Published:Updated:

தமிழக மீனவர்கள் மேலும் 143 பேர் விடுதலை; ஒரே நாளில் 163 பேர் விடுவிப்பு!

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் மேலும் 143  பேர் விடுதலை; ஒரே நாளில் 163 பேர் விடுவிப்பு!
தமிழக மீனவர்கள் மேலும் 143 பேர் விடுதலை; ஒரே நாளில் 163 பேர் விடுவிப்பு!
தமிழக மீனவர்கள் மேலும் 143  பேர் விடுதலை; ஒரே நாளில் 163 பேர் விடுவிப்பு!

நாகப்பட்டினம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார், மல்லாகம், திரிகோணமலை உள்ளிட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம், திரிகோணமலை, நீர்கொழும்பு, மன்னார் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் தமிழகத்தை சேர்ந்த 298 மீனவர்கள் இன்று வரை சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன. இம்மாதம் 20ஆம் தேதி இப்பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து இலங்கை அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இதனிடையே நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், அதேபோல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்று முன்தினம் இலங்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை மீன்வள துறை அமைச்சர் ரஜித செனரத்னா, ‘இலங்கை&இந்திய மீனவர்களிடையே நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு பின்புதான் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கபட வாய்ப்புள்ளது’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்து மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற இவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. இதே போல் கடந்த மாதம் 2ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற கோட்டைபட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 30 பேரும் சிறைபிடிக்கப்பட்டனர். யாழ்ப்பானம் சிறையில் இருந்த இந்த 50 மீனவர்களும் இன்று காலை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில் கடந்த நவம்பரில் பிடிபட்ட 20 மீனவர்களை மட்டும் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி கஜநீதிபாலன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட மற்ற 30 மீனவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. திரிகோணமலை சிறையில் இருந்து வந்த நாகபட்டினம் மாவட்ட மீனவர்கள் 111 பேர் இன்று மாலை திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் 11ஆம் தேதி நாகை மாவட்டம், அக்கரை பேட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற இவர்கள் அனைவரையும் விடுதலை செய்து திரிகோணமலை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 32 மீனவர்களையும் விடுதலை செய்து திரிகோணமலை நீதிபதி உத்தரவிட்டார்.

##~~##
இதற்கிடையே, ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவச் சங்கத் தலைவர்கள், சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரை இன்று சந்தித்தனர். அவரிடம், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை குறித்தும், மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையினரால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பேசினர்.

அதற்கு இலங்கை தூதர், ''இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தீர்வு காணப்படும். மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு காரணம், இந்தியாவில் பிடிபட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதம் தான் என தெரிவித்தார். மேலும் மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து இலங்கை அரசிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இரா.மோகன்