Published:Updated:

கும்பமேளாவில் துப்புரவுப்பணியாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சி!

கும்பமேளாவில் துப்புரவுப்பணியாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சி!
கும்பமேளாவில் துப்புரவுப்பணியாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சி!

உத்தரப்பிரதேசத்தில், கும்பமேளாவில், பத்தாயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள், தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு துப்புரவுப்பணி செய்து கின்னஸ் சாதனை படைத்தார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில், கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா புனித நீராடல் நிகழ்ச்சி, வரும் மார்ச் 4-ம் தேதியோடு நிறைவுபெறுகிறது. 

கும்பமேளாவில் துப்புரவுப்பணியாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சி!

கும்பமேளாவில் உலகெங்குமிருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடினார்கள். கிட்டத்தட்ட, இரண்டு மாத காலமாக நடைபெற்ற இந்தப் புனித நீராடல் நிகழ்ச்சியில், நகரைத் தூய்மையாக வைத்துக்கொண்டதில் துப்புரவுப்பணியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். அவர்களின் உழைப்பைப் பாராட்டும்விதமாகவும், அந்த உழைப்பையே கின்னஸ் சாதனையாக மாற்றும்விதமாகவும், பத்தாயிரம் துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக மூன்று நிமிடங்களுக்கு துப்புரவுப்பணி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பமேளா நிர்வாகக்குழுவும், மாநில சுகாதாரத்துறையும் இணைந்து இந்த கின்னஸ் சாதனை முயற்சியை ஒருங்கிணைத்தனர்.

கும்பமேளாவில் துப்புரவுப்பணியாளர்கள் கின்னஸ் சாதனை முயற்சி!

மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், பிரயாக்ராஜ் நகரின் சட்டமன்ற உறுப்பினருமான சித்தார்த்நாத் சிங் இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோது, ``இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த கும்பமேளா நிகழ்வில், கடந்த இரண்டு மாத காலமாக, துப்புரவுப்பணி செய்து, சுகாதாரத்தைப்பேணிய இவர்களது செயல் பெரிதும் பாராட்டத்தக்கது" என்று கூறினார். அமைச்சரும் அவர்களோடு துப்புரவுப்பணியில் சிறிது நேரம் ஈடுபட்டார். 

இதற்கு முன்தினம், கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மக்களின் போக்குவரத்து வசதிக்காகப் பயன்படுத்தப்பட்ட 510 பேருந்துகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.