Published:Updated:

சிவகிரி ஜமீன் விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறை!

Vikatan Correspondent
சிவகிரி ஜமீன் விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறை!
சிவகிரி ஜமீன் விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறை!
சிவகிரி ஜமீன் விவகாரம்: வழக்கு தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறை!

சென்னை: சிவகிரி ஜமீன் சொத்துகள் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தவருக்கு 3 மாதம் சிறைத்தண்டனையும்,ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி ஜமீனின் சொத்துகள் தொடர்பான உயிலைக் காட்டி,  அந்த சொத்துகளை தான் நிர்வாகம் செய்வதற்கான அங்கீகாரக் கடிதத்தை கடந்த 2004 -ஆம் ஆண்டு என்.ஜெகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இருந்து பெற்றிருந்தார்.

இதனை எதிர்த்து சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அந்தக்  கடிதத்தில் இருந்து ஒரு பகுதியை கடந்த 2006-ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் ரத்து  செய்தது.

அதன் பின்னர் கடந்த 2008-ஆம் ஆண்டு, அந்த அங்கீகாரக் கடிதம் முழுவதுமாக ரத்து  செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து, உயர்நீதிமன்றம்  அளித்த அங்கீகாரக் கடிதத்தை நீதிமன்றத்தில் திருப்பி ஒப்படைக்கும்படி, வழக்கு  தொடர்ந்திருந்த ஜகந்நாதன் மற்றும் அவரது வழக்குரைஞர் சொக்கலிங்கம் ஆகியோருக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால் அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கடிதத்தை திருப்பி அளிக்கவில்லை.

இதனால் அவர்கள் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த  வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.துரைசாமி  ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.கடந்த வாரம் இருவரின்  வாக்குமூலத்தையும் நீதிபதிகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் நேற்றைய விசாரணையின் போது ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்  சொக்கலிங்கம்,"சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள ஜமீன் சொத்துகளை, இந்தியாவுக்கு  திருப்பிக் கொண்டு வரும் நல்ல நோக்கத்தில்தான் அந்தக் கடிதத்தை அந்த வங்கிக்கு அரசு  மூலமாக அனுப்பிவிட்டேன்.இப்போது அது,சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ளது” என்றார்.

அதனைக் கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி கோபமடைந்து,"நீங்கள் கூறுவதை அரசு  மறுக்கிறது. உங்கள் வாக்குமூலமும் உங்கள் கட்சிக்காரர் ஜெகந்நாதனின் வாக்குமூலமும்  முரணாக உள்ளன. உயிலில் சுவிட்சர்லாந்து சொத்து பற்றி குறிப்பிடப்படவில்லை.

ஆனால் உயிலைக் காட்டி பெற்ற அங்கீகாரக் கடிதத்தை சுவிட்சர்லாந்துக்கு  அனுப்பியுள்ளீர்கள்.இதற்கு யார் அனுமதி கொடுத்தது? நீதிமன்றத்திடம்  விளையாடாதீர்கள்.நீதிமன்ற அவமதிப்பு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், உங்கள்  கட்சிக்காரர் ஜெகநாதன் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் ஜோதிமணி,  துரைசாமி இருவரும், நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக ஜகந்நாதனுக்கு 3 மாத  சிறைத்தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

தன் கட்சிக்காரரை தவறாக வழி நடத்தியதற்காக வழக்கறிஞர் சொக்கலிங்கத்துக்கு ரூ.  50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.