Published:Updated:

காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

Vikatan Correspondent
காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலை!
காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலை!
காரைக்கால் மீனவர்கள் 15 பேர் விடுதலை!

ராமேஸ்வரம்: காரைக்கால் மீனவர்கள் 15 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. அவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நாகப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பின் இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு யாழ்ப்பானம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூன்றாவது முறையாக கடந்த 5 ஆம் தேதி இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை இம்மாதம் 19 ஆம் தேதி வரை சிறை வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரி சிரிபால சேன பதவியேற்றார்.

இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றதை தொடர்ந்து, இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களும் அவர்களுக்கு சொந்தமான படகுகளும் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மீனவர்களின் படகுகள் விடுவிப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என புதிய அதிபரின் செய்தி தொடர்பாளர் அறிவித்திருந்தார்.

இதனிடையே இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 15 பேரும் நேற்று (16 ஆம் தேதி) விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என தெரிகிறது. கடந்த மே மாதம் முதல் இலங்கை கடற்படையினரால் 300 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு வந்தனர். தற்போது  15 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதால், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல், இலங்கை அரசின் பிடியில் உள்ள அனைத்து  படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இரா.மோகன்