ஆறரை ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டில் இருக்கின்றன. காலாவதியான பேருந்துகளில் இருந்து வெளிவரும் புகை அதிகப்படியான மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 2017-ம் ஆண்டு கணக்குப்படி 1,43,195 பேர் பணிபுரிகின்றனர். அரசுப் பேருந்துகளின் கட்டணம் சமீபத்தில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிறுவனமான என்.எஸ்.எஸ்.ஓ. (National Sample Survey Organisation) கடந்த 2015-ம் ஆண்டு வெளியிட்ட கணக்கின்படி, நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் குடும்ப வருமானத்தில் 58 சதவிகித்தைப் போக்குவரத்துக்காகவே செலவிடுகின்றனர். குறிப்பாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களுக்காக செலவிடுகின்றனர். எனவே, இவ்வளவு அதிகமான தொகையை சாமானியர்கள் போக்குவரத்துக்காக செலவிடும்போது, இந்தக் கட்டண உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். 

கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வரும் 2031-ல் இந்திய மக்கள் தொகை அடிப்படையில் 50 சதவிகிதம் பேர் பயணிப்பதற்கு 4.6 லட்சம் பேருந்துகள் தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஷேர் ஆட்டோக்களை ஓட அனுமதித்துள்ளனர். ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் என்பது சட்டரீதியாக அங்கீகரிப்படவில்லை. அரசு ஏன் கூடுதல் பேருந்துகளை இயக்குவதில் ஆர்வம் காட்டவில்லை என்பது கேள்வியாக நிற்கிறது. அதேபோல், நமது அரசுப் பேருந்தின் வடிவமைப்பு முதல் இன்ஜின்கள் வரை எதுவுமே உலகத்தரத்தை இன்னும் எட்டவில்லை என்றே கூறப்படுகிறது. இதை Europian Bus system of the Future என்ற அளவீடுடன் ஒப்பிட்டு இப்படி சொல்லப்படுகிறது. காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்காக நாட்டில் உள்ள அரசுப் பேருந்துகளை உலகத் தரத்துக்கு இணையாகக் கொண்டுவர வேண்டும் என 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டியதுதான்  என்றாலும், அவை எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது கவனிக்கப்பட விஷயம்.  

’’Institute for transportation and Development Policy - 2015’’ என்ற தலைப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முக்கியமான ஒரு தகவல் நமக்குக் கிடைக்கிறது. இதில், பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்போருக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான அரசின் முதலீடு அல்லது பண உதவி குறித்து அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில், கார் டிரிப் ஒன்றுக்கு ரூ.31.60 அரசு சார்பில் செலவழிக்கப்படுகிறது. ஆனால், பேருந்தில் பயணிப்பவருக்கு 90 பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது. அரசின் தவறான கொள்கை முடிவையே இது காட்டுகிறது. திட்டமிட்டே கார் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அதிக முதலீடு செய்யப்படுகிறது. பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதில் அக்கறை காட்டும் அரசு, மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்காதது ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி சென்னை மாநகரின் மக்கள் தொகை 86 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது விரைவில் ஒரு கோடியைத் தாண்டும் என்கிறார்கள். அசுர வேகத்தில் நகர்மயமாகி வரும் முக்கியமான மாநிலமாக தமிழகம். 55 சதவிகித தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசித்துவருகின்றனர். பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதில் அரசு அக்கறை கொள்ளாவிட்டால், அதன்மூலம் இரண்டு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. மாசுபாடு காரணமாக பருவநிலை மாறுபாடுகள் ஏற்படுகின்றன. அதேபோல், மக்கள் நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகமாகின்றன. இவற்றைக்  கருத்தில்கொண்டு பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், அதிகப்படியான பேருந்துகளை அரசு இயக்க வேண்டும்’’ என்றார்.