
சென்னை: விஷவாயு வெளியேறியதையடுத்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியி்லுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 23ம் தேதியன்று தூத்துக்குடியில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசக் கோளாறு ஏற்பட்டது.
இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான கந்தக வாயுவே காரணம் என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆலையை மூடக்கோரி முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
##~~## |

இந்த நிலையில், காற்று மற்றும் நீராதாரங்களை ஸ்டெர்லைட் ஆலை மாசு படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து ஆலையை மூட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, ஆலையை மூடுவதற்கான அடுத்தக்கட்ட முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமார் கூறுகையில், ‘‘ஆலையை மூடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. பெரிய கம்பெனிங்கிறதால் பார்மால்டிஸ் நிறைய இருக்கிறது. அந்த வேலை நடந்து வருகிறது’’ என்றார்.
இந்த உத்தரவு குறித்த தகவல் வெளியானதும் தூத்துக்குடி மக்கள் சந்தோச பரபரப்பில் இருக்கிறார்கள்.
எஸ்.சரவணப்பெருமள்
படங்கள்: ஏ.சிதம்பரம்