Published:Updated:

புதுச்சேரி: மாணவிகள் மீது வன்கொடுமை வழக்கு!

புதுச்சேரி:  மாணவிகள் மீது வன்கொடுமை வழக்கு!
புதுச்சேரி: மாணவிகள் மீது வன்கொடுமை வழக்கு!

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ராக்கிங்கிற்குள்ளானதாக கூறப்படும் மாணவிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டில் மத்திய அரசின் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 6000க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

புதுச்சேரி:  மாணவிகள் மீது வன்கொடுமை வழக்கு!

இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி இரவு, பல்கலைக்கழக மாணவிகள் காவ்யாவும், அவரது 2 தோழிகளும் விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து வந்த உடற்கல்வித்துறையைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜித் மற்றும் அவரது நண்பரும், ஆபாசமாக பேசி கிண்டல் செய்தனராம். அதை மாணவிகள் இருவரும் தட்டிக் கேட்டபோது இன்னும் அசிங்கமாக பேசியதாகவும், இதனையடுத்து 'உன் மீது புகார் கொடுப்பேன்' என்றதற்கு, 'நீ புகார் கொடுத்தால் உன்னை ஹாஸ்டலில் வைத்தே சீரழித்து விடுவேன்' என இரு மாணவர்களும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

##~~##
இதையடுத்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மற்றும் ராகிங் கமிட்டிக்கு மாணவிகள் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால், மாணவிகள் கொடுத்த புகாரின் மீது எந்தவொரு நடவடிக்கையும் பல்கலைக்கழக நிர்வாகம் எடுக்கவில்லையாம். இதனையடுத்து மாணவிகள் காலாப்பட்டு போலீசில் புகார் அளித்திருக்கின்றனர்.
இதற்கிடையே, மாணவிகள் கொடுத்த புகாரை வாபஸ் பெறச்சொல்லி அவர்களின் நண்பர்களை, உடற்கல்வித்துறை மாணவர்கள் அடித்தனராம். இந்நிலையில், 'மாணவிகள் எங்களின் ஜாதி பெயரைச் சொல்லி திட்டினார்கள்' என உடற்கல்வித்துறை மாணவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கின்றனர். இதையடுத்து மாணவிகள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
''எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய பல்கலைக்கழகம், பாதிக்கப்பட்ட எங்கள் மீதே வழக்கு தொடர்வதற்கு உடந்தையாக இருக்கிறது. நாங்கள் எப்படி எங்கள் படிப்பை தொடர்வது என தெரியவில்லை'' என புகாருக்கு உள்ளான மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி :
நா.இள அறவாழி
படம் :
ஜெ.முருகன்