Published:Updated:

பொன்னாரின் போலி ட்வீட்கள்... இப்படித்தான் ட்வீட் செய்கிறதா பா.ஜ.க. ஐ.டி அணி?!

பா.ஜ.க அமைச்சரின் ட்விட்டர் அக்கவுன்ட்டில் வந்துவிழுந்த சர்ச்சை ட்வீட்களின் பின்னால் இப்படியொரு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது.

பொன்னாரின் போலி ட்வீட்கள்... இப்படித்தான் ட்வீட் செய்கிறதா பா.ஜ.க. ஐ.டி அணி?!
பொன்னாரின் போலி ட்வீட்கள்... இப்படித்தான் ட்வீட் செய்கிறதா பா.ஜ.க. ஐ.டி அணி?!

ரசியல் கட்சிகளிலேயே இணையம் மற்றும் சமூகவலைதளங்களில் மிகவும் பலமான கட்சியாகப் பார்க்கப்படுவது பா.ஜ.க-தான். இதற்கு அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணிக்கு அளிக்கும் முக்கியத்துவம்தான் காரணம் என்று கூறுவர். ஆனால், சமீபத்தில் இதிலும் கோட்டைவிட்டுவருகிறது பா.ஜ.க. அதை எடுத்துரைக்கும் வகையில் இன்று ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

இன்று காலை பா.ஜ.க-வினர் தரப்பில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்று அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால் அந்த ட்வீட் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசை விமர்சிக்கும்வண்ணம் அமைந்திருந்தது. ``நடுத்தர மக்களுக்காக உழைப்பதென்பது மோடி அரசின் முன்னுரிமையே கிடையாது’’ என்றது அந்த ட்வீட். இந்த டீவீட்டை பா.ஜ.க-வின் பக்கங்கள் மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ட்வீட் செய்திருந்தார். இது பின்பு நீக்கப்பட்டது. முதலில் அவரது கணக்கு ஹேக் ஆகியிருக்கலாம் என்றே சந்தேகிக்கப்பட்டது. பின்புதான் இதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. 

நண்பன் படத்தில் வரும் காட்சியைப் போல ஒரு டாக்குமென்ட்டில் மாற்றங்கள் செய்தால் போதும் பா.ஜ.க-வினரை இப்படித் தவறாக ட்வீட் செய்யவைக்க முடியும் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த டாக்குமென்ட்டானது அமைச்சர்களின் ஐ.டி அணி உட்பட பா.ஜ.க-வினர் பலருடனும் பா.ஜ.க-வின் ஐடி அணியால் பகிரப்படுகிறது. கூகுள் ட்ரைவ் சேவை மூலம் இந்தப் பகிர்வு நடப்பதாகத் தெரிகிறது. இந்த டாக்குமென்ட்டில் இருப்பதைத்தான் இவர்கள் வார்த்தை மாறாமல் ட்வீட்டாகப் பதிவிடுகின்றனர். இதனால்தான் இன்று காலை இப்படி ஒரு ட்வீட் பொன்னார் கணக்கில் பதிவிடப்பட்டது என்கிறார் பிரதிக் சின்ஹா. இவர் AltNews என்னும் போலி செய்திகள் கண்டறியும் இணையதளம் ஒன்றின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பன் படத்தில் மாற்றி எழுதப்பட்ட உரையை தப்பென்றே தெரியாமல் அப்படியே படிப்பாரே சத்யன்? கிட்டத்தட்ட அதே மொமன்ட்தான் இன்றும். 

இவர் இது குறித்து ஒரு சிறிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் இந்த டாக்குமென்டில் எப்படி சின்ன மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ட்வீட்கள் தவறாகப் பதிவாகுகின்றன என்பதை எடுத்துக்காட்டியிருந்தார். இந்த வீடியோவில் 'Trend Alert: #Modi4NewIndia' என்ற தலைப்பில் இருக்கிறது அந்த டாக்குமென்ட். ஒவ்வொரு ட்ரென்டின்போதும் அந்தந்த பெயரில் டாக்குமென்ட் பகிரப்படும்போல. இந்த டாக்குமென்ட்டில் 'with dignity' பதிலாக 'without dignity' போன்ற சிறிய மாற்றங்கள்தான் செய்யப்படுகிறது. இப்படித்தான் பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த ட்வீட்டும் பதிவிடப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ட்வீட்களை பா.ஜ.க ஆதரவு பக்கங்களும் இவர்களைப் பார்த்து கண்ணைமூடி ஷேர் செய்துவிடுகின்றனர். இந்த ஒரு ட்வீட் மட்டுமல்லாமல் பழைய ட்வீட்கள் பலவும் இதே போன்று மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் சின்ஹா. அதற்குப் பொன்.ராதாகிருஷ்ணனின் பழைய ட்வீட் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்கிறார் அவர். அதில் அனுமதி அளிக்கும் காலம் 600-லிருந்து 1800-ஆக 'குறைக்கப்பட்டுள்ளதாக' இருக்கும். archive தளங்கள் மூலம் டெலீட் செய்யப்பட்ட ட்வீட்களையும் பார்க்க முடியும். ஒருமுறை 'Altnews தளத்தில் படிக்கத் தொடங்குங்கள்' என்றுகூட பா.ஜ.க பக்கங்களைப் பதிவிடச் செய்துள்ளது.

இந்த டாக்குமென்ட்டில் எப்படி மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதைத் தெரிவிக்க மறுத்த பிரதிக் சின்ஹா "பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியே அதைக் கண்டுபிடித்து தவறுகள் சரிசெய்யட்டுமே" என்றும் ட்வீட் செய்தார். இதன்பிறகு பாஜகவினர் பதிவிடும் ட்வீட்களின் மீது சந்தேகம் வலுத்துள்ளது. சமீபத்தில் பதிவிடப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் தவறான ட்வீட் கூட இப்படிதான் பதிவிடப்பட்டிருக்குமோ என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இன்றுவரை இந்த ட்வீட் டெலீட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் உட்படப் பல கட்சிகளுக்கும் இதற்காக பாஜகவினரை சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், இந்த அளவுக்கா ஒரு கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி அலட்சியமாக இருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுகிறது. பெரிய கட்டுரைகள் என்றால்கூட சரி, வெறும்  100-120 எழுத்துகளையே உடைய ட்வீட்களில் செய்யப்படும் சிறு சிறு மாற்றங்களைக்கூடக் கண்டுபிடிக்காத அளவில்தான் இருக்கின்றதா பாஜகவின் ஐடி அணி? இன்னொருபுறம் இதை அப்படியே காப்பி ஃபேஸ்ட் செய்யும் தொண்டர்கள் வேறு!