Published:Updated:

''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல்

''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல்
''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல்

''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல்

செங்கல்பட்டை சேர்ந்தவர் ஃபசூல் ரகுமான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 'டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இலவச சேமிப்புத் திட்டம்' என்ற பெயரில், இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் உட்பட, அரசுப் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களிடம் மாதம் ஒரு ரூபாய் வசூலித்து, அதன்மூலம் ஒரு வருடத்திற்கு கிடைக்கப்பெறும் 798 கோடி ரூபாயை ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தை பிரதமருக்குக் கடிதமாக அனுப்பியிருக்கிறார். அவரின் இந்த எண்ணத்தைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முப்படைத் தலைவர்கள் என அனைவரும் ஃபசூலை நேரில் அழைத்து வாழ்த்தியதன்மூலம், நாடு முழுவதும் பிரபலமானவர். 

சிறு வயதிலிருந்தே இந்திய விமானப்படையின் தளபதியாக ஆவதையே தன்னுடைய லட்சியமாகக்கொண்டிருக்கும் ஃபசூலுக்கு விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை வர்தமான்தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். 

“அப்போ, நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். செங்கல்பட்டுல நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏர் மார்ஷல் வர்தமான் சார் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க. சின்ன வயசுல இருந்தே என்னோட கனவு, இந்திய விமானப்படையின் தளபதி ஆக வேண்டும்ங்கிறதுதான். அதனால, அந்த நிகழ்ச்சியில ஏர் மார்ஷல் வர்தமான் சாரைப் பார்த்ததும் எனக்குள்ள இயல்பாவே ஒருவித சிலிர்ப்பு உண்டாகிடுச்சு. நிகழ்ச்சி முடிஞ்சதுமே நேரா அவர்கிட்ட போய் பேசினேன். 'இந்த சின்ன வயசிலேயே உனக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கா. நிச்சயமா உன் ஆசை நிறைவேற வாழ்த்துகள்'னு சொல்லிட்டு, 'என்னோட உதவி எப்போ தேவைப்பட்டாலும் உடனே என்னை கான்டாக்ட் பண்ணு' னு சொல்லி அவங்க நம்பரையும் கொடுத்துட்டுப் போனாங்க. அப்போ இருந்து, வர்தமான் சாரோட நான் நிறைய புரொகிராமுக்குப் போயிருக்கேன். நிறைய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கார். என்னோட ஒவ்வொரு செயல்பாடுகள்லயும் அவர் ஊக்கமா இருந்திருக்கார். 

நான், அபிநந்தன் அண்ணாவின் அப்பா வீட்டுக்கு அடிக்கடி போவேன். அப்போ ஒருமுறை, அபிநந்தன் அண்ணாவையும் பார்க்க முடிஞ்சது. ரொம்ப நல்லா பேசுனாங்க. 'உங்களை மாதிரி இளைஞர்கள்லாம் ராணுவத்திற்கு வரணும்' னு சொல்லி மோட்டிவேட் பண்ணினாங்க. அதுக்குப் பிறகு, குடியரசு தினத்தன்னிக்கு வர்தமான் சார் என் வீட்டுக்கு வந்திருந்தாங்க. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி என் வீட்டுக்கு வந்ததை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்பட்டேன். அப்போ எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாங்க. அது எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசு” முகம் பூரிக்கப் பேசியவர் தொடர்ந்து, 

கடந்த வாரம் அபிநந்தன் அண்ணாவை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்த செய்தி பார்த்துட்டு ரொம்ப பயந்துட்டேன். அவர் எப்படியாவது பத்திரமா திரும்பி வரணும்னு நினைச்சேன். என்னோட ஒவ்வொரு மூவ்மென்ட்டுலயும் வர்தமான் சாரும் அபிநந்தன் அண்ணாவும் இருக்கிறாங்க. அப்படி நான் இன்ஸ்பிரேஷனா பார்க்கிற மனிதர் பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்ட தகவல் என்னை ரொம்ப பாதிச்சது. அண்ணா பத்திரமா இந்தியா திரும்பின பிறகுதான் நிம்மதியா இருந்துச்சு. அதே நேரத்துல, அவங்களை நினைச்சு ரொம்ப பெருமை இருக்கு. அண்ணா சென்னை வர்றப்ப, முதல் ஆளா போயி அவரை பார்த்துட்டு வந்திடணும்” என்கிறார் ஃபசூல். 

அடுத்த கட்டுரைக்கு