Published:Updated:

புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் தவிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகள்

புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் தவிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகள்
புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் தவிக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகள்

விருதுநகர்: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக 2 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு காரணமாக புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் தவியாய் தவித்து வருகின்றன.

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் என்று 5 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் இறந்தாலோ, ஒய்வு பெற்றாலோ அந்த பணியிடத்தில் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கணிசமான அளவில் புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என்று ஒவ்வொருவருக்கும் லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயித்து சம்மந்தப்பட்டவர்களிடம் பணம் வசூலிப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக இடைநிலை மற்றும் பட்டதாசி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை நியமனம் செய்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியது. உடனே ஆனந்த கூத்தாட்டம் போட்ட பள்ளிகள் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7 லட்சம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 லட்சம் என்று வசூல் வேட்டையில் ஜரூராக இறங்கின.

தற்போது புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதில் பெரும் சிக்கல் விழுந்துள்ளது.

##~~##
மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும் இது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்றும் உத்தரவிட்டது.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்க முடியும் என்ற நிலைமை. அதே நேரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் பணம் வாங்கிக்கொண்டு நியமித்த அந்த ஆசிரியர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடர்ந்து பள்ளியில் பணியாற்ற முடியும் என்ற நிலைமை. இல்லையென்றால் லட்சக்கணக்கில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

பொதுவாக ஆசிரியர் வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசு பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஒரு பைசா செலவில்லாமல் அரசு வேலை கிடைக்கும்போது லட்சக்கணக்கில் பணம் கொட்டி கொடுத்து அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் வேலைக்கு சேர யாரும் முன் வருவதில்லை.

எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆளுங்கட்சி பிரமுகர்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை ‘வெயிட்டாக’ கொடுத்திருக்கின்றனர். மே மாதம் 10ஆம் தேதி பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை விவாதம் வருகிறது. அதில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்குமா என்று அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

எல்லாம் பணம் படுத்தும்பாடு?

-எம்.கார்த்தி