Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

தாவர உலகம்!  

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்திய வரலாற்றின் உருவாக்கத்தில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கை வகித்து இருக்கின்றன. குறுமிளகு, கிராம்பு, அகில் மற்றும் சந்தனம் ஆகியவற்றைத் தேடிவந்த வெளிநாட்டு வணிகர்கள், வாசனைத் திரவியங்களை அள்ளிக் கொண்டுசென்றதுடன், இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ததுதான் கடந்த கால வரலாறு.

இன்று, பலரும் சாப்பிடும்போது உணவில் இருக்கும் மிளகை அலட்சியமாகத் தூக்கி எறிகின்றனர். அவர்களுக்குத் தெரியாது இந்த மிளகுக்காகத்​தான் இந்தியா அடிமைப்படுத்தப்​பட்டது என்பது. வரலாற்றைக் கற்றுக்கொள்ள கல்வெட்டுக்கள் மட்டும் அல்ல, பொங்கலில் போடப்பட்ட மிளகும் உதவக்கூடும்.

இந்திய மக்கள் எந்தத் தாவரங்களைப் புனிதமாகக் கருதினர்? மன்னர்கள் எந்தப் பூக்களை தங்களது அடையாளமாகக்கொண்டனர்? எந்த மரங்கள் மருத்துவ குணம்கொண்டதாக அடையாளப்படுத்தப்பட்டன? எவை ஸ்தல விருட்சங்களாகக் கொண்டாடப்பட்டன? என்பதை எல்லாம் ஆராய்ந்தால், தாவர உலகம் கடந்த காலத்தின் முக்கிய வரலாற்றுச் சாட்சியாக இருப்பதை உணர முடிகிறது.

எனது இந்தியா!

இந்தியா எங்கும் தாவரங்களின் மருத்துவக் குணங்கள் பற்றிய அறிவு, குடும்ப ரகசியம்போலவே பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் தங்களது ரத்த உறவுகளுக்கு மட்டுமே மூலிகைகளை எப்படி அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொடுத்து இருக்கின்றனர். எளிய மனிதர்கள் நோயுறும்போது முறையான மருத்துவம் பெற சாதி ஒரு தடையாக இருந்து இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தியத் தாவரங்களை வகைப்படுத்தி, அதை ஒரு தனித்த அறிவுத் துறையாக மாற்றியவர்கள் டச்சுக்காரர்கள். அந்தப் பணியைத் தொடர்ந்து செய்தவர்கள் போர்த்துக்கீசியர்கள்.

எனது இந்தியா!

டச்சுக்காரர்கள் ஆசிய நாடுகளின் தாவரங்​களை ஆராய்ந்து அதன் வழியே இந்திய மரபு மருத்துவ முறையை தங்கள் வசமாக்கிக்கொள்ள முயன்றனர். அத்துடன், புதிய வாசனைப் பொருளோ அல்லது விற்பனைப் பொருளோ கிடைக்கக்கூடும் என்றும் தேடத் தொடங்கினர். இது, சுயலாப நோக்கம்கொண்ட தேடுதல் என்றாலும், அதன் விளைவாக உருவான அரிய தொகுப்பு முயற்சிகள் இந்தியத் தாவரவியல் உலகுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது என்பதே உண்மை. 'ஹோர்டஸ் மலபாரிகஸ்’ எனப்படும் 12 தொகுதிகள்கொண்ட இந்தியத் தாவரவியல் புத்தகம், டச்சுக்காரர்களால் தயாரிக்கப்பட்டது. 1678-ம் ஆண்டு தொடங்கி 30 ஆண்டுகள் இந்தப் புத்தகத் தொகுப்புப் பணி நடந்து இருக்கிறது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஹென்ரிக் வான் ரேடே என்பவர் மலபார் கவர்னராகப் பணியாற்றிய டச்சுக்காரர். ஒவ்வொரு தொகுதியும் 500 பக்கங்கள் கொண்டது. கேரளாவில் காணப்படும் தாவர இனங்களை வகைப்படுத்தி அழகான சித்திரங்களுடன் லத்தீன் மொழியில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தத் தாவரவியல் தொகுப்புப் பணியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தப் பணியை ஒருங்கிணைத்ததில் ரானா பகத், விநாயக் பண்டிட், அப்பு பகத் மற்றும் இட்டி அச்சுதன் வைத்தியர் ஆகிய நான்கு பேர் முக்கியமானவர்கள். இதில், அச்சுதன் வைத்தியர், ஈழவ வம்சத்தைச் சேர்ந்தவர். இந்தப் புத்தகத்துக்கான ஓவியங்களை வரைந்தவர், கார்மேலிட் மத்தியாஸ் என்ற பாதிரியார். வனப் பகுதியில் இருந்து தேர்வு செய்யப்​பட்டுக் கொண்டுவரப்பட்ட தாவரங்களைப் புகைப்படம் எடுப்பதுபோல அத்தனை துல்லியமாக ஓவியமாக வரைந்து இருக்கிறார் மத்தியாஸ். வரையப்பட்ட தாவர ஓவியங்களின் அடியில் மலையாளத்திலும் கொங்கணியிலும் அதுபற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. அந்தப் பட்டியலை இம்மானுவேல் கமிரோ என்பவர் லத்தீனில் மொழியாக்கம் செய்து இருக்கிறார்.

டச்சு அதிகாரி ஹென்ரிக் வான் ரேடேவுக்கு ஏன் இந்தியத் தாவரங்களின் மீது இத்தனை ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணம், அவருடைய தந்தை நெதர்லாந்தில் வனத் துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். எனவே, சிறுவயது முதலே காட்டில் சுற்றி அலைந்து அரிய தாவரங்கள், விலங்குகளைக் காண்பது ஹென்ரிக்குக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. வணிக முயற்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஹென்ரிக், இலங்கை மற்றும் தூத்துக்குடியில் சேவை செய்த பிறகு, கேரளாவின் மலபார் பகுதிக்கு 1658-ம் ஆண்டு வந்து சேர்ந்தார். அவரது முக்கியப் பணி வாசனைப் பொருட்களை வாங்கி விற்பது என்றாலும், உள்நாட்டு அரசியலில் தலையிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார். அதன் காரணமாக, கொச்சி மன்னருடன் நெருக்கமான நட்புடன் இருந்தார் ஹென்ரிக்.

எனது இந்தியா!

அந்த நாட்களில் மலபார் பகுதியின் வனம் அடர்ந்து செழித்து இருந்தது. பல அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் நிறைந்த மலபார் காட்டுப் பகுதியை ஹென்ரிக் மிகவும் நேசித்தார். குறிப்பாக, மலபார் பகுதியில் விளையும் மஞ்சள் ரோஜாக்கள் அவரது கவனத்தைப் பெரிதும் கவர்ந்தன. இதுபோன்ற ரோஜா மலர்களை அதற்கு முன் அவர் பார்த்ததே இல்லை. மலபார் ரோஜாக்களில் இருந்து எடுக்கப்படும் அத்தர் வாசனை அவரை மிகவும் மயக்கியது. எத்தனை விதமான ரோஜா மலர்கள் மலபார் பகுதியில் இருக்கின்றன என்று தேடி அலைந்து, சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் எனப் பல்வேறு விதமான ரோஜா மலர்கள் இருப்பதைக் கண்டபோது, இவற்றைப் பயன்படுத்தி அத்தர் தயாரித்து ஐரோப்பாவில் விற்பனை செய்யலாமே என்ற எண்ணம் ஹென்ரிக்குக்கு ஏற்பட்டது. அதுவரை துருக்கியில் இருந்தே ஐரோப்பாவுக்கு வாசனைத் திரவியங்கள் வரும். இந்த எண்ணம்தான், காட்டுத் தாவரங்களை முறையாகப் பட்டியலிட வேண்டும் என்ற நோக்கமாக உருமாறியது.

இன்னொரு பக்கம், ஐரோப்பிய மருத்துவ முறைகளைவிட வியப்பளிக்கும் இந்திய மருத்துவ முறைகளையும் அதற்குப் பயன்படும் தாவரங்களையும் பற்றி அறிந்துகொண்ட ஹென்ரிக், எதிர்கால மருத்துவ உலகம் பயன்படுத்திக்கொள்ள ஏற்றபடி தாவர வகைப்பாடு செய்ய வேண்டும் என்று விரும்பினார். மலபார் பகுதியின் கவர்னராகப் பணியாற்றியபோதும், ஹென்ரிக்குக்கு மலையாளம் பேசத் தெரியாது. மொழிபெயர்ப்பாளர்களாகச் செயல்பட்ட துபாஷிகளைக்கொண்டே உள்ளூரை

எனது இந்தியா!

நிர்வாகம் செய்தார். மலபார் பிரதேசம் என்பது கடவுளின் பூந்தோட்டம். அதைக் கவனமாக ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து, முறையாகத் தாவரங்களைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார் ஹென்ரிக். அப்போது அவர் முன் இரண்டு சவால்கள் இருந்தன. ஒன்று, இந்தியாவில் அதுவரை இருந்த தாவரவியல் வகைப்பாடு பெரும்பாலும் அராபிய முறையில் அமைந்து இருந்தது. இன்னொன்று, அந்த வகைப்பாட்டை செய்தவர்கள் உயர் வகுப்புப் பிராமணர்கள்.

ஆனால், மருத்துவத்தைத் தொழிலாகக்கொண்ட வைத்தியர்களை கீழ்சாதியாகக் கருதி அவர்களின் மருத்துவ அறிவை ஒதுக்கியே வைத்திருந்தது மேல்தட்டு வர்க்கம்.  

பாரம்பரியமாக வைத்தியம் செய்துவரும் குடும்பங்கள், படிப்பு அறிவு இல்லாமல் சரியாக மூலிகைகளை அடையாளம் காட்டிவிடுகின்றன. ஆனால், படித்த உயர்தட்டு மக்கள் ஏட்டில் உள்ளதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்களே தவிர, நடைமுறையில் அவர்களால் அதை மருத்துவ முறையாக மாற்ற முடியவில்லை என்பதை ஹென்ரிக் தெளிவாக உணர்ந்தார். ஆகவே, முற்றிலும் வைத்திய மரபில் வந்த ஈழவ சமுதாயத்தினரின் வைத்திய மரபுப்படியே தனது தாவர வகைப்பட்டியல் உருவாக வேண்டும் என்று விரும்பினார். இதனால், அச்சுதன் வைத்தியரை தனது பணிக்கு முக்கிய ஆய்வாளராக நியமித்தார்.

அச்சுதன் வைத்தியரை நியமித்தது தவறு. அவர் கீழ்சாதிக்காரர் என்று எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ஹென்ரிக், அச்சுதன் வைத்தியரின் விசாலமான அறிவையும் மருத்துவத் தேர்ச்சியையும் மனதில் கொண்டு தனது உத்தரவில் உறுதியாக இருந்தார்.

அச்சுதன் வைத்தியர் தன்னிடம் இருந்த பழைய ஏடுகளைக்கொண்டு காட்டில் பறித்து வரப்பட்ட தாவரங்கள் பற்றி தெளிவான தகவல்களைத் தெரிவித்தார். ஆகவே, இந்தத் தாவரவியல் தொகுப்பு, முறையான மருத்துவரின் சான்று பெற்ற புத்தகம் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றது. அச்சுதன் வைத்தியரை டச்சுக்காரர்கள் நெதர்லாந்துக்கே அழைத்துச் சென்றுவிட்டனர். செல்வதற்கு முன் தனது அரிய ஏடுகளை அவர் ஒரு மரப்பெட்டியில் வைத்து உறவினர் ஒருவரிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். பின்னாளில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் அந்த ஏடுகள் எரிந்துவிட்டன என்ற ஒரு தகவல் இன்றும் கூறப்படுகிறது. அச்சுதன் வைத்தியரின் இந்தப் பணியைப் பாராட்டி மலபாரின் ஒரு குறிப்பிட்ட தாவர வகைக்கு அவரது பெயரைச் சூட்டிக் கௌரவப்படுத்தி இருக்கிறார் ஹென்ரிக்.

தாவரவியல் வகைப்பாட்டுக்காக பால் ஹெர்மன் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவை காட்டுக்குள் அனுப்பித் தாவரங்களை கொண்டுவரச்செய்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் நடந்த இந்த ஆய்வுப் பணியின் முடிவில் 1676-ம் ஆண்டு முதல் இரண்டு தொகுப்புகள் லத்தீனில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 1678-ம் ஆண்டு மலபாரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஹென்ரிக், ஹாலந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

-தொடரும் பயணம்...