Published:Updated:

“சினிமா பிரபல அரசியல்வாதிகள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!” தி இந்து என்.ராம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சினிமா பிரபல அரசியல்வாதிகள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!” தி இந்து என்.ராம்
“சினிமா பிரபல அரசியல்வாதிகள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!” தி இந்து என்.ராம்

“சினிமா பிரபல அரசியல்வாதிகள் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!” தி இந்து என்.ராம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

றைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பேசுபொருளாய் இருக்கிறார் எம்.ஜி.ஆர்! கலைவாணர் அரங்கில், 'எம்.ஜி.ஆர் எ லைஃப்' என்ற பெயரில், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூலை எழுத்தாளரும், ஈராக் நாட்டின் ஐ.நா சபை அதிகாரியுமான ஆர். கண்ணன் எழுதியிருக்கிறார். இவர் ஏற்கெனவே ஆங்கிலத்தில், ‘பயோகிராஃபி ஆஃப் அண்ணா' என்ற சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், ''எம்.ஜி.ஆர் எங்கள் ஊர்க்காரர்'' என உருகினார் சிறப்பு விருந்தினரான சசி தரூர் எம்.பி! “திராவிட இயக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்தவர் எம்.ஜி.ஆர்'' என அழுத்தமாகப் பதிவு செய்தார் இந்து என்.ராம். 

எம்.ஜி.ஆரை, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், 'இவர் என்ன அரச பரம்பரையா?' எனக் கேட்டதாக நினைவு கூர்ந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். ''இந்திய-சீனப்போரின்போது போர் நிதியாக 75 ஆயிரம் ரூபாய் தந்து நேருவை வியக்கவைத்தார் எம்.ஜி.ஆர்'' எனச் சொல்லி எம்.ஜி.ஆரின் கொடுக்கும் குணத்தை புகழ்ந்தார் எம்.ஜி.ஆரின் நிழலாக வாழ்ந்த ஆர்.எம்.வி. 

நெகிழ்வும் உருக்கமுமாக நடந்த இவ்விழாவில் அரசியல் கரைவேட்டிகளை எங்கும் காண முடியவில்லை. அ.தி.மு.க-வுடன் விழாக்குழு 'தீண்டாமையை'க் கடைப்பிடித்தது புத்தகத்தின் பார்வையைச் சொல்லாமல் சொல்லியது. 

நூலை சசி தரூர் வெளியிட, ஆர்.எம்.வீ பெற்றுக்கொண்டார். “எல்லாரும் புக்கை பிடிச்சிட்டு வரிசையாக நிற்கணுமா… செயற்கையா இருக்குமே'' என புகைப்படக்காரர்களைச் சிரிக்கவைத்தார் ராம். 

ஆர்.கண்ணனுக்கு போர்த்தப்பட்ட பொன்னாடையும் புத்தகத்தின் அட்டையும் ஒரே நிறத்தில் இருப்பதைப்பார்த்து ''மேட்ச் அன்ட் மிக்‌ஷிங்காக இருக்கே'' என தன் டைமிங் சென்ஸை வெளிப்படுத்தினார் பரபரப்பு அரசியல்வாதியான சசி தரூர்.

புத்தகத்தைப் பிரித்து அதில், எம்.ஜி.ஆருடன், தான் இருக்கும் படத்தை சசி தரூரிடம் ஆர்வத்துடன் காட்டி பெருமிதப்பட்டார், 80-களில் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆர்.எம்.வீ. 

திரைத்துறையைச் சாராத இந்தியாவின் ஒரே கவர்ச்சி மனிதர் என்ற கண்ணனின் பாராட்டுகளோடு சரியாக 6.40-க்கு மைக் பிடித்த சசி தரூர், ''எல்லாருக்கும் என் வினிதமய நமஸ்காரம்'' என மலையாளத்தில் தன் பேச்சைத் தொடங்கினார். 

“நானும் எம்.ஜி.ஆரும் ஒரே ஊர்க்காரர்கள்; ரெண்டு பேருமே கேரளாவிலுள்ள பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. அன்றைக்கு சென்னை மாகாணத்தின் கீழ் கேரளா ஒருங்கிணைந்து இருந்த காலகட்டத்தில், கேரளாவில் எம்.ஜி.ஆர் படங்கள் திரையிடப்படும். எனக்கு எம்.ஜி.ஆரைப் போஸ்டரிலோ அல்லது சினிமாவிலோ காண்பதில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். பள்ளி வயதில் என் ஆதர்ஷ கதாநாயகன் அவர்தான். எனக்கு மட்டுமல்ல... என் சகோதரர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் அனைவருக்கும் அவர்தான் மனதுக்குப் பிடித்தக் கதாநாயகன். எனக்குத் தெரிந்து அவர்தான் இந்திய அளவில் பெரும்பான்மை மக்களால் ஆராதிக்கப்பட்ட முதல் சூப்பர் ஸ்டார். திரையுலகுக்கு ஈடாக அரசியலிலும் அவர் பெரிய அறிவாற்றலுடன் செயல்பட்டார். இளைஞர்கள் மத்தியில் தி.மு.க எழுச்சிப்பெற அவரும் அவரது திரைப்படங்களும் உதவி செய்திருக்கின்றன.  1967-ல், தி.மு.க-வுக்கு பெரும் பலமாக நின்று ஆட்சிக்கு வர உதவியவர் அவர்தான். எம்.ஆர் ராதாவால் சுடப்பட்டு சிகிச்சைபெறும் ஒற்றைப் புகைப்படம்தான் அந்த தேர்தலில், தி.மு.க வெல்லக் காரணமாகியிருக்கிறது. அன்றைக்கு தமிழகத்தில் வீழ்ந்த காங்கிரஸ் கட்சி இன்றுவரை எழமுடியவில்லை. எம்.ஜி.ஆரின் சக்தியை உணர்ந்த அண்ணா, அவருக்குரிய முக்கியத்துவத்தைத் தரத் தவறவில்லை. தேர்தல் வெற்றிக்குப்பின் அமைச்சரவைப் பட்டியலை, மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆருக்குத்தான் முதன் முதலில் அனுப்பிவைத்தார்.

அண்ணா மறைவுக்குப்பின் தி.மு.க-வில் அடுத்தத் தலைமையை உறுதிசெய்த கிங்மேக்கரும் அவர்தான். இப்படி கருணாநிதி முதல்வராக உதவியவர் எம்.ஜி.ஆர். தி.மு.க-வில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியபின்னும் காலம் முழுவதும் முக்கியத்துவம் மிக்க மனிதராகவே இந்திய அரசியலில் இருந்தார். எம்.ஜி.ஆரை விடவும் ஆந்திராவில் என்.டி.ஆர் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தார். கடவுள் வேடங்களில் நடித்ததால், கடவுள் அவதாரமாகவேக் கருதப்பட்டார். ஆனால், அவருக்கு இறுதிவரை மக்கள் அபிமானம் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் 3 முறை தொடர்ந்து முதல்வராக இருந்ததோடு, இறக்கும் தறுவாயிலும் முதல்வராகவே இறந்தார். காரணம், திரைப்படங்களில் சாமானிய மக்களுக்கு நேரும் கொடுமைகளைத் தட்டிக்கேட்கும் கதாநாயகனாக அவர் நடித்திருந்ததே. உச்சக்கட்டப் புகழை அடைந்தபின்னும் அவர் பழைய வாழ்க்கையை மறக்கவில்லை. வறுமையினால், தான் பள்ளிப்படிப்பை விட நேர்ந்ததை  மறக்காததனால்தான் சத்துணவுத்திட்டம் பிறந்தது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ஆர்.எம்.வீ., திருநாவுக்கரசர் போன்ற எண்ணற்றத் தலைவர்களை  உருவாக்கி ஒரு தலைவருக்குரிய தகுதியை உறுதி செய்துகொண்டவர். அவரைப் பார்த்து வளர்ந்ததும்கூட ஒருவகையில் என் அரசியல் வாழ்க்கைக்கு உதவியது என்றே சொல்வேன்.

அண்ணாவின் சுயசரிதையை எழுதியதுபோன்றே கண்ணன் இப்போது எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியிருக்கிறார். அதில் எம்.ஜி.ஆர் என்ற ஒருவரின் வாழ்க்கை  மட்டுமல்ல; 50 ஆண்டுகால இந்திய அரசியலும் குறிப்பாக தமிழக அரசியலும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு மட்டுமன்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் விவரிக்கும் இந்த நூல் பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யமான சம்பவங்களைச் சொல்கிறது. எம்.ஜி.ஆர், திராவிட இயக்கத்தின் தலைவராகக் குறிப்பிடப்பட்டாலும் இயல்பில், அவர் காங்கிரஸ்காரராகவே இருந்திருக்கிறார். அதற்கு சாட்சியாக அவரது பூஜையறையில் கடவுள் படங்களுக்குப் பதிலாக காந்தியையும் நேதாஜியையும் வைத்திருந்திருக்கிறார்.  

வறுமையினால், 3-ம் வகுப்புடனேயே தன் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு, நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார். பின் திரைப்பட நாயகனாக மாறியவர் அரசியலுக்குள் நுழைந்ததன் மூலம் ரீல் நாயகன் ரியல் நாயகன் ஆனார். மக்கள் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்து 3 முறை முதல்வராக்கினார்கள். மக்களின் நம்பிக்கையை அவர் காப்பாற்றினார். சத்துணவுத்திட்டத்தை அவர் தமிழகத்துக்குக் கொண்டுவந்தாலும் அது பின்னாளில், இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொண்டுவரப்பட்டது. அந்த சாதனைக்குரியவர் எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டால், தேசிய அரசியலுக்கு அவர் செய்த மிகப்பெரிய பங்களிப்பாக சத்துணவுத்திட்டத்தைக் குறிப்பிடுவேன்.

தென்னிந்திய தலைவர்கள் குறித்த ஆங்கில நூல்கள் பெரும்பாலும் இல்லை. அந்தக்குறையை தீர்க்கும்வகையில், காமராஜர், கருணாநிதி, இன்னும் பலர் குறித்த நூல்களை எதிர்காலத்தில் கண்ணன்  கொண்டுவரவேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார் சசி தரூர்.

அடுத்ததாகப் பேசிய இந்து என்.ராம், ''தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கு முன்னும் பின்னும் மக்கள் செல்வாக்கு கொண்ட ஒருவர் இல்லை. திராவிட இயக்கங்கள் வீறுகொண்டு வளர்ந்தபோது காமராஜர் போன்ற தலைவர்கள் கூட அதைக் குறைத்து மதிப்பிட்டனர். தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு அவர் பெரிய முக்கியத்துவம் அளித்ததில்லை. ஆனால், பின்னாளில்  அவை தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக மாறின. முத்தாய்ப்பாக 1967 தேர்தலில், அண்ணா தலைமையிலான தி.மு.க., காங்கிரஸை வீழ்த்தி நிரந்தரமாக ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றியது. தி.மு.க-விலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, காமராஜர் அதனைக் 'கூத்தாடிக் கட்சி' எனக் கிண்டலடித்தார். ஆனால், எம்.ஜி.ஆர் மக்கள் ஆதரவில் பெரும் பலத்துடன் ஆட்சிக்கு வந்தார். அன்று முதல் இன்றுவரை தி.மு.க மற்றும் அ.தி.மு.க என்ற இந்த திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம்தான் தமிழகத்தில் உள்ளது. காங்கிரஸ் இந்த 2 கட்சிகளுடன் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி கண்டு அதன் மைனர் பார்ட்னர் என்று சொல்லும்படியாக சுருங்கிவிட்டிருப்பதையே திராவிடக்கட்சிகளின் ஆதிக்கத்துக்கான உதாரணமாகச் சொல்லலாம். திராவிடக் கட்சிகள் என்றாலும் தேசிய அரசியலுக்கு அவை பெரும் பங்களிப்பு செய்ததையும் மறுக்கமுடியாது.

எம்.ஜி.ஆர் ஒரு மனிதாபிமானி; நாகரிகமான மனிதர். எதிரும் புதிருமாக அரசியல் செய்தாலும் கருணாநிதி,எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையே நாகரிகமான நட்பும் அன்பும் இருந்தது. ஒருமுறை எம்.ஜி.ஆருடன் கட்சிப்பிரமுகர் ஒருவர் காரில் பயணம் செய்துகொண்டிருந்துள்ளனர். அப்போது, கருணாநிதி பற்றிக் குறிப்பிடும்போது வெறுமனே கருணாநிதி எனப் பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டாராம் அந்தப் பிரமுகர், எம்.ஜி.ஆருக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. 'ஆயிரம் கருத்துவேறுபாடு இருந்தாலும் நானே அவரை பொது இடத்தில் பெயர் சொல்லிக் குறிப்பிடமாட்டேன். எனக்கே தலைவராக இருந்த ஒருவரை நீ எப்படி மரியாதையின்றி பெயர் சொல்லிக் குறிப்பிடலாம்?' எனக் கூறி அவரை வழியிலேயே இறக்கிவிட்டுவிட்டாராம். 

அதேபோல், எம்.ஜி.ஆர் மறைந்தபோது எம்.ஜி.ஆருக்கு முதல் மாலை அணிவித்தது அவரது நண்பர் கருணாநிதிதான். இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே பெரும்பகை இருந்த நிலையில், அதுபற்றி கவலைகொள்ளாமல், துணிச்சலாகச் சென்று தன் நண்பருக்கு இறுதி மரியாதை செய்திருக்கிறார் கருணாநிதி. 

அதேசமயம் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறை ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர்தான் தமிழகத்தில் அறிவியல் பூர்வமான ஊழல் தொடங்கியதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

நூலில் இப்படி பல சுவாரஷ்யங்கள். இப்போதும் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றியைத் தவறாக கணித்துக்கொண்டு திரையுலகிலிருந்து அரசியலில் குதித்து வெற்றிபெற நினைக்கின்றனர் சிலர். எம்.ஜி.ஆரின் வெற்றி என்பது கடும் உழைப்பு. மக்கள் மீது அவர் கொண்ட நேசம் என்பது எம்.ஜி.ஆரின் தேர்ந்த அனுபவத்தினால் கிடைத்தது; சினிமாப் புகழினால் கிடைத்ததல்ல. இப்போதும் சிலருக்கு அந்த ஆசை துளிர்விட்டிருக்கிறது. ஒருபோதும் அவர்கள் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது. நான் எந்த தனிநபரையும் குறிப்பிடவில்லை'' என்று பஞ்ச் வைத்து முடித்தார். 

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர், திருநாவுக்கரசர் பேசும்போது, ''வெளிமாநிலங்களில் புத்தக வெளியீட்டு விழாக்களில், கூட்டம் அதிகமிருக்காது. அதனால் அரங்கம் நிறைந்த இந்தக் கூட்டத்தைப் பார்த்து சசி தரூர் ஆச்சர்யப்பட்டார். இங்கு வந்திருக்கும் கூட்டம் எம்.ஜி.ஆருக்கானது.  ஒவ்வொருவரும் ஆயிரம்பேருக்குச் சமமானவர்கள். 

எம்.ஜி.ஆர் பற்றி 15 நிமிடங்களில் பேசுவது என்பது கடல் நீரை சொம்பில் எடுத்து ஊற்றி வற்றச்செய்வதுபோன்றது. வானளாவியப் புகழ் கொண்ட எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒரே புத்தகத்தில் அடக்கியிருப்பதே கண்ணன் செய்த சாதனைதான். 

நாடகம், சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, அவரது சாதனைகள் என எம்.ஜி.ஆரின் அத்தனை அம்சங்களும் இப்புத்தகத்தில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் வரலாற்றோடு அது தமிழக அரசியல் பற்றிய ஆவணமாகவும் இந்த நுால் வந்திருப்பது நல்ல விஷயம்.

எம்.ஜி.ஆருடன் பல ஆண்டுகள் பழகியவர்கள்கூட இப்படி ஒரு நூலை எழுதியிருக்கமுடியாது. ஆனால், அவர் முன் ஒரே ஒரு முறை மைக்கில் பேசிய கண்ணன், அதை நிறைவாகச் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் பற்றி அவருடன் நெருங்கிப்பழகிய என்னைப்போன்றவர்களுக்கே தெரியாத பல விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. புத்தகம் வெறுமனே எம்.ஜி.ஆர் புகழ் பாடாமல், நேர்மையாக அவரது வாழ்க்கையைப் படம்பிடித்துக்காட்டுகிறது. எம்.ஜி.ஆர் பற்றி எழுதினாலும் சினிமா, அரசியலில் அவரது பங்காளிகளாக விளங்கிய சிவாஜி, கருணாநிதி போன்றவர்களையும் குறைத்து மதிப்பிடாமல் சமமாக வைத்துப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒருமுறை கருத்துவேறுபாடு உருவாகி, அதன் எதிரொலியாக ஒரு மேடையில், 'காமராஜர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி' எனப் பேசிவிட்டார் எம்.ஜி.ஆர். இன்னொரு முறை எம்.எல்.சி பதவியைக் கூட ராஜினாமா செய்யப்போனார். இந்த உண்மையை மென்மையாகச் சொல்கிறது நூல். 

எம்.ஜி.ஆர் ஆட்சியில், அறிவியல் பூர்வமான ஊழல் தொடங்கியதாக ராம் குறிப்பிட்டார். அது உண்மையா இல்லையா என்ற விஷயத்துக்குள் புகவிரும்பவில்லை. ஆனால், அப்படி எதுவும் நடந்திருந்தாலும் அதில் ஒரு பைசாகூட எம்.ஜி.ஆர் லாபம் அடைந்திருக்கமாட்டார் என்றுமட்டும் அடித்துச்சொல்வேன். 3 முறை முதல்வராக இருந்தும் அவரது வீட்டின் மாடிப்படியைக்கூட அவர் மாற்றியமைத்துக்கொண்டதில்லை. தி.நகர் அலுவலகத்தில் அவர் இருந்தவரை பெயர்ந்துபோன சிமெண்ட் தரையைக்கூட அவர் சரிசெய்யவில்லை. அத்தனை எளிய மனிதர். தன் சொந்தப் பணத்திலிருந்து பொதுமக்களுக்கு செலவு செய்த மனிதாபிமானி அவர். 

ஒருமுறை அமைச்சர் ஒருவர் கழுத்தில் பெரிய நகை அணிந்திருந்ததைப் பார்த்து, 'காசு அதிகம் இருந்தா வீட்டுக்காரம்மாவுக்கு நகை செய்துபோடுங்க. இதென்ன அசிங்கமாக ஆம்பிளை நகை அணிஞ்சிட்டு, அதுவும் பொது இடத்தில்...' எனக் கண்டித்தார். 

கொடுப்பதிலேயே இன்பம் கண்டவர் எம்.ஜி.ஆர். ஒருமுறை வெள்ள நிவாரணத்தைப் பார்வையிட நாகை மாவட்டத்துக்கு வந்தார். அப்போது மக்களிடம் 'உங்களுக்கு நான் என்னசெய்யவேண்டும்' எனக் கேட்டார். அதற்கு மக்கள், 'மகராசா நாங்கள் உன்னை நேரில் பார்த்ததே போதும்' என்றனர். மக்கள் மீது அவர் வைத்திருந்த நேசம்தான் இதற்குக் காரணம். இன்னொரு முறை காரில் அவருடன் சென்றபோது ரயில்வே கேட்டில் கார் நின்றது. எம். ஜி.ஆர் கார் என்பதை அறிந்த மக்கள், 'வாத்தியார் வாழ்க' என கோஷம் எழுப்பினர். அப்போது என்னிடம் 'பார்த்தாயா நான் முதல்வராகிவிட்டபின்னும் இந்த மக்களுக்கு நான் இன்னமும் வாத்தியார்தான். இதுதான் என் வாழ்நாளில் நான் சேர்த்த சொத்து' என நெகிழ்ந்தார்.

ஒருமுறை இங்கிலாந்து இளவரசர் சென்னை வந்தார். அவர் முதல்வரைச் சந்திப்பதற்காக, அரசு விடுதிக்கு  அழைத்துவந்தேன். மதிய உணவின்போது எம்.ஜி.ஆரின் முக அழகையும் நடை, உடை மேனரிஸங்களையும் ரசித்தபடி இருந்த சார்லஸ், கிளம்பும்போது என்னிடம் 'உங்கள் முதல்வர் ராஜ பரம்பரையைச் சேர்ந்தவரா?' எனக் கேட்டார். அப்படி ஒருவரை இனி காண முடியாது. வரலாற்று ஆவணம் போன்ற இந்த நூலைப் பள்ளி கல்லூரிப் பாடத்திட்டமாக வைக்கலாம். அந்தளவுக்கு தகவல்கள் விரவியிருக்கின்றன'' என முடித்த திருநாவுக்கரசர், இந்து ராமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்விதமாக, “காங்கிரஸை மைனர் பார்ட்னர் என ராம் சொன்னார். என்னதான் பிரமாண்டமா பெரிய அளவில் சமைத்தாலும் கொஞ்சம் உப்பு இல்லையென்றால் அத்தனையும் வீண். அதுபோல்தான் காங்கிரஸ். திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் இருப்பதை ஒப்புக்கொண்டாலும் காங்கிரஸ்தான் அதை நிர்ணயிக்கும் சக்தி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் சொல்லப்போனால், எம்.ஜி.ஆருக்குப்பின் ஜெயலலிதா 1991-ல் முதன்முறை முதல்வரானதற்குக் காரணம் என் தலைவர் ராஜிவ் காந்தி ரத்தம் சிந்தியதே என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தை யார் ஆள்வது என்பதை நிர்ணயிப்பது, என்றுமே காங்கிரஸ்தான். 

எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியான அ.தி.மு.க இன்று அவர் பெயரையேச் சொல்லாமல் இருப்பது வேதனை'' எனக்கூறி தன் பேச்சை முடித்தார். 

எம்.ஜி.ஆரின் வாழ்நாளில் அவரது நிழலாகத் தொடர்ந்த ஆர்.எம்.வீரப்பன் பேசும்போது, ''எம்.ஜி.ஆர் என்ற மனிதரின் புகழ் வளர காரணமானவர்கள் பலர். இப்போது கண்ணன் அந்தப்பணியை நிறைவாகச் செய்திருக்கிறார். அந்தக்காலத்திலேயே திரைப்படங்களில் நடித்ததன் மூலம் லட்சம் லட்சமாகச் சம்பாதித்தவர் எம்.ஜி.ஆர். இன்றைக்கு அதன் மதிப்பு பல கோடிகள். ஆனால், எளிமையாகவே வாழ்ந்தார். அவருக்கென அவர் சம்பாதித்தது ராமாபுரம் இல்லமும் சத்யா ஸ்டூடியோவும்தான். மற்றதையெல்லாம் மக்களுக்கே திருப்பிக்கொடுத்தார். ஆனால், அவரால் சம்பாதித்தவர்களில் பலர். ஆனாலும் இன்றைக்கு அவரது பெருமையைப் பாட ஒருவரும் இல்லை. கண்ணன் அந்தப் பணியினைச் செய்திருப்பது பாராட்டுக்குரிய செயல். உலக நாடுகள் சபையில் பணியாற்றும் கண்ணன், ஆங்கிலத்தில் எம்.ஜி.ஆர் பற்றி எழுதியதன்மூலம் எம்.ஜி.ஆரின் புகழை உலக நாடுகளுக்கே கொண்டு சென்றிருக்கிறார். இந்த நூல் வழக்கமான ஒரு நூலாக வெளிவரவில்லை. இதில் எனக்கேத் தெரியாத பல விஷயங்கள் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

இந்தியா - சீனா நாடுகளுக்கிடையேயான போரின்போது முதன்முதலாக 75 ஆயிரம் ரூபாயை யுத்த நிதியாக எம்.ஜி.ஆர் அளித்தார். அதற்காக நேரு அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதிய தகவல் இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. அது புகைப்பட சாட்சியாக இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. அந்தத் தொகையைக் காமராஜரிடம் நேரில் தந்தது நான்தான். 75 ஆயிரம் ரூபாய் என்பது 60-களில் பெரிய தொகை என்பதால், காமராஜர் ஆச்சர்யப்பட்டார். என்னிடம் அவர், 'நீ என்ன மலையாளியா..' என்றார். 'இல்லை நான் தமிழன்தான்' என்றேன். பின்னர், 'ஏன் அப்படிக் கேட்டீர்கள்' என்றேன். 'எம்.ஜி.ஆர் மலையாளிகளைத்தான் வேலைக்கு வைத்துக்கொள்வாராமே' என்றார். 

'எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவர் அல்ல. உண்மையில், அவர் எதிரே யாரேனும் மலையாளத்தில் பேசினால்கூடப் பிடிக்காது. அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் பிறந்தது இலங்கையில். 4 வயதில் தமிழகத்துக்கு வந்தார். தமிழகத்திலேயே வளர்ந்தார், வாழ்ந்தார், புகழடைந்தார். அவர் என்றும் தமிழர்தான்' என்றேன்.

திருநாவுக்கரசர்  சொன்னதைப்போல் எம்.ஜி.ஆர் - அண்ணா மோதல் இருந்தது கிடையாது. எம்.ஜி.ஆருக்குக்கூட ஒருவேளை அண்ணா மீது வருத்தம் இருந்திருக்கலாம். ஒருபோதும் எம.ஜி.ஆர் மீது, அண்ணாவுக்கு எந்த வருத்தமும் கோபமும் இருந்தது கிடையாது. காமராஜரைத் தலைவர் என்றதற்காக அண்ணா கோபப்படவில்லை. ஆனால், அவரை சிலர் தூண்டிவிட்டார்கள். 

நானே ஒருமுறை எம்.ஜி.ஆருடன் கோபப்பட்டு வெளியேற முயன்றபோது, தகவல் கேள்விப்பட்டு  என்னை அழைத்த அண்ணா, 'எம்.ஜி.ஆரை விட்டு நீ எப்போதும் வெளியேறக் கூடாது. நீ வெளியேறினால் அதன் மூலம் தாங்கள் பயனடைவதற்காக சிலர் சதி செய்கின்றனர். அதற்கு இடம் கொடுத்துவிடாதே' என அறிவுரை சொன்னார். இறுதிவரை அதைக் காப்பாற்றினேன். 

எம்.ஜி.ஆர் எத்தகைய நேர்மையாளர் என்பது எனக்குத்தான் தெரியும். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் அவர். ஒருமுறை உண்ண உணவில்லாதபோது, 'பிள்ளைகள் உணவுக்காக யாரிடமும் சென்று கையேந்திவிடக்கூடாது' என்பதற்காக ஒரு அறையில் வைத்து அவர்களை பூட்டிச் சென்றவர் சத்யபாமா. அவரின் பிள்ளையான எம்.ஜி.ஆர் என்றைக்கும் நேர்மை தவறியது கிடையாது. எல்லோருக்கும் கொடுத்திருக்கிறாரே தவிர யாரிடமிருந்தும் எடுத்துக்கொண்டவர் கிடையாது. தன் சிகிச்சை பணத்தைக்கூட அரசு தரக்கூடாது என தன் சொந்தப்பணத்தைச் செலவழித்தவர் எம்.ஜி.ஆர். இந்த தகவல்களால் நூலில், எம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்திருக்கிறார் கண்ணன்.

1967 தேர்தலில், விருதுநகரில் சீனிவாசன் என்ற கல்லூரி மாணவரை நிறுத்தினார் அண்ணா. அவருக்கு யாரும் தேர்தல் பிரசாரம் போகக்கூடாது என்பது அண்ணாவின் கட்டளை. ஏன் என்று கேட்டதற்கு, 'காமராஜர் தோற்பதற்காக உன்னை நிறுத்தவில்லை. அவர் ஜெயிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அறிமுகமில்லாத உன்னை நிறுத்துகிறேன்' என அவரிடம் சொன்னார் அண்ணா. அதனால் வருத்தம்கொண்ட சீனிவாசன், எம்.ஜி.ஆரை பிரசாரத்துக்கு அழைக்க வந்தார். எம்.ஜி.ஆர் அப்போது குண்டு காயப்பட்டிருந்தார். அழகான முகம் கொண்டவர் எம்.ஜி.ஆர். ஆனால், குண்டு காயம்பட்ட அவரது படத்தை அந்த தேர்தலுக்குப் பயன்படுத்தினோம். சீனிவாசன் மட்டுமல்ல... தி.மு.க-வே அந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்தது. அந்தப் படத்தையும் இதில் பார்த்தேன், நெகிழ்ந்தேன். 

சினிமா, அரசியல் என அவரது வெற்றிக்கு காரணம் மக்கள் மீதான அவரது நேசம். சென்னையில் எங்கு குடிசைகள் எரிந்தாலும் வெள்ளத்தில் சிக்கியதாகத் தகவல் வந்தாலும் ராயப்பேட்டையில் அவரது இல்லத்திலிருந்து சுடச்சுட சமைக்கப்பட்டு உணவு செல்லும். அத்தகைய மனிதாபிமானி அவர். தி.மு.க என்றாலே மக்களுக்கு எம்.ஜி.ஆர்-தான். ஒருமுறை மாநாடு ஒன்றுக்காக அண்ணாவுடன் தென்மாவட்டம் சென்றுகொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வழியில் ரயில்வே கேட்டில் வண்டி நின்றபோது காரில், தி.மு.க கொடியைப் பார்த்த மக்கள் எம்.ஜி.ஆர் கட்சிக்கொடி என ஓடிவந்ததுடன் 'எம்.ஜி.ஆர் வாழ்க' என அண்ணா முன்னிலையிலேயே கோஷம் எழுப்பினர். உடனிருந்த மற்றொரு கட்சிப் பிரமுகர் சில தினங்கள் கழித்து அண்ணாவிடம் இந்த சம்பவத்தைச் சொல்லி எம்.ஜி.ஆருக்கு எதிராகத் தூண்டிவிட்டார். அதற்கு அண்ணா, 'எம்.ஜி.ஆரை தி.மு.க-வின் அடையாளமாக மக்கள் பார்ப்பதில், பயன் தி.மு.க-வுக்குத்தானே தவிர... எம்.ஜி.ஆருக்கு அல்ல. அதற்காக நாம் எம்.ஜி.ஆரை பாராட்டத்தான் வேண்டுமே தவிர எரிச்சலடையக்கூடாது. அவர்தான் அந்த மக்களிடம் தி.மு.க-வைக் கொண்டு சேர்க்கிறார்' என அந்தப் பிரமுகரின் வாயை அடைத்தார். இப்படி தி.மு.க-வின் வெற்றிக்குக் காரணமானவர் எம்.ஜி.ஆர். அதை இந்த நூலில் அழகாக பதிவுசெய்திருக்கிறார் கண்ணன்'' என்றுகூறி விழாவை நிறைவு செய்தார்.  

எம்.ஜி.ஆர் பற்றிய ஆங்கில நுால் வெளியீட்டு விழாவுக்கு காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, அதிமுக சாராத எம்.ஜி.ஆரின் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்டாலின் சார்பாக அவரது மருமகன் சபரீசன் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் கலந்துகொண்டது எம்.ஜி.ஆருக்கான வித்தியாசமான ஓர் விழாவாக அமைந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு