Published:Updated:

எனது இந்தியா!

எனது இந்தியா!

எனது இந்தியா!

கொடுங்கோல் ஜமீன்தார்கள்  

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1054-ம் ஆண்டு சோழர் காலக் கல்வெட்டு, வீரபுத்திரன் என்பவனின் மனைவி சேந்தன் உமையாள் என்ற பெண் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டதைக் குறிப்பிடு​கிறது. அவளிடம் வரி வாங்கி வந்த அரசு அதிகாரி 'அரசு ஆணைக்கு’ அவளை உட்படுத்தினான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் அவள் நஞ்சு குடித்து இறந்துபோனாள். இதற்குக் காரணமான அரசு அலுவலருக்கு 32 காசுகள் விளக்கு எரிக்க வழங்கும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

வரி வசூலிக்கும்போது, சுடுசொற்களைப் பயன்​படுத்துவதை 'அரவதண்டம்’ என்று சோழர் காலக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர், வெள்ளாளர் வீடுகளில் அரவதண்ட முறையைப் பயன்படுத்தக் கூடாது என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. 'கடமைக்காக’ (வரிக்காக) வெள்​ளாளரைச் சிறைப்பிடிக்கக் கூடாது’ என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனால், ஆதிக்க வகுப்பினரிடம் வரி வாங்குவதில் கடுமை காட்டக் கூடாது என்ற நிலைப்பாடு சோழர் காலத்தில் வழக்கில் இருந்தது புலனாகிறது. ஜமீன்தார் முறை, இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் அறிமுகமானபோதும் வட இந்தியாவில் இருந்த அளவுக்கு தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் எண்ணிக்கை அதிகம் இல்லை. அதிகாரத்திலும் ஆடம்பரத்திலும் மோசமான நடத்தையிலும் வட இந்திய ஜமீன்தார்களே முன்னோடிகளாக இருந்தனர்.

எனது இந்தியா!

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் 'நாயக்கர்’ என்ற படைத் தலைவர் தமிழகத்​தில் நியமிக்கப்பட்டார். விஸ்வநாத நாயக்​கர் தனது ஆட்சிக் காலத்தில் பாஞ்சாலங்​குறிச்சி, சிவகங்கை, எட்டயபுரம் உட்பட 72 பாளையங்களை அங்கீகரித்தார். 'பாலாமு’ என்ற தெலுங்குச் சொல்லில் இருந்துதான் பாளையம் என்ற சொல் உருவானது. 'பாலாமு’ என்றால் 'ராணுவ முகாம்’ எனப் பொருள். பேரரசின் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட்ட பாளையக்காரர்கள் நிலையான ஒரு படையை வைத்திருந்தனர். பாளையங்களில் வரி வசூல் செய்தல், போர்க் காலங்களில் நாயக்கர்களுக்குப் படை உதவியளித்தல் ஆகியவை இவர்களின் முக்கியப் பணி. தமிழகத்தில் இருந்த பாளையங்கள் அளவில் ஒன்றுபோல் இல்லை. சில பாளையங்கள் சிறியதாகவும், சில பெரியதாகவும் இருந்தன. தலைக்கோட்டை யுத்தத்தில் விஜயநகரப் பேரரசு தோற்ற பிறகு, பிஜப்பூர் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது. அப்போதுதான் சமஸ்தானங்கள் உண்டாக்கப்​பட்டன. புதிய ஸ்தானாதிபதிகள் உருவாகினர். அதன் தொடர்ச்சியாகவே, ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டனர். 1799-ல்​தான் சென்னை மாகாணத்தில் ஜமீன்தார் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன்தார்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்று வரையறுக்க முடியாது. சிலர் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குப் பல்வேறு விதங்களிலும் உதவி செய்திருக்கின்றனர். கலை, சமயம் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவி இருக்கின்றனர். ஆனால், பொதுவாக ஜமீன்தார்களின் ஆடம்பர வாழ்க்கைமுறையையும் அவர்களின் வரி வசூல் செய்யும் கடுமையையும் கருத்தில்கொள்ளும்போது ஜமீன்தார்களில் பலரும் கொடுங்கோலர்களாகவே இருந்திருக்கின்றனர்.

தென்னிந்தியாவில் ஜமீன்தார்கள் படிப்பதற்கு என்றே 'நியூட்டன் கல்லூரி’ ஆங்கிலேய அரசால் நிறுவப்பட்டது. அதை, லண்டன் கல்லூரி என்றும் கூறுவார்கள். மில்டன் இதன் முதல்வராகப் பணியாற்றினார். மதுரை மாவட்டத்தில் நிலவிய ஜமீன்தார் முறை குறித்து ஆய்வுசெய்த வர்கீஸ் ஜெயராஜ் தமது ஆய்வு நூலில், வரி வசூலிக்க ஜமீன்தார்கள் மேற்கொண்ட மோசமான வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஐந்து தோல் பட்டைகளைக்கொண்ட சாட்டை ஒன்றால் வெறும் உடம்பில் அடிப்பது. இவ்வாறு அடிப்பதால், அது நிரந்தரமான தழும்பை ஏற்படுத்தும். இந்த சவுக்கடிக்குப் பயந்து மக்கள் வரி செலுத்தினர். அதுபோலவே, தங்களின் ஆட்களைக்கொண்டு வீடுகளில் கொள்ளையடிப்பது, பெண்களைத் தூக்கிச் செல்வது, தானியங்களைத் திருடுவது, எதிர்ப்போரை உயிரோடு எரித்துவிடுவது ஆகியவற்றையும் ஜமீன்தார்கள் செய்திருக்கின்றனர். ஜமீன்தார்களுக்கு ஒவ்வொரு கோயிலிலும் முதல் மரியாதை வழங்கப்பட்டது. நில வரி பாக்​கிக்காக குடியானவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து ஏலம்விட்டனர். ஜமீன்தாரே ஏலத்தில் பங்குகொள்வார். அவருக்குப் பயந்து வேறு யாரும் ஏலம் கேட்க வர மாட்டார்கள். இதனால் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை மதிப்புடைய நிலங்களை ஒரணா (ஆறு காசு) அல்லது இரண்டணாவுக்கு ஜமீன்தாரே ஏலத்தில் எடுத்துக்கொள்வார்.

எனது இந்தியா!

திருவாங்கூர் ஆட்சிப் பகுதியில் வரி கொடாத​வர்கள் காதில் பூட்டுவதற்கென்றே 'இயர்லாக்’ என்ற கருவியை வைத்திருந்தனர். இதை ஒருவனது காதில் பூட்டிவிட்டால், அதன் கனம் தாங்க முடியாமல் காதை இழுத்துத் துன்புறுத்தும். ஒரு கட்டத்தில் பளு தாங்காமல், காது அறுந்துவிடும். இப்படிக் கொடுமைப்படுத்தித்தான் வரி வசூல் செய்திருக்​கின்றனர்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு பரிசோத​னைகளுக்கு முதல் களமாக விளங்கியது வங்காளம். ஆகவே, நவாப்புகளின் ஆட்சியில் இருந்து வங்கா​ளத்தை விடுவித்து ஏகபோக உரிமை கொண்டாடிய கம்பெனி, அதே நவாபுகளின் விசுவாசிகளிடம் வரி வசூல் செய்யும் பணியைத் தர விரும்பவில்லை. ஆகவே, ஜமீன்தாரி முறையை அமல்படுத்தியது. இந்த முறை வங்கத்தில் வெற்றிகரமாகச் செயல்படவே, இந்தியா முழுவதும் அது நடைமுறைக்குக் கொண்டு​வரப்பட்டது.

ஜமீன்தார்கள் தங்களை ராஜா, மகாராஜா, வதேரா, தாக்கூர், சர்தார், மாலிக், சௌத்ரி எனப் பல்வேறு விதமாக அழைத்துக்கொண்டனர். இவர்கள், நில வரி வசூல்செய்வதுடன், உள்ளூர் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தனர். எல்லா ஜமீன்தார்களிடமும் குண்டர் படை ஒன்றும் இருந்தது. அதனால், விவசாயிகளைப் பல்வேறு விதமாகக் கொடுமைப்படுத்தினர். ஜமீன்தார்கள் செய்யும் கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ஆகவே, இந்த விசுவாசிகள், இந்தியாவைவிட்டு பிரிட்டிஷ்காரர்கள் போகக் கூடாது என்று ஆதரவு இயக்கம் நடத்தினர். தங்களின் விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு குடிவிருந்து நடத்தினர். இந்த விசுவாசத்துக்காக ஜமீன்தார்​களுக்கு 'ராவ் பகதூர்’ 'திவான் பகதூர்’ ஆகிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

தார்பங்கா ஜமீன்தார், இந் தியாவிலேயே மிக அதிக வரு வாய் உடையவர். பர்த்வான் ஜமீன்தார், இந்தியாவிலேயே நில வரி வசூல்செய்வதில் முதல் இடம் பெற்றிருந்தார். தார்பங்கா, வட பீகாரில் உள்ளது. அதன் ஜமீன்​தாராக இருந்த மகேஷ் தாக்கூர் தன்னை ஓர் அரசனாகவே கருதி​னார். இவரது ஆளுகையில் 4,495 கிராமங்கள் இருந்தன. தார்பங்கா ஜமீன், 2,400 சதுர மைல் பரப்புடையது. துக்ளக் காலத்திலேயே வடக்கு பீகாரில் தொடர்ந்து குழப்பமும் சண்டை​யும் நீடித்தன. அதைத் தனது இரும்புக் கரம்கொண்டு துக்ளக் ஒடுக்கினார். வடக்கு பீகாரில் மைதிலி பிராமணர்கள் அதிகம் வசித்தனர். அவர்களைப் பயன் படுத்தி நிர்வாகம் செய்யவும், வரிவசூலை முறையாகக் மேற் கொள்ளவும் அக்பர் வழிமுறை ஒன்றை உருவாக்கினார். அதன்படி, பண்டிட் சக்ரவர்த்தி தாக்கூர் என்பவரின் இளைய மகன் மகேஷ் தாக்கூரை, இந்தப் பகுதியின் ஆட்சியாளராக நிய மனம் செய்தார். மகேஷ் தாக்கூரும் அவரது வம்சா வழியினரும் தார்​பங்காவை ஆட்சிசெய்தனர். இவர்கள் மதுபானி அரச குடும்பம் என்றே அழைக்கப்பட்டனர். இவர்கள் மகாராஜா பட்டம் சூடிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது.

தார்பங்கா ஜமீனில் வரி வசூல் செய்ய 7,500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கெடுபிடியாக வசூல் வேட்டை நடத்தினர். தார்பங்கா ஜமீன்தார்கள் மைதிலி பிராமணர்கள் என்ற காரணத்தால், அதீத வைதீக மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர். இவர்களின் அனுமதி பெற்றே எவரும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த இவர்கள், வைரம், வைடூரியம் என வாங்கிக் குவித்ததோடு மற்ற குறுநில மன்னர்களுக்கு கடனுதவி செய்யுமளவு வசதியாகவும் இருந்தனர். 1685-ல் இவர்கள் வரி வசூல் செய்த தொகை ரூ.7,69,287. இது மிகப் பெரிய வருவாய்.

1880-81 ஆண்டுகளில் வங்காளத்தில் 20 ஆயிரம் ஏக்கர்​களுக்கு மேல் வைத்திருந்த ஜமீன்தார்களின் எண்ணிக்கை 500. இவர்கள் மூலம் நில வரியாகப் பெறப்பட்ட தொகை 3,75,41,188. அதாவது, நாலு மில்லியன் பவுண்ட்ஸ்.

தார்பங்கா ஜமீன்தார்​களின் பிள்ளைகள் படிப்பதற்காக லண்டனுக்கு அனுப்பிவைக்கப்​பட்டனர். மேற்கத்தியக் கல்வி​யும் கலாசாரமும் கொண் டவர்களாக வளர்க்கப்பட்ட அவர்கள், பிரிட்டிஷ் அரசின் தீவிர விசுவாசிகளாக செயல் பட்டனர். பின்னாட்களில் இந்திய சுதந்திர எழுச்சி எங்கே தங்களின் அதிகாரத்தைப் பறித்து​விடுமோ என்று அச்சம்​கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல் பட ஆரம்பித்தனர். காங்கிரஸ் மாநாடு நடத்துவதற்கு உதவி செய்தனர். சந்தர்ப்பவாத அரசியலே ஜமீன்தார்களின் பொதுவான வழிமுறையாக இருந்தது.

நேரடி வாரிசுகள்இல்லாமல்​​போன பல ஜமீன்தார்களின் குடும்பங்களில் அடுத்த வாரிசு யார் என்பதற்கு மோதல்களும் வன்முறையும் நடந்தன. இங்கி​லாந்தில் உள்ள ராணியிடம் நியாயம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் சில இன்னமும் நிலுவையில் இருக்கின்றன. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை, அதன் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு, அதாவது 20,945,456 ஏக்கர் நிலம் ஜமீன்தார்களிடம் இருந்தது. 1911-ல் இதன் மூலம் கிடைத்த வருவாய் தொகை, 9,78,3,167 ரூபாய். 1946-ல் ஜமீன்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி, 1948-ல் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. 1950-ம் ஆண்டு ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. ஆனாலும், அது சார்ந்த வழக்குகள், நிலப் பிரச்னைகள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனது இந்தியா!