Published:Updated:

பொதுத்துறை துணை வங்கிகளை இணைப்பது இவர்களுக்காகத்தானா...? அதிரவைக்கும் அருண்ஜெட்லி

பொதுத்துறை துணை வங்கிகளை இணைப்பது இவர்களுக்காகத்தானா...? அதிரவைக்கும் அருண்ஜெட்லி
பொதுத்துறை துணை வங்கிகளை இணைப்பது இவர்களுக்காகத்தானா...? அதிரவைக்கும் அருண்ஜெட்லி

பொதுத்துறை துணை வங்கிகளை இணைப்பது இவர்களுக்காகத்தானா...? அதிரவைக்கும் அருண்ஜெட்லி

பொதுத் துறை வங்கிகளின் துணை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 'சாதாரண மக்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம் தனியார் வங்கிகளை ஊக்குவித்து பொதுத்துறை வங்கிகளை இழுத்து மூடும் முடிவில் அரசு செயல்படுகிறது' எனக் கொந்தளிக்கின்றனர் வங்கி ஊழியர் சங்கங்கள்.

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் துணை வங்கிகளை ஒருங்கிணைப்பது என மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக, ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்ப் ஆஃப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகியவற்றை ஒரே ஸ்டேட் வங்கியாக மாற்றுவது என முடிவெடுத்தது. இதுபற்றி 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கியான் சங்கம்-2 என்ற வங்கித் தலைவர்களின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவுக்குப் பின்னர், ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளின் இயக்குநர் குழுவும்,  2016 மே மாதம் 17-ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைப்பது என முடிவெடுத்தன. இந்த முடிவுக்கு, கடந்த 15-ம் தேதி மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனமும் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அரசின் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், " வங்கிகளை இணைத்து மிகப் பெரிய வங்கிகளை உருவாக்குவது சாதாரண மக்களின் நலனுக்கு எதிரானது என்பது சர்வதேச அளவில் கிடைத்துள்ள அனுபவம். இந்த அனுபவத்தில் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. 'பெரிய வங்கிகள் ஏழை, எளிய மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றன' என ரிசர்வ் வங்கியின் அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வங்கிகள் இணைக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான கிளைகள் மூடப்படும். கேரளாவில் மட்டும் 600 வங்கிக் கிளைகள் மூடப்பட இருக்கின்றன. ஐம்பதாயிரம் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாற்று வங்கியில் வேலை வழங்கப்பட்டால், மூன்று வருட சர்வீஸ் துண்டிக்கப்பட்டுவிடும். வாடிக்கையாளர் சேவை மையம் கடுமையாக பாதிக்கப்படும். வங்கிகளை இணைத்து போட்டியை உருவாக்குகிறோம் என்று சொல்லிக் கொண்டே, சிறிய தனியார் வங்கிகளையும் புதிய தனியார் வங்கிகளையும் துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கிறது.

வளர்ந்த நாடுகளிலும், பிரிக்ஸ் நாடுகளிலும் ஒரு லட்சம் நபர்களுக்கு நாற்பது வங்கிக் கிளைகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களுக்கு ஏழு வங்கிக் கிளைகள் மட்டுமே உள்ளன. வங்கிக் கடன் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. எனவே, தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக்கி கிராமப்புற, அரை நகர்ப்புறங்களில் ஏராளமான கிளைகளைத் திறந்து சாதாரண மக்களுக்கு சேவையை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. வங்கிகளை இணைத்து ஒரே வங்கியாக மாற்றிவிட்டு, பின்னர் அதை தனியார் கையில் தாரைவார்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கையைப் பார்க்கிறோம். இந்த நிலையில், வங்கிகளை இணைக்கும் முயற்சி மக்களுக்கு விரோதமானது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஜூலை 29ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் பத்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்க இருக்கின்றனர்" என்றார் கொந்தளிப்போடு.

ஏற்கெனவே  விவசாயக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை வழங்குவதில் வங்கி அதிகாரிகள் காட்டும் பாரபட்சத்தால் விவசாயிகளும் ஏழை மாணவர்களும் பெரிதும் பாதிப்படைகின்றனர். ஆனால், மிகப் பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் வங்கிக் கடன்களை ஏய்ப்பது குறித்து அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. மேடையில் மட்டும், ' இந்திய பொதுத் துறை வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது' என்கிறார் ஜெட்லி. இதில், ' வங்கிகளைக் குறைக்கும் அரசின் முடிவால் தற்கொலை விகிதங்கள் அதிகமாவதற்கே வாய்ப்பு அதிகம்' என்கின்றன  வங்கி ஊழியர் சங்கங்கள்.

-ஆ.விஜயானந்த்

அடுத்த கட்டுரைக்கு