Published:Updated:

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்கிறார் ராஜபக்சே!

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்கிறார் ராஜபக்சே!
தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்கிறார் ராஜபக்சே!

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கை ரத்து செய்கிறார் ராஜபக்சே!

கடந்த 2011 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லெட், பிரசாத் ஆகிய 5 மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இலங்கை மல்லாஹம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதன்பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கடந்த 30 ஆம் தேதி தமிழக மீனவர்கள் 5 பேர் உள்ளிட்ட 8 மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்து இருந்தது. இதற்காக தமிழக அரசு இந்திய தூதரகத்திற்கு ரூ.20 லட்சத்தை அனுப்பி இருந்தது.

இரு தினங்களுக்கு முன், தூக்கு தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனு இந்திய தூதரக அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுக தொண்டைமானும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து 5 தமிழக மீனவர்களின் தூக்குத் தண்டனையை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்து அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கு ஏதுவாக இந்திய தூதரகத்தால் இலங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று வாபஸ் பெறப்பட உள்ளது. இந்த மனு முறையாக திரும்பப் பெறப்பட்ட பின், 5 மீனவர்களுக்கான தண்டனை ரத்து குறித்த அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்புக்கு பின் சில தினங்களில் விடுவிக்கப்படும் மீனவர்கள் நாடு திரும்புவார்கள் என இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

இலங்கை அதிபர் மாளிகை மறுப்பு!

இதனிடையே, தமிழக மீனவர்கள் 5 பேர் விவகாரத்தில் அரசு எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று இலங்கை அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் மோகன சமரநாயகே தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் சட்ட ரீதியான நடைமுறைகள் அதிகம் உள்ளன என்றும், சட்ட நடைமுறைகளால் 5 பேரின் தண்டனை ரத்து பற்றி தற்போது எதுவும் கூற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இரா.மோகன்