Published:Updated:

தமிழக மீனவர்கள் 54 பேர் 10 படகுகளுடன் சிறைபிடிப்பு: இலங்கை மீண்டும் அட்டூழியம்!

Vikatan Correspondent
தமிழக மீனவர்கள் 54 பேர் 10 படகுகளுடன் சிறைபிடிப்பு: இலங்கை மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் 54 பேர் 10 படகுகளுடன் சிறைபிடிப்பு: இலங்கை மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் 54 பேர் 10 படகுகளுடன் சிறைபிடிப்பு: இலங்கை மீண்டும் அட்டூழியம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 54 பேரை, அவர்களின் 10 படகுகளுடன் சிறைபிடித்தும், மீன்பிடி சாதனங்களை நாசம் செய்தும் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினர் தாக்குவதும், அவர்களின் மீன்பிடி சாதனங்களை நாசப்படுத்தி, படகுகளை சிறைபிடித்து செல்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண சென்னையில் வருகின்ற மார்ச் 24, மற்றும் மார்ச் 25 ஆகிய தேதிகளில் இந்திய-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 ஆயிரம் மீனவர்கள் 652 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் நேற்று இரவு 9 மணி அளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று பல முறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதன்பின் அவர்கள், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளில் ஏறி அதில் இருந்த மீனவர்களை தாக்கி உள்ளனர். மேலும், அவர்களின் மீன்பிடி சாதனங்களை வெட்டி நாசப்படுத்தி உள்ளனர். ஜெகன், ரெஜின், மணிவண்ணன், விசுவாசம், அந்தோணியார் அடிமை ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் இருந்த 33 ராமேஸ்வரம் மீனவர்களையும் 5 விசைப்படகுகளையும் சிறைபிடித்து தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் இலங்கை கடற்படையினர்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளன. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 படகுகளையும் அதில் இருந்த 21 மீனவர்களையும் சிறைபிடித்து சென்று காங்கேசன் துறைமுகத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மட்டும் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 54 மீனவர்களையும் அவர்களுக்கு சொந்தமான 10 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.