Published:Updated:

`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்?' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி

சகாயராஜ் மு
`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்?' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி
`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்?' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி
`ரூ.20,000 கொண்டு வந்தீங்களா சூப்பர்வைசர்?' - ஓப்பனாகக் கேட்ட டாஸ்மாக் மேலாளருக்கு நேர்ந்த கதி

கூடுதலாக நியமிக்கப்பட்ட விற்பனையாளரை நீக்க வேண்டுமானால் 20,000 ரூபாய் லஞ்சம் கொடுங்கள் என்று ஓப்பனாகக் கேட்ட சென்னை மண்டல மேலாளர் குணசேகரை, டாஸ்மாக் சூப்பர்வைசர் ஜெயராமன், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கையும் களவுமாகச் சிக்க வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ஜெயராமன் என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், டாஸ்மாக் நிறுவதன்தின் சென்னை மண்டல மேலாளர் குணசேகர் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள டாஸ்மாக் கடை எண் 4538-ல் கூடுதலாக நியமிக்கப்பட்ட விற்பனையாளரை நீக்க வேண்டும் எனில், ரூ.20,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துகிறார். அதனால், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின்மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், டாஸ்மாக் மேலாளரை பொறிவைத்துப்பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி, புகார்தாரர் ஜெயராமனிடம் ரசாயனம் கலந்த 20,000 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்து அனுப்பினர். இந்தப் பணத்துடன் சென்னை அண்ணாசாலையில் எல்.எல்.ஏ பில்டிங்கில் அமைந்துள்ள குணசேகர் அலுவலகத்துக்குச் சென்றார் ஜெயராமன். அப்போது, ஜெயக்குமாரை பார்த்த குணசேகர், `பணத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா’ எனக் கேட்டுள்ளார்.

பணத்துடன் வந்திருப்பதாக ஜெயராமன் கூறியுள்ளார். அப்போது, பணத்தைத் தனது கார் டிரைவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார் குணசேகரன். இதையடுத்து, அவருக்கு அருகில் இருந்த கார் டிரைவரிடம் ஜெயராமன் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் குணசேகரனையும் அவரின் கார் டிரைவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு பேரையும் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாளில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.