Published:Updated:

சீமானுக்கு கொலை மிரட்டல்: கமிஷனரிடம் புகார்

சென்னை, மார்ச் 3, 2011

நாம் தமிழர் கட்சித் சீமானுக்கும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கமிஷனரிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், 'தமிழ் முழக்கம் வெல்லும்' இதழின் ஆசிரியருமான சாகுல்ஹமீது அளித்த புகார் மனுவில், " புதுச்சேரியிலிருந்து ராம்கோபால் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் செவ்வாய்க்கிழமை சூளைமேடு கில் நகரில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்தது.

அதில், சீமானை மிரட்டி பின்வரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் உங்கள் கட்சியின் புதுக்கோட்டை உறுப்பினராக இருந்த முத்துக்குமாரைக் கொன்றவன். என் கட்டளைகளை ஏற்று நீங்கள் நடக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது.  ராஜபட்சேவை எதிர்க்கக் கூடாது.  மத்திய, மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும். புதுக்கோட்டையில் புரட்சி செய்யக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மேலும் பலருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்பன உள்ளிட்ட மிரட்டல் வாசகங்கள் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் இந்த மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. எனவே,  இந்தக் கடிதம் குறித்து விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு