Published:Updated:

உச்சநீதிமன்ற உத்தரவு... கர்நாடகாவில் பதற்றம்!

உச்சநீதிமன்ற உத்தரவு... கர்நாடகாவில் பதற்றம்!
உச்சநீதிமன்ற உத்தரவு... கர்நாடகாவில் பதற்றம்!

உச்சநீதிமன்ற உத்தரவு... கர்நாடகாவில் பதற்றம்!

சென்னை: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டத்தன் எதிரொலியாக, கர்நாடக மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பேருந்துகள் இரு மாநில எல்லையுடன் நிறுத்தப்படுவதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு கடந்த 23-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில், "நடப்பு பாசன ஆண்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு தரவேண்டிய மீதமுள்ள 50.052 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இரு மாநிலங்களும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். ‘வாழு, வாழ விடு’ என்ற அடிப்படையில் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு கர்நாடகம் கட்டுப்பட வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் இல்லையென்றாலும் கர்நாடகம் நல்லிணக்க அடிப்படையில் செயல்பட்டு, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க முயற்சிக்க வேண்டும். இது குறித்து மூத்த வழக்கறஞர் பாலி நாரிமன் கர்நாடகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்" என்று அறிவுறுத்தினர்.

இதனிடையே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும் என்றும், தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும் என்றும், இரு மாநில நிலைமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை காவிரி கண்காணிப்புக் குழு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற 16-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து, கர்நாடக விவசாயிகள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். கர்நாடக மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பிற்பகல் முதல் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக அரசு பேருந்துகள், கொளத்தூர் அருகே உள்ள பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள், பாலாறு சோதனைசாவடியில் இருந்து கர்நாடக மாநில அரசு பேருந்துகள் மூலமாகவும், தற்காலிகமாக இயக்கப்பட்ட வேன்கள் மூலமாகவும் மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூருக்கு சென்றனர். இதேபோல், கர்நாடக அரசு பேருந்துகளும் பாலாறு சோதனைச்சாவடியுடன் நிறுத்தப்பட்டன. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.

மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, பழனி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூரு, மைசூரு, கொள்ளேகால், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் அனைத்தும் நேற்று முதல் இயக்கப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப்படும் கர்நாடக அரசு பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

எப்போது தமிழக அரசு பேருந்துகள், சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் பகுதியில் 12 கிலோ மீட்டர் சென்று மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள தாளவாடியை சென்றடையும். ஆனால் நேற்று சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் சென்று அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள தலமலை வழியாக தாளவாடியை சென்றடைந்தன.

சேலம் வழியாக பெங்களூரு, மைசூருக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், ஓசூர் வரை மட்டும் இயக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்லும் தமிழக வாகனங்கள் எதையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல் கர்நாடகாவில் இருந்தும் தமிழகத்துக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு காரணமாக போலீசாரின் இந்த நடவடிக்கையால், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார்கள்

இந்நிலையில், "அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை கர்நாடக மக்களும், விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும்" என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு