Published:Updated:

முக்கிய கோப்புகளை அழிக்க முயற்சி:அதிமுக புகார்

Vikatan Correspondent

சென்னை, ஏப்.25,2011

அரசுத் துறைகளை புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றம் செய்வதாகக் கூறி முக்கியமான கோப்புகளை அழிக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும், இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ##~~##

அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், வடசென்னை மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் ஆணையர்கள் வி.எஸ்.சம்பத், எச்.பிரமா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் ஆகியோருக்கு புகார் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவின் விவரம்:

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவரும் அரசுத் துறைகளை, புதிய தலைமைச் செயலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. இது தேர்தல் விதி முறைகளை பகிரங்கமாக மீறும் செயல். இடமாற்றம் என்ற பெயரில் முக்கியமான அரசு கோப்புகளை அழிக்க தி.மு.க. அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகமே, புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவருவதால், தி.மு.க. அரசின் இந்த முயற்சியை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில், தற்போதைய இடைக்கால அரசு எத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடலாம்? என்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், வரம்புகளும் உள்ளன.

சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகள், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் ஆகிய மிகவும் அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே இடைக்கால அரசு மேற்கொள்ள முடியும். அரசுத்துறைகளை இடமாற்றம் செய்வது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை இடைக்கால அரசு எடுக்க முடியாது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பதவியேற்கும் புதிய அரசு தான் இது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரசுத்துறைகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம், தற்போதைய அரசுக்கு கிடையாது. எனவே, இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசுத்துறைகள் இடமாற்றம் என்ற பெயரில் முக்கிய கோப்புகளை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அதனை தடுக்கவும், புனித ஜார்ஜ் கோட்டையில் மத்திய போலீஸ் படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.