Published:Updated:

சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

Vikatan Correspondent
சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து 81 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இன்று உடனடியாக தாக்கல் செய்தார்.
 

சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்!

கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தார். இதைத் தொடர்ந்து தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வாதாடினார். நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை அறிவிக்காமலேயே நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த  வழக்கில், இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்ததால், இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்தது, அதில், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது.

மேலும், மனுதாரர் அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை ஏப்ரல் 28க்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வாதத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, அன்பழகன் தரப்பில் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று தாக்கல் செய்தது. 81 பக்கம் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் தாக்கல் செய்தார்.

கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் ரவிவர்மா குமார் நாளை எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்கிறார்.