Published:Updated:

தமிழக- இலங்கை மீனவர்கள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறி!

விகடன் விமர்சனக்குழு
தமிழக- இலங்கை மீனவர்கள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறி!
தமிழக- இலங்கை மீனவர்கள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறி!
தமிழக- இலங்கை மீனவர்கள் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறி!

ராமநாதபுரம்: கொழும்புவில் நடந்து வரும் தமிழக- இலங்கை மீனவர்களின் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் முதல் நாள் இழுபறியில் முடிந்துள்ளது.

மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீனவர்களை சிறை பிடித்து செல்வதுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து வந்ததும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய-இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி இரு நாட்டு மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் இரு நாட்டு கடற்படையினராலும் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை பரஸ்பரம் விடுவிப்பது, பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படும் வரை எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல கூடாது, தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன் பிடிக்க கூடாது போன்ற தீர்மானங்களுடன் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 13ல் கொழும்புவில் நடப்பதாக இருந்தது. இதனிடையே மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனால், சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்க்பட்டனர். இதன்பின், 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க தமிழக மீனவர் சங்க தலைவர்கள் 17 பேர் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 9 பேர் உள்ளிட்ட 26 பேர் குழு இலங்கை சென்றிருந்தது. இந்த பேச்சுவார்த்தை நேற்று கொழும்புவில் நடந்தது.

நேற்று காலை இலங்கை மீனவர் சங்க தலைவர்கள் மற்றும் இலங்கை மீன்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேர் பங்கேற்ற பேச்சு வார்த்தையில் தமிழக மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை மீனவர்கள் ''தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதையும், தடை செய்யப்பட்ட இழுவலை மூலம் மீன்பிடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தினர். தமிழக மீனவர்களோ, மீன்வளம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஆண்டுக்கு 90 நாட்கள் இலங்கை கடல் பகுதியில்  மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இதற்கு இலங்கை மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்ததை தொடர்ந்து பிற்பகலில் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கியது. இரவு 8 மணி வரை நீடித்த இந்த கூட்டத்திலும் தீர்வு காணப்படாமல் இழுபறி நிலையே நீடித்தது. இருதரப்பு மீனவர்களுமே தங்கள் தரப்பு வாதங்களில் இருந்து இறங்கிவராததால் எவ்வித முடிவும் இன்றி முதல் நாள் பேச்சுவார்த்தை முடிந்தது.

இதனை தொடர்ந்து இருநாட்டு மீனவர்களும் இன்று காலை மீண்டும் சந்தித்து பேச அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த கூட்டதிலாவது பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என தமிழக மீனவர்கள் குழு எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் பங்கேற்க சென்றுள்ள ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசுராஜ் கூறுகையில், ''30 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு சென்றோம்.

பேச்சுவார்த்தையில் நாங்கள் எங்கள் நிலையில் இருந்து எவ்வளவோ இறங்கி வாந்தும் இலங்கை மீனவர்கள் விடாபிடியாக உள்ளனர். இது பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல தடையாக உள்ளது. ஆண்டுக்கு 90 நாட்கள் மட்டுமே எங்களுக்கு அனுமதி தருமாறு கேட்கிறோம். அதேபோல், ரோலர் மடி பயன்பாட்டை நிறுத்த கால அவகாசம் கேட்கிறோம். இதனை ஏற்க மறுக்கும் இலங்கை மீனவர்களின் செயலால், இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது" என்றார்.

இரா.மோகன்