மதுரை: முன் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து மதுரை வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி, இன்று மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டியதாக 94 கிரானைட் குவாரிகள் மீது மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார்.இதில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனமும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் இயக்குனர்கள் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்டோர் மீதும் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து துரைதயாநிதி, நாகராஜ் உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் தலைமறைவாகினர்.
இதனையடுத்து தலைமறைவான துரைதயாநிதி மீது மேலூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த பிடிவாரண்டை ரத்து செய்யுவும், முன் ஜாமீன் வழங்க கோரியும் துரைதயாநிதி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கிரானைட் அதிபர்கள் செல்வராஜ், நாகராஜ் உள்ளிட்ட சிலரும் முன்ஜாமீன் கேட்டு அங்கு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, துரைதயாநிதி மற்றும் நாகராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி பாஸ்போர்ட்டை ஒப்படைத்து விட்டு, தினமும் சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்து வந்த துரை தயாநிதி, நேற்று இரவு தனியார் விமானத்தில் மதுரை வந்தார்.பின்னர் அவர் காரில் மதுரை சத்தியசாய் நகரில் உள்ள வீட்டுக்கு சென்றார்.
துரைதயாநிதியின் நண்பர் நாகராஜ் நேற்று மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுள்ளார். எனவே துரை தயாநிதியும் அதேப்போன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அவர் இன்று மேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.