Published:Updated:

வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் - மன்னார்குடி ஜீயர் அறிவிப்பு

வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் - மன்னார்குடி ஜீயர் அறிவிப்பு
வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் - மன்னார்குடி ஜீயர் அறிவிப்பு

ஆண்டாளைத் தவறாகப் பேசியதாக வைரமுத்துவைக் கண்டித்து, தூத்துக்குடியில் இந்துசமய கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மன்னார்குடி மடத்திலிருந்து, செண்டலங்கார சென்பகராம இராமனுஜ ஜீயர் சுவாமிகள், பெருங்குளம், சிவபிரகாச தேசிக சத்ய ஞானபிரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதினம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கண்டன ஆர்ப்பாட்டத்துக்குப் பின் பேசிய மன்னார்குடி இராமானுஜ ஜீயர், ``ஒரு காலத்தில் எந்தப் பத்திரிகையிலும் இந்து மதம் பற்றி எழுதியது இல்லை. இன்று ஆன்மிக மலர் இல்லாத பத்திரிகைகள் இல்லை. அதேபோல வண்ண உடைகளிலும் ஆன்மிகம் கலந்திருக்கிறது. கறுப்புச் சட்டை அணிந்தவர்கள் எல்லாம்  ’திராவிடக் கட்சி’ என்ற நிலை மாறி சபரிமலைக்குச் செல்லும் கன்னி சாமிகள் என்ற நிலையும் சிவப்புச் சட்டை அணிந்தவர்கள் ’கம்யூனிஸ்ட்’ என்கிற நிலை மாறி ஆதிபராசக்தி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் என்கிற நிலை வளர்ந்து இருக்கிறது. இது ஆன்மிகத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. 

தவறு செய்வது மனித இயல்பு. அப்படிச் செய்த தவற்றுக்கு வருந்தி, அதே தவற்றை மீண்டும் செய்யமாட்டேன் என உணர்ந்து மன்னிப்பு கேட்பதுதான் மனிதனின் நற்குணம். அப்படிபட்ட மன்னிப்பை ஆண்டாள் தாயார் சந்நிதியில் வந்து வைரமுத்து கேட்க வேண்டும். ஆண்டாள் ஒரு தமிழ்த் தாய். அவளின், 30 பாசுரங்களில் தமிழ் அல்லாத வேறு மொழி கலப்புகள் இல்லை. அப்படிப்பட்ட தமிழ்த்தாயை அவமதிப்பது தமிழை அவமதிப்பதற்கு ஒப்பானது. சினிமாக்காரர்களும், வைரமுத்துவும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் இவர்கள் ஒன்றும் தமிழை வளர்க்கவில்லை. இவர்கள் தமிழால் வளர்ந்தார்கள்.  தமிழை வளர்த்தது ஆண்டாளும் ஆன்மிகமும்தான்.  

வைரமுத்து, அன்னை ஆண்டாள் சந்நிதியில் வந்து சாஷ்டாங்க மன்னிப்பு கேட்காத வரையில் இந்துமக்கள் மற்றும் அனைத்து ஜீயர்களின் போராட்டம் தொடரும். தமிழகத்தில் இந்து சமயத்தையும் புண்படுத்தும் போக்கு அதிகரித்துவிட்டது. இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும் இவர்கள் போன்றவர்கள் புண்படுத்துவதில்லை. இனி வரும் காலங்களில் யாரும் இந்து மதத்தைப் பற்றி அவதூறாகப்  பேசக்கூடாது. பேசவும் விட மாட்டோம். இந்தக் கூட்டம் இந்துக்களின் சுய கவுரவத்தையும் ஒற்றுமையையும் அதேநேரத்தில் வைரமுத்துவுக்கு எதிரான எதிர்ப்பைக்  காட்டவே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது.” என்றார்.