Published:Updated:

வேலூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது: நோயாளிகள் பெரும் அவதி!

வேலூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது: நோயாளிகள் பெரும் அவதி!
வேலூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது: நோயாளிகள் பெரும் அவதி!

வேலூர்: வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் ஒரு வாரமாக பழுதடைந்திருப்பதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்ட மக்களும் நம்பியிருப்பது வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சி.டி. ஸ்கேன் பழுதாகி உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டம் அருகில் நடந்த சாலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சி.டி. ஸ்கேன் பழுதாகி இருந்ததால் அவர்களுக்கு உரிய சிகிச்சை தரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நோயாளிகளும், அவர்களது உறவினர்கள் பலரும் கொதிப்படைந்தனர்.

இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் 6 பேரையும் உடனடியாக சென்னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இன்னும் ஒரு வாரத்தில் சி.டி. ஸ்கேன் சரி செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையில் உள்ள சுகாதார சீர்கேடுகளையும், மருத்துவ பணியாளர்களின் முறைகேடுகள் குறித்தும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏ.சசிகுமார்