Published:Updated:

தமிழக மீனவர்கள் விடுதலை தாமதம்: கொழும்பு பேச்சுவார்த்தையில் சிக்கல்!

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் விடுதலை தாமதம்: கொழும்பு பேச்சுவார்த்தையில் சிக்கல்!
தமிழக மீனவர்கள் விடுதலை தாமதம்: கொழும்பு பேச்சுவார்த்தையில் சிக்கல்!
தமிழக மீனவர்கள் விடுதலை தாமதம்: கொழும்பு பேச்சுவார்த்தையில் சிக்கல்!

சென்னை: தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாததால், கொழும்பில் நாளை (13 ஆம் தேதி) இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாக் ஜலசந்தி உள்ளிட்ட சில மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக மீன் பிடிப்பு தொழிலில் பிரச்னைகள் தொடர்கின்றன. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மீனவச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

அதன்படி, இரு நாட்டு மீனவர்கள் கூட்டம் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலக அரங்கில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. அதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை மார்ச் 13 ஆம் தேதி கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரண்டு நாடுகளுமே அறிவித்த பின்னர், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் தொடர்ந்து இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சுமூகமான பேச்சுவார்த்தை நடப்பதற்கு உகந்த சூழ்நிலையை வேண்டுமென்றே கெடுப்பதற்கான முயற்சி இது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 177 தமிழக மீனவர்களையும், அவர்களின் 44 படகுகளையும் விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடைசியாக கடந்த 8 ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்பு இதை அவர் நிபந்தனையாக வைத்திருந்தார்.

ஆனால், இதுவரை தமிழக மீனவர்கள் யாருமே இலங்கையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. எனவே, நாளை பேச்சுவார்த்தை நடக்குமா? அல்லது மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்படுமா? என்ற சந்தேகம் தமிழக மீனவர்களிடையே எழுந்துள்ளது. ஆனாலும், இலங்கை அரசுடன் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பேசி வருகின்றனர். இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை குறித்து தமிழக அரசு அதிகாரியிடம் கேட்டபோது, இதுகுறித்த அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று கூறினார்.