Published:Updated:

`என்னோட இந்த நிலைக்கு நீங்கதானே காரணம்! வேலை கேட்டு அலையும் போக்குவரத்துத் தொழிலாளி

இரா.மோகன்
உ.பாண்டி
`என்னோட இந்த நிலைக்கு நீங்கதானே காரணம்! வேலை கேட்டு அலையும் போக்குவரத்துத் தொழிலாளி
`என்னோட இந்த நிலைக்கு நீங்கதானே காரணம்! வேலை கேட்டு அலையும் போக்குவரத்துத் தொழிலாளி

போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்ட ஊழியரை மாற்றுப் பணியிலிருந்தும் நீக்கியதால், மருத்துவத்திற்குக்கூட வழியின்றி அவதியுற்றுவருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் சம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் அமரநாதன். இவர், கடந்த 1998-ம் ஆண்டு முதல் ராமநாதபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கலெக்‌ஷன் பணத்தை செலுத்துவதற்காக ராமநாதபுரம் நகர் பணிமனைக்குச் சென்றபோது, பணிமனையில் இருந்த சுவர் அலமாரி பெயர்ந்து விழுந்ததில், அமரநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மீண்டும் பணிக்கு வந்தநிலையில், ஏற்கெனவே நடந்த விபத்தின் காரணமாக தலையில் ரத்தம் உறைந்து வலது கை மற்றும் கால் செயல்படாமல்போனது.

இதையடுத்து, மருத்துவச் சான்றின் அடிப்படையில் அமரநாதனுக்கு போக்குவரத்துக் கழக தொழில்நுட்பப் பிரிவில் உதவியாளராக மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏற்பட்ட உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, உதவியாளராகப் பணிசெய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் பணிக்கு வர வேண்டாம் எனக் கூறி, அதிகாரிகள் வேலையில் இருந்து நிறுத்தியுள்ளனர். 55 வயதான அமரநாதன், வருவாய் இன்றி தனது குடும்பத்தை நடத்த முடியாமலும், தனது உடல் நலக்குறைவிற்கு சிகிச்சை எடுக்க முடியாமலும் வறுமையில் அவதியுற்றுவருகிறார்.

இன்று (19-02-18) மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த அமரநாதன், குடும்பம் நடத்தவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு சிகிச்சை எடுக்கவும் வழி இல்லாத நிலையில் தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்.