Published:Updated:

`இன்னும் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்!’ - மனைவியின் பிரிவும் `சகலகலா வல்லவன்' புஷ் மரணமும் #HWBush

`இன்னும் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்!’ - மனைவியின் பிரிவும் `சகலகலா வல்லவன்' புஷ் மரணமும் #HWBush
News
`இன்னும் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்!’ - மனைவியின் பிரிவும் `சகலகலா வல்லவன்' புஷ் மரணமும் #HWBush

`இன்னும் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்!’ - மனைவியின் பிரிவும் `சகலகலா வல்லவன்' புஷ் மரணமும் #HWBush

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்  நேற்று (01.12.2018) காலமானார். இவர் அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட காலம் வாழ்ந்த அதிபர் ஆவார்.


 

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் (George Herbert Walker Bush) 1924-ம் ஆண்டு மாசசூசெட்ஸ் மாகாணத்தின் மில்டன் டவுனில் பிறந்தார். அண்டோவரில் உள்ள புகழ்பெற்ற பிலிப்ஸ் அகாடமியில் கல்வி பயின்றார். வாக்கர் புஷ் ஒரு சகலகலாவல்லவன். ஆம், விளையாட்டு, கலை, படிப்பு அனைத்திலும் கெட்டிக்காரராக இருந்தார். படிக்கும்போதே, மாணவர்கள் அமைப்பின் தலைவர், பேஸ்பால் கேப்டன், சாக்கர் டீம் கேப்டன் என பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்தார். அவர் படிப்பை முடிக்கும் காலகட்டத்தில்தான் ஜப்பான் பேர்ள் துறைமுகத் தாக்குதல் (Pearl harbour attack) நடத்தியது. அமெரிக்கா ஆடிப்போனது. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் புஷ் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 18 தான். கடற்படையில் இணைந்து 50-க்கும் மேற்பட்ட போர் படையில் (combat missions) முக்கிய பங்கு வகித்தார். இரண்டாம், உலகப்போரில் போர் விமானியானார்.

ஒருமுறை பசிபிக் கடலில் அமெரிக்கப் படை சென்றுகொண்டிருந்தபோது, எதிரி நாடுகளால் தாக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் தப்பித்து கொண்டார். ஆனால், அவரின் சக போர் வீரர்களும் நெருங்கிய நண்பர்களும் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவத்திலிருந்து மீள்வதற்கே ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷுக்கு நீண்ட காலம் ஆனது. அதன் பிறகு, எண்ணெய் வியாபாரி அவதாரம் எடுத்தார். அடுத்ததாக அரசியல் பிரவேசம். தூதரக அதிகாரி, உளவுத்துறை தலைவர்... இப்படி பல்வேறு துறைகளில் கால்பதித்தார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


 

அமெரிக்காவின் 41 வது குடியரசுத் தலைவராக 1988-ம் ஆண்டு ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் பதவியேற்றார். 1993-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரின் பதவிக் காலத்தில்தான் அமெரிக்கா இராக்குடன் போரிட்டது. இந்தப் போரில்தான் புதிய ரக ஏவுகணைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. எனவே, ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் இந்தப் போர் அவருக்கு அவப்பெயரை உண்டாக்கியது. அவரின் ஆட்சிக் காலத்தில் வரிக் கட்டணங்களை உயர்த்தியது இவர் மீது விமர்சனங்கள் எழக் காரணமானது. பின்னர் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்ததும், 1993-ம் ஆண்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்.


 

2001-ல் இவரின் மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43-வது அதிபராகப் பதவியேற்றார். ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் அரசியலில் இருந்து விலகினாலும் தனக்குப் பிடித்த விமான சாகசங்களை செய்து அமெரிக்க மக்கள் நினைவுகளில் இருந்து நீங்காமல் இருந்தார். குறிப்பாக அவரின் 70-வது, 80-வது, 85-வது மற்றும் 90-வது பிறந்தநாள்களின்போது ஸ்கை டைவிங் செய்து உலகையே ஆச்சர்யப்பட வைத்தார்.  2011-ல் அப்போதைய அதிபர் ஒபாமா, ஹெர்பெர்ட் வாக்கர் புஷ்ஷுக்கு Medal of Freedom விருது கொடுத்து கௌரவித்தார். நாட்டின் உயர்ந்த குடிமக்களுக்கு கொடுக்கப்படும் விருது அது. 


 

பார்கின்சன் நோய் புஷ்ஷின் கலகலப்பை குறைத்தது. பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தார். முதுமைக் காலத்தை தன் மனைவியுடன் கழித்தார். ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் புஷ்ஷின் மனைவி பார்பரா பியர்ஸ் புஷ் 92-வது வயதில் காலமானார்.


 


 

பார்பராவின் இறுதிச்சடங்கில் வீல் சேரில் கையில் மலர்க்கொத்துடன் இருந்த புஷ்ஷை பார்த்து அமெரிக்க மக்கள் கலங்கினர். தன் மனைவியின் சடலத்தை கண் இமைக்காமல் புஷ் பார்த்துக்கொண்டிருந்ததும் பின்னர் வெடித்து அழுததும், தன் மனைவி மீது அவர் வைத்திருந்த ஆழமான காதலை வெளிப்படுத்தியது. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் போனதால்தான் என்னவோ சில மாதங்களில் புஷ்ஷும் மரணத்தைத் தழுவினார்.  


 

புஷ் - பார்பரா காதல்கதையைப் பற்றி சில வரிகளில் எழுதிவிட முடியாது. ஏறக்குறைய 80 ஆண்டுகளாக அனைத்துச் சூழல்களிலும் இருக்கமாக கரங்களை பற்றிக் கொண்டு ஒருவருக்கொருவர் அன்போடு நடைபோட்டனர். புஷ்ஷுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழல்களில் பார்பராவின் காதல் மட்டுமே அவரை மீண்டுவரச் செய்தது. 


`நான் என் முதுமையை நோக்கி நடைபோடுகிறேன். 72 ஆண்டுகளுக்கு முன்னர் கரம்பிடித்த என் கணவரை இன்னும் அதிகமாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உலகத்தைக் கொடுத்தவர் புஷ். அவர் சிறந்த மனிதர். இறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னர் தன் கணவர் குறித்து பார்பரா எழுதிய வரிகள் இவை. அதுமட்டுமல்ல இறக்கும் தருவாயிலும் அவர் சொன்னது என்ன தெரியுமா, `என் கணவரை நான் இன்னும் அதிகமாகக் காதலிக்கிறேன்’ என்பதுதான். காதலாக வாழ்ந்தவர்கள் சில மாத இடைவெளியில் காதலுடனே மரணத்தைத் தழுவிவிட்டார்கள். 


 

வாக்கர் புஷ்ஷுக்கு 5 பிள்ளைகளும் 17 பேரன்களும் உள்ளனர். `எங்களின் தந்தை H.W. புஷ் தனது 94 வயதில் காலமானார் என்பதை, ஜெப், நீல், மார்வின், டோரோ, ஜார்ஜ் வாக்கர் புஷ் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் தந்தை குணநலன்களில் உயர்ந்த மனிதர்.  சிறந்த தந்தை’ என அவரின் குடும்பத்தினர் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.  RIP George H. W. Bush!