Published:Updated:

“உழைச்சு சாப்பிடணும்னு கடலுக்குப் போனது தப்பாய்யா?!’ - பிரிட்ஜோ அம்மா மேரி #SaveFisherman #Rameswaram

Vikatan Correspondent
“உழைச்சு சாப்பிடணும்னு கடலுக்குப் போனது தப்பாய்யா?!’ - பிரிட்ஜோ அம்மா மேரி #SaveFisherman #Rameswaram
“உழைச்சு சாப்பிடணும்னு கடலுக்குப் போனது தப்பாய்யா?!’ - பிரிட்ஜோ அம்மா மேரி #SaveFisherman #Rameswaram

ழ்கடலின் அமைதிக்கு நடுவே ஆழி பேரலை போல் ஆவேசத்தோடு எழுகிறது அந்த குரல் ‘‘என் புள்ள  பிரிட்ஜோக்கு இன்னொரு தாயா இருக்குற கடலம்மா... உன்னை நம்பித்தானே என் மகன அனுப்புனேன். இப்ப அவன பொணமா கொண்டு வந்து கொடுத்துட்டியே..’’ 

இலங்கை கடற்படையினரின் கொடூர கொலை வெறிக்கு பலியான 21 வயதே ஆன மீனவர் 'பிரிட்ஜோ' தாய் மேரியின் குரல்தான் அது.

கடந்த 6-ம் தேதி மாலை, ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார் மீனவர் பிரிட்ஜோ. அன்று இரவு கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மீனவர் பிரிட்ஜோவின் கழுத்தின் பின்புறம் குண்டு பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரிட்ஜோவுக்கு இந்திய கடற்படையினரின் உதவி கிட்டாததால் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மீனவரான சரோன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலியாகியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனது பாச மகனை பறிகொடுத்த துக்கத்திலும்... தன் பிள்ளைக்கு நேர்ந்த கதி இனி எந்தப் பிள்ளைக்கும் நடக்கக்கூடாது என்பதற்காக ஆற்ற அடங்கா சோகத்துடன் போராட்டக் களத்தில் பங்கேற்றிருக்கிறார் பிரிட்ஜோவின் தாய் பெர்பத் மேரி. 

‘‘காலங்காலமா மீன்பிடிக்கிற தொழில்தான் எங்களுக்கு கொலசாமிங்க. எங்களுக்கு வேற தொழில் தெரியாது. சொந்தமாப் படகு இல்லாததால கூலிக்குதான் மீன் பிடிக்க போனான் என் புள்ள. எனக்கு 6 குழந்தைங்கய்யா. பிரிட்ஜோ 4வதா பொறந்தவன். அவனுக்கு மூத்த 3 பேருல, ஒருத்தன் உழைக்க முடியாத நிலையில இருக்கான். மத்த 2 பேரும் கேரளாவுக்குப் போய் தங்கியிருந்து மீன்பிடி கூலிகளா வேலை செய்யுறாங்க. அவங்க கொண்டுவர்ற வருமானம் குடும்பம் நடத்த போதுமானதா இல்ல. அப்பதான் ‘நான் இருக்கேம்மா. காலம் பூரா ஒன்ன வச்சு கஞ்சி ஊத்துவேன். நான் படிக்காட்டியும், தம்பி தங்கச்சிய நல்லா படிக்க வைப்பேம்மா  கவலைப்படாத’னு சொல்லிட்டு கடலுக்குப் போயிட்டு இருந்தான் பிரிட்ஜோ. 

எல்லாப் புள்ளைகளையும் விட அவனுக்கு என் மேல பாசம் அதிகம். அதனால ஓடியாடி துள்ளி திரிய வேண்டிய 20 வயசுலேயே கடலுக்கு மீன்பிடிக்க போறேன்னு சொல்லிட்டு குடும்ப பொறுப்பை ஏத்துகிட்டான். 

 2 நாளா கடுமையா மழை பேஞ்சது. எங்க வீட்டுக் கூரை ஓட்டையா இருந்ததாலா, பெஞ்ச மழையில வீடெல்லாம் ஒழுக ஆரம்பிச்சிருச்சு. மறுநாள் காலையில ‘கடலுக்குப் போயிட்டு வந்துர்றேன். புது கிடுகு வாங்கி வீட்டை மேஞ்ச்சிறாலாம்மா’ ன்னு சொல்லிட்டு போனவன இப்ப உசுருல்லா உடம்பா வந்துகிடக்கான். மீன் பிடிக்கிறத தவற எங்க மக்க என்ன குத்தம் செஞ்சாங்க. ஏன் இப்படி... எங்க மக்கள விடாம துரத்துறாங்க. நாங்க யாரோட பாவத்துலயும் விழலலியே. அடுத்தவங்க பணத்துக்கோ, பொருளுக்கோ ஆசைப்படமா, சொந்த உழைப்பை மட்டுமே நம்பி கடலுக்கு போய் மீன் பிடிக்கிறது தப்பான வேலைய்யா சொல்லுங்க'' என்று பெரும் குரலெடுத்து அழுகிறவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளை தேடுகிறது கடல்...  

தொடர்ந்து பேசிய மேரி ‘‘30 வருஷத்துக்கு மேலா மீன்பிடிக்க கடலுக்குப் போற எங்க ஜனங்க, ஒவ்வொரு நாளுமே பயத்தோடதான் மீன்பிடிக்கப் போறாங்க. நடுக்கடல்ல மீன்பிடிக்கிற வலைகளை மட்டுமே வச்சுகிட்டு, அந்த கடலம்மா துணையா இருப்பாங்குற நம்பிக்கையோட மீன்பிடிக்கப் போற எங்கள, இலங்கை கடற்படைக்காரங்க அடிக்கிறதும், பிடிச்சுட்டுப் போய் சிறையில அடைக்கிறதும், எங்க வாழ்க்கைக்கு ஆதாரமான படக பிடிச்சுட்டு போறதுமா இருக்காங்க. இதனாலேயே தெனம் தெனம் செய்த்துப் பொழச்சி வாழுறோம் சாமி...  அடிபட்டாலும், பிடிபட்டாலும், கடல விட்டா வேறு கதி தெரியாத நாங்க, மறுபடி மறுபடி மீன்பிடிக்கத்தான் போக வேண்டியிருக்கு. கொஞ்ச காலமா உசுருக்கு பயம் இல்லைங்கிறதால எல்லாத்தையும் தாங்கிகிட்டு மீன்பிடிக்க போனாங்க. என் மகனுக்கு ஏற்பட்ட கதிக்கு அப்புறம்,  இப்ப எங்க கிட்ட இருந்த அந்த கொஞ்ச நம்பிக்கையும் போயிருச்சு. இனி நாங்க வாழ்றதுக்கு என்ன செய்யுறது என்ற வழி தெரியாம தவிச்சுகிடக்கோம். 

இனியும் அது நடக்கக் கூடாதுங்க. அதான் பெத்த வயிறு தவிச்சுக் கெடந்தாலும் இதுக்கு முற்றுப் புள்ளி வைக்கனும்னு போராட்டத்துல கலந்துக்க வந்துட்டேன். என் வீட்டுக்கு நடந்த இழப்பு கடைசியா இருக்கட்டு. இனி ஒரு அம்மாவும் எனன் மாதிரி பரிதவிச்சுப் போய் நிக்க கூடாதுய்யா... அந்த உறுதிய கவர்மென்டு தர்ற வரைக்கும் எம்மவன் உடல வாங்கப் போறதில்ல" என்று உறுதியாக கண்ணீர் மல்க பேசுகிறார் மேரி.

ஆறாக்காயத்தின் வலிகளுக்கு ஆட்சியாளர்களே பதில் சொல்ல வேண்டும்...

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி.