Published:Updated:

தொழிலதிபரை மிரட்டியதாக வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன்!

Vikatan Correspondent
தொழிலதிபரை மிரட்டியதாக வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன்!
தொழிலதிபரை மிரட்டியதாக வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன்!
தொழிலதிபரை மிரட்டியதாக வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன்!

சென்னை: தொழிலதிபரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் குறித்து,  தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி நடுரோட்டில் பேட்டி அளித்தார்.

அப்போது அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச்  சேர்ந்த தொழிலதிபர் வீரமணி என்பவர்,  "போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்று கொண்டு பேட்டி கொடுக்கிறீர்களே, ஓரமாக நிற்கக்கூடாதா?" என்று கேட்டதாகவும், இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது டிராபிக் ராமசாமி, தனது காரை உடைத்து தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வேப்பேரி போலீசில் வீரமணி புகார் கொடுத்தார்.

இதையொட்டி டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கடந்த 12ஆம் தேதி  அவரை கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, டிராபிக் ராமசாமி, ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.