Published:Updated:

இலவச சைக்கிள் ஏன் வழங்கவில்லை?

வீ கே.ரமேஷ்
இலவச சைக்கிள் ஏன் வழங்கவில்லை?
இலவச சைக்கிள் ஏன் வழங்கவில்லை?

தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகள், கால் வலிக்க நடந்து பள்ளிகளுக்கு வருகிறார்கள்' என்று  2001-2002-ம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு  இலவச சைக்கிள் வழங்கினார். இத்திட்டம் 2005- 2006-லிருந்து விலையில்லா சைக்கிள் திட்டமாக மாற்றி, பதினொன்றாம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டுவந்தது.
ஆனால்,  2017-2018 இந்தக் கல்வியாண்டில், பதினொன்றாம் வகுப்பு முடியும் தருவாயில் இன்னும் சைக்கிள் வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

இதுபற்றி ஐக்கிய விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிமணி, ''விலையில்லா சைக்கிள் திட்டத்தின்படி, பதினொன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும்  ஜனவரி மாதத்துக்குள் சைக்கிள் வழங்குவது வழக்கம். அதற்காக  டிசம்பர் மாதத்துக்கு முன்னதாகவே சைக்கிள் பாகங்கள் வந்துவிடும். அந்த சைக்கிளின் பாகங்களை சுமார் ஒரு மாத காலத்துக்குள் பொருத்தி, பொங்கலுக்குள்  கொடுப்பார்கள்.  ஆனால், 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவ-மாணவிகளுக்கு கடந்த  ஜனவரிக்குள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை கொடுக்கப்படவில்லை. தற்போது பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்கிவிட்டது. அடுத்து, பொதுத்தேர்வு வந்துவிடும். பிறகு, இந்தக் கல்வியாண்டுக்கான சைக்கிள் கொடுக்கப்படாமலேயே போய்விடும். இனி சைக்கிள் வந்து, அதைப் பொருத்திக்கொடுப்பதற்கான சாத்தியம் இல்லை. எனக்குத் தெரிந்து, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் விசாரித்துப் பார்த்துவிட்டேன். யாருக்கும் சைக்கிள் கொடுக்கவில்லை. சைக்கிள் திட்டத்தை நிறுத்திவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்' என்றார்.

இதுகுறித்து சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரி, 'சைக்கிள் வழங்கப்பட வேண்டிய மாணவ, மாணவிகளின் லிஸ்ட் அனுப்பி இருக்கிறோம். பெரும்பாலும் ஜனவரிக்குள் வந்துவிடும். இந்த ஆண்டு கொஞ்சம் கால தாமதம் ஆகிறது. கூடிய விரைவில் கொடுத்துவிடுவார்கள் என நாங்களும் நம்பிக் கொண்டிருக்கிறோம். மற்றப்படி நிறுத்த வாய்ப்பில்லை' என்றார்.

இதுபற்றி கல்வித்துறை அமைச்சரின் உதவியாளர் முருகனிடம் கேட்டதற்கு, 'அது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கூடிய விரைவில் சைக்கிள் வழங்கி விடுவோம்' என்றார்.