Published:Updated:

கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

Vikatan Correspondent
கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது
கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சேஷசமுத்திரம் பகுதியில் கோவில் திருவிழா கொண்டாடுவதில்  இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.நரேந்திரன் நாயர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

மோதலின் போது 6 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியி்ல ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இப்பகுதியி்ல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ள்ளது.கலவரம் தொடர்பாக 20 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முன்னதாக கலவரத்தைக் கட்டுப்படுத்த, போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அப்போது  கலவர கும்பல், எஸ்.பி., மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தையடுத்த , சேஷசமுத்திரம் கிராமத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. அப்போது, தேர் திருவிழா நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த, இரு ஆண்டுகளாகத் தேர் திருவிழா நடைபெறவில்லை.

கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

இந்தாண்டு, நாளை(17.08.2015)  தேர் திருவிழாவிற்கு ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்தனர். இதையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஆர்.டி.ஓ., தலைமையிலும், சங்கராபுரத்தில் தாசில்தார் தலைமையிலும் அமைதி கூட்டம் நடந்தது.போலீஸ் பாதுகாப்போடு தேர் திருவிழா நடத்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு 8  மணிக்கு, சேஷசமுத்திரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர், அலங்கரிக்கப்பட்டு இருந்தது.அங்கு திடீரென வந்த ஒரு தரப்பினர், தேர் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் தேர் பற்றி எரிந்தது. கோவிலுக்கு அருகிலிருந்த, ஐந்து கூரை வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், வீடுகளும் தீயில் சேதமாயின.

செய்தியறிந்த விழுப்புரம் எஸ்.பி., நரேந்திரன் நாயர் மற்றும் அதிரடிப்படை போலீசார் சேஷசமுத்திரம் கிராமத்திற்கு வந்தனர். அப்போது, அங்கிருந்த சிலர் போலீசார் மீது பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசினர்.இதில், எஸ்.பி., நரேந்திரன் நாயர் மீது பெட்ரோல் குண்டு விழுந்ததால் அவரது பேண்ட், சட்டை தீப்பிடித்து எரிந்தது.

கள்ளக்குறிச்சி அருகே நடந்த கலவரம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

உடனிருந்த போலீசார், எஸ்.பி. மீது பற்றிய தீயை அணைத்தனர். மேலும், 10க்கும் மேற்பட்ட போலீசார் கல்வீச்சில் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர்.தொடர்ந்து, தீயணைப்பு வாகனங்கள் மீதும் பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசியதால் வாகனங்கள் உள்ளே செல்ல வழியின்றி பாதி வழியிலே நின்றன.

கலவரக்கும்பல் கைகளில் ஆயுதங்களோடு போலீசாரை தாக்க கூடினர்.இரவு நேரம் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது.சேஷசமுத்திரம் அருகில் உள்ள கிராம மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

நிலைமை மோசமானதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகே நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சேஷசமுத்திரம் கிராமம் இருளில் மூழ்கியது. கலவர பூமியாக மாறியுள்ள சேஷசமுத்திரத்தில், எஸ்.பி., நரேந்திரன் நாயர் தலைமையில் ஆயிரக் கணக்கான போலீஸார்  தீவிர பாதுகாப்புப்  பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோதலால் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

படங்கள்:சிலம்பரசன்