Published:Updated:

தொடர்ந்து 3வது நாளாக தமிழக மீனவர்கள் கைது: நிறுத்தப்படுமா இலங்கை ராணுவத்தின் அட்டூழியம்?

தொடர்ந்து 3வது நாளாக தமிழக மீனவர்கள் கைது: நிறுத்தப்படுமா இலங்கை ராணுவத்தின் அட்டூழியம்?
தொடர்ந்து 3வது நாளாக தமிழக மீனவர்கள் கைது: நிறுத்தப்படுமா இலங்கை ராணுவத்தின் அட்டூழியம்?

ராமேஸ்வரம்: தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 4 பேரை இலங்கை ராணுவத்தின் கைது செய்துள்ளனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் கடல் வளத்தை அதிகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் துவங்கும் இந்த தடை காலம் மே 29-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடையும். இந்த ஆண்டுக்கான தடை மே மாதம் 29-ம் நள்ளிரவுடன் முடிந்த நிலையில், 30-ம் தேதி அதிகாலை முதல் தமிழக மீனவர்க்ள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே ராமேஸ்வரத்தை சேர்ந்த சேசு இருதயம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். கடற்படையினரின் விசாரணைக்கு பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தற்போது வவுனியா சிறையில் உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதேபோல், ராமேஸ்வரத்தில் அவசர கூட்டம் நடத்திய மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், சுமார் 99 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் இம்மாதம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், தடைகாலம் முடிந்து 2-வது நாளான கடந்த 2-ம் தேதி மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை  சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.

இந்நிலையில், மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (5-ம் தேதி) அதிகாலை சிறை பிடித்து சென்றுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று (4-ம் தேதி) நள்ளிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததுடன் வலைகளையும் வெட்டி கடலில் வீசி எறிந்தனர். மேலும், தங்களிடம் சிககிய ஒரு படகையும் அதில் இருந்த 4 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றனர். சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மீன்பிடி தடை காலமான 45 நாட்கள் முடிந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை தொடர்ந்து 3-வது முறையாக சிறைபிடித்து சென்றுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய மீனவர்கள் ‘‘நாடு நாடாக செல்லும் பிரதமர் மோடி தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிககைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் இந்தியாவின் எச்சரிக்கையினை கண்டுகொள்ளாமல் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறை பிடித்து செல்கின்றனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ள நிலையில், சுமார் 25 கோடி மதிப்பிலான படகுகளை இழந்து மீனவர்கள் தவித்து வருகின்றனர். மத்திய அரசு இப்பிரச்னையில் உடனடியாக கவனம் செலுத்தி மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் மீட்டு தர வேண்டும்’’ என்றனர்.

-இரா.மோகன்