Published:Updated:

3 ஆண்டுகளாக 100% தேர்ச்சி! அரசு பள்ளி ஆசிரியர்களை கெளரவித்த கிராம மக்கள்

பாலமுருகன். தெ
3 ஆண்டுகளாக 100% தேர்ச்சி! அரசு பள்ளி ஆசிரியர்களை கெளரவித்த கிராம மக்கள்
3 ஆண்டுகளாக 100% தேர்ச்சி! அரசு பள்ளி ஆசிரியர்களை கெளரவித்த கிராம மக்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த  அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கிராம மக்கள் தங்க மோதிரம், ரொக்கப்பணம் வழங்கி கெளரவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்லூரணி அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 36 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்லூரணி முன்னாள் ஊராட்சி தலைவர் மீனாட்சி மோகன்குமார் மற்றும் கிராமத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டக்கல்வி அலுவலர் மாணிக்கம் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் மீனாட்சி மோகன்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உதயகுமார் வரவேற்றார்.

475 மதிப்பெற்ற மாணவன் ஜோதி மணிகண்டனுக்கு ரூபாய் 5 ஆயிரமும், 470 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த காவ்யாவுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 468 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடம் பெற்ற சித்ராதேவிக்கு 2 ஆயிரம் ரூபாயும், 400 மதிப்பெண் பெற்ற 22 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், கல்லூரணி சேதுராமன் மீனாட்சி  அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் மோகன்குமார் வழங்கினார். நூறு சதவீத தேர்ச்சி பெற இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பத்து பேருக்கும் தலா ஒரு பவுன் தங்க மோதிரத்தை மீனாட்சி மோகன் குமார் வழங்கிப் பாராட்டினார்.

முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மீனாட்சியிடம் பேசும் போது, ''கடந்த 3 வருடங்களாக எங்கள் கிராமத்துப் பள்ளி தொடர்ந்து நூறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. அதற்காக உழைத்த ஆசிரியர்களை நிச்சயமாக பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு மோதிரமும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பகிர்ந்தளித்து வருகிறோம். இதனால் மாணவர்கள் உற்சாகமாக படிக்கின்றனர். இந்த ஆண்டு கல்லூரணியை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 50க்கு மேற்பட்ட  8, 9ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு இப்பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று வருடங்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வரும் எங்கள் கல்லூரணி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கல்வித்துறை அமைச்சரும், இத்துறை செயலாளரும் நடவடிக்கை எடுப்பார்கள் நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.