Published:Updated:

பாப் மார்லே

பாப் மார்லே

பாப் மார்லே
'சாகும்வரை பாடட்டும்'
பாப் மார்லே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாப் மார்லே தனக்கு அமானுஷ்ய சக்தி ஒன்று இருப்பதாக நம்பினான். அது, அவனுடைய தாத்தாவுக்கு இருந்ததுபோன்ற ஒரு மாந்திரீக சக்தி! எதிர்காலத்தில்

பாப் மார்லே

நடக்கப் போகும் சம்பவங்களை முன்கூட்டியே உணர்ந்துகொள்ளக் கூடிய சக்தி..! அப்படித்தான் தன் தாத்தாவின் மரணத்தை முதல் நாளே தெரிந்து கொண்டதாகவும் அவன் நம்பினான். அவன் கனவில் தோன்றிய கெட்ட அறிகுறிகள், அவனுக்கு அந்த சம்பவத்தை உணர்த்தியிருந்தன. அதுபோல் தன்னுடைய முடிவு நெருங்குவதும் மார்லேவுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ. அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலைகளைச் செய்துவிட வேண்டும் என்று அவன் விரும்பினான்.

தூங்குவதே அவனுக்கு குற்றமாகத் தோன்றியது. எஞ்சியிருக்கிற காலத்தை தூக்கத்தில் வீணாக்கிவிட மார்லே விரும்பவில்லை. ஒரு நாளைக்கு அதிக பட்ச மாக மூன்று மணி நேரம்தான் அவன் தூங்கினான். அதைப் பற்றி நண்பர்கள் கேட்டபோது, 'தூங்குவது முட்டாள்கள் தப்பித்துக் கொள்வதற்கு ஒரு வழி!' என்று சிரித்தபடி அவன் பதிலளித்தான்.

1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை... பாப் மார்லேவும், அவன் நண்பன் ஸ்கில்லியும் சென்ட்ரல் பார்க்கில் ஜாகிங் போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது மார்லே வுக்கு முதல் நாள் இரவு நடந்த நிகழ்வுகள் அலை அலையாக நினைவுக்கு வந்தன. முந்தைய நாள் இசை நிகழ்ச்சியை முடித்து விட்டு, நீண்ட

நேரத்துக்குப் பிறகுதான் மார்லே படுத்தான். கொஞ்ச நேரம்தான் தூங்கியிருப்பான். சட்டென்று விழிப்பு வந்துவிட்டது. ஆனால், அவனுக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாமே மறந்து விட்டதுபோல... மூளையை யாரோ துடைத்து எடுத்துவிட்டது போல ஒரே வெறுமை. அவன் மீண்டும் மீண்டும் சிரமப்பட்டு நினைவுபடுத்திப் பார்க்கின்றான். எதுவுமே நினைவுக்கு வரவில்லை. நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு அவன் கொகெய்ன் சாப்பிட்டிருந்தான்.

ஜமைக்காவில் அது தாராளமாகக் கிடைத்தது. சமீப காலமாகத்தான் இந்த மாற்றம். அதற்கு முன்பு ஜமைக் காவில் கஞ்சா மட்டும்தான் கிடைக்கும். கொகெய்னும், ஹெராயினும் அங்கு கிடைக் காது. ஆனால், ஜமைக்காவில் ஆட்சி மாற்றம் நடந்து எட்வர்ட் சேகா பதவியேற்ற பிறகு இந்த இரண்டு போதை வஸ்துகளும் அங்கு தாராளமாகப் புழங்க ஆரம்பித்துவிட்டன. சேகாவுக்கு இந்த போதை மருந்துகளை விற்கும் கும்பலின் ஆதரவு இருந்தது. அவர்கள்தான் ஏராளமாகப் பணம் செலவு செய்து, சேகாவை வெற்றிபெற வைத்திருந்தார்கள். அதற்கு நன்றிக் கடனாக, ஆட்சிக்கு வந்ததும் சேகா போதை மருந்து விற்பனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

ஜமைக்காவில் நிலவிவரும் அரசியல் சூழல் மார்லேவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. வேலையில்லாத இளைஞர்களின் கூட்டம் மேலும் மேலும் பெருகி வந்தது. வறுமை தன்னுடைய விஷக் கரங்களை எல்லாப் பக்கமும் விரித்து வந்தது. ஜமைக்காவின் நிலையை மாற்றுவதற்கு தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் ஒரு புறம் மார்லேவை தின்று கொண்டு இருந்தது. ஜமைக்காவைப் பற்றியும், முந்தைய நாள் தனக்கு நேர்ந்த இனம் புரியாத அனுபவத்தைப் பற்றியும் எண்ணியபடியே ஓடிக்கொண்டிருந்தான் மார்லே. சட்டென்று அவனுடைய உடல் குளிர்ந்து உறைந்து போவது போல் ஓர் உணர்வு. தன்னோடு வந்த ஸ்கில்லியிடம் எதையோ சொல்வதற்கு மார்லே முயற் சித்தான். ஆனால், அவனால் தன்னுடைய கழுத்தைத் திருப்பவோ, வாயைத் திறந்து பேசவோ முடியவில்லை. கால்களும் மரத்துப் போய்விட்டன. அவனுக்கு அது வரைதான் உணர்ச்சி இருந்தது. அதன் பிறகு கீழே விழுந்ததோ, மயங்கிக் கிடந்ததோ தெரியவில்லை!

பாப் மார்லே திடீரென்று மயங்கி விழுந்ததைப் பார்த்து, ஸ்கில்லி பெரிதும் அதிர்ந் தான். உடனே அவனைத் தூக்கிக் கொண்டு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஓடினான். அங்கே மார்லேவை கிடத்தி, முதலுதவிகள் செய்யப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக மார்லேவுக்கு உணர்வு திரும்பியது. மறுநாள் பிட்ஸ்பர்க் என்னுமிடத்தில் அவர்களுடைய இசை நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. மார்லேவின் உடல் நிலை இப்படி இருக்கும்போது அந்த நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்று எல்லோருக்கும் சந்தேகம். ஆனால், மார்லேவோ, நாளைய நிகழ்ச்சி நடப்பதில் எந்தவொரு மாற்றமும் கிடையாது என்று உறுதியாகக் கூறிவிட்டான். மார்லே மயங்கி விழுந்ததோ, மறு நாள் நிகழ்ச்சி பற்றி எடுக்கப்பட்ட முடிவுகளோ ரீட்டாவுக்குத் தெரியாது. அவளிடம் அதைச் சொல்ல வேண்டாமென்று மார்லே, எல்லோரையும் தடுத்துவிட்டான். அவள் அப்போது வேறொரு ஹோட்டலில் தங்கியிருந்தாள்.

ரீட்டா எப்போதும் மார்லே தங்கியிருக்கும் ஹோட்டலில்தான் தங்குவாள். அவனுக்கு வேறு பெண்களோடு பழக்கம் இருந்த நேரங் களில் கூட அவள், அவனை விட்டுப் பிரிந்தது கிடையாது. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, அவனுடைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது என்று ஒரு பெர்சனல் செக்ரெட் டரியைப் போலத்தான் ரீட்டா எப்போதும் நடந்து கொள்வாள். ஆனால், இந்த டூரின்போது மட்டுமே அவளுக்குக் குழுவிலிருக்கும் மற்ற பெண்கள் தங்கியுள்ள ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டது. ஏன் இந்த மாற்றம் என்பது ரீட்டாவுக்கு

பாப் மார்லே

புரியவில்லை. மார்லே தனியாக இருக்க விரும்புகிறான் என்று மட்டுமே அவளிடம் கூறப்பட்டிருந்தது. மனசுக்குள் புழுங்கினாலும் ரீட்டா தன்னுடைய அதிருப்தியை வெளியே காட்டிக்கொள்ளாமல் இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தாள்.

அன்று மாலையில், முந்தைய நாள் இசை நிகழ்ச்சிக் கான பணம் மார்லேவுக்கு வழங்கப்பட்டது. படுக்கையில் சோர்ந்து கிடந்த மார்லே, மெள்ள எழுந்து உட்கார்ந்தான். சாய்ந்து கொள்ள வாகாகத் தலையணையை யாரோ எடுத்து வைத்தார்கள். அறை முழுவதும் அவனுடைய இசைக் குழுவைச் சார்ந்தவர்கள், ரசிகர்கள் எனக் கூட்டம் நிரம்பி இருந்தது. அந்தப் பணத்தை மார்லே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். இந்தப் பணத்தால் தனக்கு என்ன ஆகப்போகிறது என்று அவனுக்குத் தோன்றியது.

முன்பு ஒரு காலத்தில்... நிறைய சம்பாதிக்க வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்றெல்லாம் அவ னுக்குள் ஆசைகள் நிறைந்திருந்தன. ஆனால், இப்போது மார்லேவைப் பொறுத்த வரை பணம் என்பது வெறும் காகிதம் மட்டும்தான். அந்தத் தொகை முழுவதையும் எடுத்து அவன் குழுவைச் சேர்ந்த யாரோ ஒருத்தரிடம் கொடுத்தான் மார்லே.

''எனக்கு களைப்பாக இருக்கிறது. நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும்...'' என்று மார்லே மெல்லிய குரலில் கூறினான். ஆனால், அறையின் உள்ளே நெரித்துக் கொண்டு நின்றிருந்த ரசிகர்களோ அங்கிருந்து போக மறுத்தார்கள். இசைக் குழுவின் உறுப்பினர்கள் அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகுதான் அந்த அறை காலியானது. மார்லேவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு எல்லோரும் வேறு அறைகளுக்குப் போனார்கள்.

திங்கட்கிழமை மாலை பிட்ஸ்பர்க் நகருக்கு மார்லேவின் குழு வந்து சேர்ந்தது. தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்குப் போன ரீட்டா மார்லே எங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டாள். அப்போதுதான் அவன் ஹோட்டலில் இல்லை என்ற விஷயம் ரீட்டாவுக்கு தெரிந்தது. மார்லே டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறான் என்று ரீட்டாவுக்கு சொன்னார்கள். அவன் பிட்ஸ்பர்க்குக்கு இன்னும் வந்து சேர வில்லை. நியூயார்க்கில் இருக்கிறான் என்று தெரியவந்தபோது, ரீட்டா பதறிப் போனாள். அவனுக்கு என்ன ஆனது என்று பல முறை விசாரித்த பிறகுதான் அவனுக்கு மாரடைப்பு வந்த விஷயம் அவளுக்குச் சொல்லப்பட்டது. ரீட்டாவுக்கு உடனே மார்லேவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், அவள் அவனைத் தேடி செல்கிற வேளையில், அவன் இங்கே வந்துவிட்டால் என்ன செய்வது என்ற குழப்பம். ரீட்டா எதுவும் புரியாமல் திகைத்துப்போனாள். அன்றிரவு அவளால் தூங்கமுடியவில்லை!

ரீட்டா எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை. அவளுக்கு ஒரு கனவு. அந்தக் கனவில் பாப் மார்லே வருகி றான். மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளைப் போல அவன் உடை அணிந்திருக்கிறான். அவனுடைய அடையாளமாக இருந்து வந்த சடை முடியைக் காணவில்லை. ஒரு முள்வேலி போடப்பட்டிருக்கிறது. அதற்கு மறுபுறத்தி லிருந்து ரீட்டா அவனை நோக்கிக் கூவுகிறாள்.

''பாப் உனக்கு என்னவாயிற்று?''

''எனக்கு உடல்நிலை சரியில்லை!'' என்கிறான் மார்லே.

''உனக்கு எதுவுமில்லை. நான் உன்னை இங்கிருந்து அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறேன்...'' என்கிறாள் ரீட்டா.

சட்டென்று விழிப்பு வந்துவிட்டது. அந்தக் கனவை நினைத்து ரீட்டா வாய் விட்டு அழுகிறாள். மார்லேவுக்கு ஏதோ ஆகப்போகிறது என்று அவளின் உள்ளுணர்வு கூறுகிறது.

செவ்வாய்க் கிழமை காலையில் பிட்ஸ்பர்க்குக்கு வந்து சேர்ந்து விட்டான் மார்லே. ரீட்டா அவனை வரவேற்கத் தவிப்போடு நின்று கொண்டிருந்தாள். மார்லேவைப் பார்த்தபோது அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவனுடைய தோற்றம் மாறியிருந்தது. அவன் முகம் களைப்பில் வற்றி, கண்கள் ஒளியிழந்து குன்றிப்போயிருந்தன. குரல் கம்மியிருந்தது. ரீட்டாவுக்கு பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ''பாப் உனக்கு என்ன ஆனது? டாக்டர் என்ன சொன்னார்?'' என்று கேட்டாள் ரீட்டா.

''எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறதாம்...'' என்று எந்தவித உணர்வும் இல்லாமல் பதிலளித்தான் மார்லே.

''உடனடியாக நாம் இந்த டூரைகேன்சல் செய்து விடலாம் மார்லே...'' என்று அழுகையினூடே மார்லேவிடம் சொன்னாள் ரீட்டா. ஆனால், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏஜென்சி டூரை கேன்சல் பண்ணமுடியாது, அப்படிச் செய்தால் ஏராளமான நஷ்டம் ஏற்படும் என்று மறுத்துவிட்டதாக மார்லே தெரிவித்தான். உடனே ரீட்டா, மார்லேவின் அம்மாவுக்கு போன் செய்தாள். மார்லேவின் வக்கீலுக்கும் போன் செய்து அவரிடம் விவரங்களைக் கூறினாள். எப்படி யாவது இந்த டூரை ரத்து செய்துவிட வேண்டும். மார்லேவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ரீட்டாவின் ஒரே எண்ணமாக இருந்தது.

ரீட்டாவின் உணர்வுகளை யாரும் புரிந்துகொண்டது போல் தெரியவில்லை. மார்லேவின் குழுவில் இருந்தவர்கள்கூட வழக்கம் போலவே இயல்பாக இருந்தார்கள். அது அவளுக்கு ஆத்திரத்தை மூட்டியது. அன்றிரவு பிட்ஸ்பர்க்கில் திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உற்சாக மான பாடல்களைக் கூட ரீட்டா அழுது கொண்டேதான் பாடினாள். ஆனால், மார்லே எப்போதும் போல நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தான். கடுமையான நோயால் தாக்கப்பட்ட நிலையிலும்கூட மார்லேவின் பாடல்கள் வழக்கம் போலவே பீறிட்டு வந்தன. நிகழ்ச்சி முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஸ்கில்லி ரீட்டாவிடம் சொன்னான். 'ரீட்டா! இந்த டூரை நாம் கேன்சல் செய்ய வேண்டாம். மார்லே தன்னுடைய நிகழ்ச்சிகளை நடத்தட்டும். எப்படி யிருந்தாலும் அவன் சாகப்போவது உறுதி. அதுவரை அவன் பாடிக்கொண்டிருக்கட்டும்'.

ஸ்கில்லியின் வார்த்தைகளைக் கேட்டபோது ரீட்டா வுக்கு தன் காலடியில் இருந்த மேடை நழுவுவதுபோல் இருந்தது. மேடை மீது அளவற்ற வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருந்த விளக்குகள் யாவும் அணைந்து மேடையே இருண்டு விட்டது போல தோன்றியது. மார்லே மறையப் போகிறான் என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை!

(இசை அதிரும்...)