Published:Updated:

கவுதமாலா அதிபருக்கு 80 ஆண்டு தண்டனை: ராஜபக்சேவுக்கு எப்போது? கி.வீரமணி கேள்வி

Vikatan Correspondent
கவுதமாலா அதிபருக்கு 80 ஆண்டு தண்டனை: ராஜபக்சேவுக்கு எப்போது? கி.வீரமணி கேள்வி
கவுதமாலா அதிபருக்கு 80 ஆண்டு தண்டனை: ராஜபக்சேவுக்கு எப்போது? கி.வீரமணி கேள்வி
கவுதமாலா அதிபருக்கு 80 ஆண்டு தண்டனை: ராஜபக்சேவுக்கு எப்போது? கி.வீரமணி கேள்வி

சென்னை: மக்களைப் படுகொலை செய்த கொடியவன் கவுதமாலா நாட்டின் அதிபர் எஃப்ரெயின் ரியோல் மாண்டுக்கு 80 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு தண்டனை எப்போது? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இனப்படுகொலைக்குக் காரணமான சர்வாதிகாரிகள், கொடுங்கோலர்கள். அவர்கள் எந்த நாட்டுக்காரர்கள் ஆனாலும், வரலாறு தண்டிக்காமல் விடுவதில்லை. நாஜிக்கள் என்ற ஹிட்லர், யூதர் இனத்தை அழித்ததற்கு உரிய தண்டனையை பல்வேறு வகைகளில் தீர்ப்புகளில் பெற்று, குற்றம் புரிந்த கொடுங்கோலன் என்று தீர்ப்பாகியது. அதேபோல் உகாண்டா நாட்டு இடி அமீன்கள் இருந்த இடத்தை வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை!

இலங்கையில் ஈழத் தமிழர் எழுச்சியை அறவே அடக்கி விட்டோம்; அந்த இனத்தையே பூண்டற்றுப் போக அழித்தே தீருவேன் என்று சபதமேற்ற  ராஜபக்சே குடும்பத்தினர், அந்தப் பணியில் பெரும் பகுதியை செய்து முடித்து வெற்றியை முத்தமிட்டு விட்டோம் என்று முழங்குகிறார்கள். முள்ளி வாய்க்கால் படுகொலை சாதாரணமானதா? விடுதலைப்புலிகளின் வேட்டை என்ற பெயரால் ஈழத்து எழுச்சிச் சின்னங்களான இளைஞர்களை அறவே அழித்திட பலவகை முறைகளைக் கையாண்டுள்ளன.

ஈழத்துத் தமிழச்சிகள் சுமார் 90 ஆயிரம் பேர் விதவைகள் என்ற கொடுமையைக் கண்டு வெற்றிப் புன்னகை புரிகின்றன, மனிதாபி மானமற்ற மரக்கட்டைகள். இந்தக் கொடுமையாளர்களுக்கு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனையே கிடையாதா? என்று வேதனையோடும், வெந்த நெஞ்சின் புண்களோடும் கேள்வி கேட்கும் மனிதநேயர்களுக்கு ஓர் அருமையான வரலாற்று நிகழ்வு அண்மையில் நடந்துள்ளதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

1982ல் மத்திய அமெரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் ஒன்றான கவுதமாலா என்ற நாட்டின் இன்றைய நடப்பு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். கவுதமாலா நாடு, ஒரு சிறிய மத்திய அமெரிக்க நாடு. அங்குள்ள பூர்வகுடியினர், மாயர்கள்  என்பது வரலாற்றில் முக்கியமானது. அந்த நாட்டில் 1982ல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார் ராணுவத் தளபதி ஜெனரல் எஃப்ரெயின் ரியோல் மாண்ட் என்பவர்.

இந்தப் புரட்சி மூலம் மலைப்பகுதிகளில் இருந்த மண்ணின் மைந்தர்களான இக்சில்மாயன் என்ற பூர்வ இன மக்களைக் கொன்று குவித்தான். மொத்தமுள்ள ஜனத்தொகை ஆறரைக் கோடியில், 2 லட்சத்து 50 ஆயிரம் மாயர்கள் கொல்லப்பட்டனர்.

17 மாதங்கள் கொண்ட குறுகிய கால ஆட்சியில் ஈவிரக்கம் அற்ற முறையில் இந்த சர்வாதிகாரி இச்சில் மாயன் இன மக்களில் 5 விழுக்காடுகளுக்கு மேல் படுகொலை செய்தான். இந்த இனப்படுகொலைக்காக நீதி கேட்டு, கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை இயக்கங்கள் போராடி வந்தன. அதில் நீதி கிடைக்காமல் தாமதித்துக் கொண்டே வந்தது. 30 ஆண்டுகளுக்குப்பின் நீதி கிடைத்துள்ளது.

பலவகை சூழ்ச்சி, சாமர்த்தியங்களால் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததின் மூலம் இந்தக் குற்றச் சாற்றுக்களிலிருந்து விதி விலக்குப் பெற்று நியாயம், நீதியின் கரங்களிலிருந்து தப்பித்தே வந்தான். இரண்டாண்டுகளுக்குமுன் முதல் முறையாக அவன் தேர்தலில் தோல்வியுற்றான். அந்த மகிழ்ச்சியின் செய்தியை அறிந்த மனித உரிமை இயக்கங்களும், மற்ற உள்நாட்டு அமைப்புகளும், அவன்மீது வழக்குத் தொடுக்கக் கோரிக்கை வைத்தனர்.

கவுதமாலா நாட்டில் வாழ்ந்த மாயன் இனத்தவர்களைக் கொன்றொழிக்கும் கொடுமையை 500 ஆண்டுகளுக்குமுன் அய்ரோப்பியர்கள் கால் வைத்த போதே தொடங்கி விட்டதாம். இந்தக் கொடியவனைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்க ரொனால்ட் ரீகன் செயல்பட்டிருக்கிறார்.

எஃப்ரெயின் ரியோல் மாண்ட் வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது நீதிபதி, 'கவுதமாலாவின் பெரும்பான்மையராக இருக்கும் 21 மாயன் இனக்குடிகளில், இக்சில் மாயன் இனத்தவர்களை, அடியோடு அழிக்கும் செயல் திட்டமிட்டே ரியாஸ் மாண்டிற்கு நன்கு தெரிந்தே நடந்துள்ளது. அவர் நினைத்திருந்தால் இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம்' என்று கூறியுள்ளார்.

##~~##
இந்தக் கயவனுக்கு 80 ஆண்டு சிறை வாசம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் முடிவை நீதிமன்றத்தில் நீதிபதி வாசித்தபோது, அங்கு பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து கூடியிருந்தனர். அவர்களின் பெருத்த ஆரவாரம். மாயன் இனப்பெண்கள் கண்ணீர் பெருக்கினர். ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு 'நீதி', 'நீதி' என்று பெருமுழக்கத்தை எழுப்பி தீர்ப்பை வரவேற்று மகிழ்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது நூற்றுக்கணக்கான பெண்களும், ஆண்களும் தங்களது சாட்சியத்தைப் பதிவு செய்தனர்.
இக்சில் மாயன் இனப் பெண்களின், குழந்தைகள் வீசியெறிப்பட்ட, துப்பாக்கி முனைகளால் குத்திக் கொல்லப்பட்ட கோர நிகழ்வுகளையும் அந்தப் பெண்கள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்த போது, தங்கள் கண்களில் வழிந்தோடிய ரத்தக் கண்ணீரை மறைக்க, முகங்களை மூடிக் கொண்டனர். ராணுவத்தால் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றியும், தங்களது தாய், தந்தையர்கள், சகோதரர்களை குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து, வரிசையாக சுட்டு வீழ்த்தி, அந்தப் பிணங்களை அடுக்கிக் கூட்டுச் சமாதி கட்டிய செயல்கள் எவ்வளவு பச்சாதாபமற்ற கோரத் தாண்டவம் ஆடின.
நாட்டின் உயர்நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு ஆணையிட்டது. காரணம், தற்போது நாட்டின் தலைவராக இருக்கும் பூட்டோபெரேஸ் மோலினா என்பவர் 1980களில் இக்சில் மாயன்கள் என்ற இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ராவணுத் தளபதியாக இருந்தார். அப்போது அவர்களின் குடிசைகளை எரிப்பதற்கு ஆணையிட்டார் என்ற குற்றச்சாற்று கொண்டு வரப்பட்டது. இதனால் ரியாஸ் மாண்ட் மீதான வழக்கு கால தாமதம் ஆனது. ஆனால் இறுதியாக நீதி வென்று விட்டது.
இதற்குமுன் லத்தின் அமெரிக்க நாடுகளில், சில சர்வாதிகாரிகள் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். ஆனால் இனப்படுகொலைக் குற்றத்திற்காக 80 ஆண்டு தண்டனை பெற்றது, அமெரிக்கக் கண்டத்தில் முதல் முறையாக நடந்துள்ளது.
கவுதமாலா நாட்டின் அதிபர் கொடுங்கோலனுக்கு 80 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேக்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இது வரலாறு கற்பித்த, கற்பிக்கப் போகும் பாடமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.