Published:Updated:

தமிழக மீனவர்கள் 166 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு!

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் 166 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு!
தமிழக மீனவர்கள் 166 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு!
தமிழக மீனவர்கள் 166 பேரை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு!

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 116 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாக்ஜலசந்தி பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்திருந்தன. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சென்னையில் நடந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடத்துவது எனவும், இதற்கு ஏதுவாக ஒருமாத காலம் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பை நிறுத்தி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். ஆனால் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படாததால் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இடையிலேயே மீன்பிடிக்க சென்றனர். இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதை தொடர்ந்தது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 177 மீனவர்களும் அவர்களுக்கு சொந்தமான 44 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ளன.

இந்நிலையில், இரு நாட்டு மீனவர்களிடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை இலங்கையில் உள்ள கொழும்புவில் நடக்க உள்ளதாகவும், அதற்கு முன்னதாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்க எடுக்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் வராததால் நாளை நடக்க இருந்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதனிடையே இன்று காலை தமிழக மீனவர்கள் 116 பேரை விடுதலை செய்யுமாறு இலங்கை அரசு அங்குள்ள நீதிமன்றங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனடிப்படையில் இன்று காலை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 41 மீனவர்களை விடுதலை செய்து நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டார். ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் 42 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு நேற்றுடன் சிறைகாவல் முடிந்த நிலையில் 42 மீனவர்களும் இன்று காலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தனர். இந்த நிலையில் இவர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 41 மீனவர்கள் மட்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து ஆஜர்படுத்தப்பட்ட 41 மீனவர்களையும் ஊர்காவல்துறை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இவர்கள் தவிர மேலும் 75 மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது. தமிழக அரசு விடுத்த கோரிக்கையினை தொடர்ந்து சிறையில் இருந்த 177 மீனவர்களில் 116 பேர்களை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவிட்டிருப்பதால் இருநாட்டு மீனவர் இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இரா.மோகன்