Published:Updated:

 குடியரசுத் தலைவர் ஆகிறாரா 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்?

 குடியரசுத் தலைவர் ஆகிறாரா 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்?
 குடியரசுத் தலைவர் ஆகிறாரா 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்?

 குடியரசுத் தலைவர் ஆகிறாரா 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்?

டந்த 1964-ம் ஆண்டு ராமேஸ்வரத்தைத் தாக்கிய பெரும்புயலில் பாம்பன் பாலம் காணாமலேயே போய்விட்டது. தமிழ்நாட்டிலிருந்து ராமேஸ்வரம் தீவு துண்டித்துப்போய் கிடந்தது. சேதமடைந்த பாம்பன் பாலத்தைச் சீரமைத்து, 46 நாள்களில் கட்டிக்கொடுத்த மனிதர் அவர். பாம்பன் பாலம் மட்டுமல்ல, டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் முதல் நாளை தொடங்கவுள்ள கொச்சி மெட்ரோ ரயில் திட்டம் வரை பல சாதனைகளின் பிதாமகன் `மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்.

இதன் காரணமாகவே, ஸ்ரீதரன் என்கிற பெயருக்கு முன்னால் `மெட்ரோ மேன் ' வந்து செல்லமாக ஒட்டிக்கொண்டது. இந்தியாவில், கொங்கன் ரயில் பாதை பிரமிக்கத்தக்கது. மலைகளைக் குடைந்த சுரங்கப்பாதைகளுடனும் பிரமாண்டமான பாலங்களுடனும் உருவாக்கப்பட்ட அற்புதமான ரயில் பாதை. இதைப் பார்த்தவர்கள் `Marvelous Engineering!' என்றே சொல்வார்கள். கொங்கன் ரயில் பாதையும் ஸ்ரீதரன் தலைமையில்தான் உருவாக்கப்பட்டது. சரி... இந்த ஸ்ரீதரன் பற்றி இப்போது ஏன் செய்தி என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது...

குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜியின் பதவிக்காலம் முடியவுள்ளது. வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனுத் தாக்கலும் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா காந்தியை வெங்கையா நாயுடு சந்தித்து, பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை அத்வானி, சுஷ்மா, சுமித்ரா மகாஜன், எம்.எம்.ஜோஷி எனப் பலரது பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. அவ்வளவு ஏன்... நிதியமைச்சர் அருண் ஜெட்லியை, குடியரசுத் தலைவராக்கலாம் என்றுகூட பாரதிய ஜனதா கட்சி யோசித்தது. அனைத்து கட்சிகளாலும் அருண் ஜெட்லி ஏற்றுக்கொள்ளப்படுவார் என்பது அந்தக் கட்சியின் எண்ணம். அருண் ஜெட்லி, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்ட நிலையில்தான் ஸ்ரீதரன் பெயரைப் பாரதிய ஜனதா கட்சி டிக் அடித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்காலத்தில்தான் அப்துல்கலாம் என்கிற விஞ்ஞானி ஜனாதிபதி ஆனார். அதேபோலவே, இப்போது `மெட்ரோ மேன்' எனச் செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீதரனை, குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு முன்னிறுத்தினால் நல்லது எனப் பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. இவரைக் குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவும் தங்களுக்குக் கிடைக்கும் என்பதும் அந்தக் கட்சியின் நம்பிக்கை. 

இதற்கிடையே, கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. விழா மேடையில் பிரதமருடன் அமர்வதற்காக 17 பேர்கொண்ட பட்டியலைக் கேரள முதலமைச்சர் அலுவலகம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தது. கொச்சி மெட்ரோ ரயில் திட்டத் தலைவர் ஸ்ரீதரனின் பெயரும் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஸ்ரீதரனின் பெயரைப் பட்டியலிலிருந்து பிரதமர் அலுவலகம் நீக்கியுள்ளது. பட்டியலில் ஸ்ரீதரன் பெயர் விடுபட்டிருப்பது கண்டு, கேரள அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். `கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தலைவரே ஸ்ரீதரன்தான். அவர் மேடையில் இல்லாமல் விழா நடத்துவது எப்படி?' எனக் குழம்பிபோனார்கள். 

பட்டியலிலிருந்து ஸ்ரீதரன் பெயர் நீக்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது கேரள அரசு. ஆனால் ஸ்ரீதரனோ... ``என்னைவிட பிரதமரின் பாதுகாப்பு முக்கியமானது. எந்த விதத்திலும் நான் வருத்தப்படவில்லை. விழாவில் முதல் ஆளாகப்  பங்கேற்பேன். இந்த விவகாரத்தை வைத்து சர்ச்சையைக் கிளப்ப வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் திருச்சூர் மாவட்டத்திலுள்ள வரவூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரனுக்கு, தற்போது 85 வயதாகிறது. இன்ஜினீயரிங் படித்தவர், கடந்த 1954-ம் ஆண்டு இந்திய ரயில்வே பணியில் சேர்ந்தார். கொல்கத்தா மெட்ரோ, கொச்சி கப்பற்கட்டும் தளம் போன்றவையும் ஸ்ரீதரன் தலைமையில்தான் உருவாக்கப்பட்டன. பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். 

PIC: Asianet

அடுத்த கட்டுரைக்கு