Published:Updated:

பட்டாசு ஆலை விபத்து: ஊருக்குத்தான் உபதேசம்... நமக்கு இல்லை

பட்டாசு ஆலை விபத்து: ஊருக்குத்தான் உபதேசம்... நமக்கு இல்லை
பட்டாசு ஆலை விபத்து: ஊருக்குத்தான் உபதேசம்... நமக்கு இல்லை

விருதுநகர்: தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவரே விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் நடந்த தீ விபத்தில் 3 பேர் பலியானது தொடர்பாக பிற பட்டாசு ஆலை உரிமையாளர்களும், அதிகாரிகள் கண்காணிப்பு குழுவும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

சிவகாசி அருகே முதலிப்பட்டியில் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் 40 பேர் பலியாகினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய, மாநில அரசுகள் உடனே விதிமுறைகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டன. இதையடுத்து வருவாய்த்துறை, மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, தொழிலாளர் நலத்துறையினர் ஒருங்கிணைந்து சிவகாசியை சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் 200 பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு அவற்றின் லைசென்ஸ்கள் தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்டன. அப்போது பெரிய பட்டாசு உற்பத்தியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு சிவகாசியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும், தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைவராக இருக்கும் விஜயகுமார், அதிகாரிகளின் ரெய்டு நடவடிக்கைக்கு தமது சங்கத்தின் சார்பாக கண்டனம் தெரிவித்தார்..

குறிப்பாக, 'பெரிய பட்டாசு ஆலைகளைவிட சின்ன பட்டாசு ஆலைகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடக்கின்றன. எனவே அவற்றின் மீதுதான் அதிகாரிகள் ரெய்டு நடத்தி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வற்புறுத்தினார். இதற்கு சின்ன பட்டாசு உற்பத்தியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தொழில் போட்டி காரணமாக, 'அதிகாரிகளை தங்கள் மீது ஏவி விட்டு தொழிலை நசுக்க பார்ப்பதாக' சின்ன பட்டாசு உற்பத்தியாளர்கள் கருதினர். இப்படி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கமான (டான்பாமா)வுக்கும், சின்ன பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் இடையே சத்தம் இன்றி முட்டல், மோதல்கள் அரங்கேறி வந்தது.

இந்நிலையில்தான் கடந்த ஏப்.28ல் சிவகாசி அருகே நாராயணபுரத்தில் உள்ள ரத்னா பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகளை தயாரிப்பதற்கான மணி மருந்தை கலக்கும்போது, திடீரென வெடித்து செல்லையா, கனி, மாரிமுத்து ஆகிய  3 தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அருகில் இருந்த தங்கப்பாண்டி, பவுலு, உள்பட 7 தொழிலாளர்கள் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் 80 சதவீதத்துக்கு மேல் இவர்களது உடலில் தீக்காயம் இருப்பதால் உயிர் பிழைப்பது கஷ்டம் என்று டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தான்,

##~~##
நாராயணபுரத்தில் வெடி விபத்து நடந்த ரத்னா பட்டாசு ஆலையின் உரிமையாளர் என்ற விசயம் வெளியானதும்தான் பிரச்னை பூதாகரமாக கிளம்பியுள்ளது. ஏனென்றால் பட்டாசு ஆலைகள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கக்கூடாது. அப்படி விடுமுறை நாளில் பட்டாசு ஆலைகளை இயக்க வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு முன்பே தொழிலாளர் நலத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் விபத்து நடந்த ரத்னா பட்டாசு ஆலை எந்த அனுமதியின்றி விடுமுறை நாளான ஞயிற்றுக்கிழமை இயங்கியதும் அதன் தொடர்பாக விபத்து நடந்ததும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மேலும் பேன்சி ரக வெடிகளை தயாரிப்பதற்கு மூலப்பொருளான மணி மருந்து கலவையை அனுமதி பெற்ற அறைகளில் மட்டுமே போர்மென் முன்னிலையில் தயாரிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ரத்னா பட்டாசு ஆலையில் மணி மருந்தை மரத்தடியில் வெட்ட வெளியில் போர்மென் இல்லாமல் சாதாரண தொழிலாளர்கள் தயாரித்துள்ளனர். அப்போது காலை 10 மணி. கொளுத்தும் வெயிலில் மணி மருந்தை கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்ன பட்டாசு ஆலைகளில்தான் விதிமுறை மீறல்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி வந்த தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் விஜயகுமாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விதிமீறல்களை காற்றில் பறக்க விட்டு 3 உயிர்களை காவு வாங்கிய சம்பவத்தினால் பிற பட்டாசு ஆலைகளும், அதிகாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊருக்குத்தான் உபதேசமோ?

எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்