Published:Updated:

கண்களைக் கட்டிக்கொண்டு கறுப்புக் கொடிகளுடன் கலெக்டரிடம் மனு!

துரை.வேம்பையன்
கண்களைக் கட்டிக்கொண்டு கறுப்புக் கொடிகளுடன் கலெக்டரிடம் மனு!
கண்களைக் கட்டிக்கொண்டு கறுப்புக் கொடிகளுடன் கலெக்டரிடம் மனு!

``ஏழை, எளிய மக்களுக்காக பயன்பட்டுவந்த திருமண மண்டபத்தை சாதி பார்த்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இப்போ பூட்டி போட்டுட்டாங்க. இதனால், மக்கள் அல்லாடுறாங்க. இதை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆட்சியரிடம் கண்களைக் கட்டிக்கொண்டும், கறுப்புக் கொடிகளை கையில் ஏந்திக்கொண்டு போய் மனு கொடுத்தோம்" என்கிறார்கள் சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெருமாள் கோயிலில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்தத் திருமண மண்டபத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை எளியவர்கள் குறைந்த வாடகை கட்டணம் செலுத்தி, தங்களது இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்திவந்தார்கள். அன்றாடங்காய்ச்சிகளான அவர்களுக்கு இந்தத் திருமண மண்டபம் பெரிதும் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக 'பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது' என்ற காரணத்தைச் சொல்லி அந்த மண்டபத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டி வைத்திருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்நிலையில்தான், 'அந்த மண்டபத்தை திறக்க வலியுறுத்தி கண்களில் துணியையும், கைகளில் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியபடி ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் மனு அளித்துள்ளார்கள் சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தைச் சேர்ந்த வடிவேல்,  "உண்மையில் எந்தப் பராமரிப்புப் பணிகளும் அந்த மண்டபத்தில் நடக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்துவதால், மண்டபத்தை இழுத்துப் பூட்ட வச்சுட்டாங்க. அந்த மண்டபத்தை திறக்க வலியுறுத்தி நாங்க போராடி வருகிறோம்" என்றார்.