Published:Updated:

தொழிலாளர் தினத்தன்று விடுமுறை விடாத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

தொழிலாளர் தினத்தன்று விடுமுறை விடாத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
தொழிலாளர் தினத்தன்று விடுமுறை விடாத 91 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

மதுரை:  மதுரையில் மே தினத்தன்று செயல்பட்ட 91 தனியார் வர்த்தக நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

அரசு விடுமுறை தினங்களை, அரசு துறை மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டுமென்பதுதான் விதி. இதை கடைபிடிக்காத தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தவிர்க்க முடியாத அளவில் விடுமுறை விட முடியாத  சேவை நிறுவனங்கள், விடுமுறை தினத்தில் செயல்பட வேண்டுமென்றால், அதை முன்கூட்டியே தொழிலாளர் நல அலுவலரிடம் மனு மூலம் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் செயல்பட்டால் அது சட்ட விரோதமாகும்.

தொழிலாளர் தினமான மே 1 ஆம் தேதி மதுரையில், விதிகளுக்கு புறம்பாக, தொழிலாளர்களுக்கு விடுமுறை விடாமல் செயல்பட்ட 91 வர்த்தக நிறுவனங்கள் மீது, மதுரை தொழிலாளர் நல கமிஷனர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 63 தனியார் அலுவலகங்கள், 26 உணவகங்கள், 4 மோட்டார் வாகன நிறுவனங்கள் இதில் அடங்கும்.

''வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள  இந்த நிறுவனங்களுக்கு, முதற்கட்டமாக அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படும் இந்நிறுவனங்கள், மீண்டும் இதே தவறை செய்தால் கோர்ட் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்கள் தொழிலாளர் நல துறை அலுவலர்கள்.

செ.சல்மான்