Published:Updated:

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு: பல சந்தேகங்களைத் தீர்த்த 'தடயவியல்' சந்திரசேகரன்!

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு: பல சந்தேகங்களைத் தீர்த்த 'தடயவியல்' சந்திரசேகரன்!
எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு: பல சந்தேகங்களைத் தீர்த்த 'தடயவியல்' சந்திரசேகரன்!

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு: பல சந்தேகங்களைத் தீர்த்த 'தடயவியல்' சந்திரசேகரன்!

தென்னிந்தியாவின் மிகச் சிறந்த தடய அறியியல் நிபுணர் பி. சந்திரசேகரன். ராஜிவ்கொலை வழக்கில் அரசு தரப்புக்குப் பெரும்உதவி புரிந்தவர் இவர். சிதம்பரம் அருகில் கீழச்சாவடி என்ற குக்கிராமத்தில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் படித்து பின்பு தடய அறிவியலில் மேற்படிப்பு படித்து தடய அறிவியல் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் செப்சிஸ் நோய்க்குத் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். தடய அறிவியல் நிபுணர் என்ற முறையில் சந்திரசேகரன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல. தன் சேவைக்காக பத்ம பூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பி.சந்திரசேகரன்.  

அவற்றில் ஒன்று எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு. தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய அந்த வழக்கில் அரசு தரப்பிற்கு உதவியாக இருந்து அந்த வழக்கில் எம்.ஆர். ராதா தரப்பின் வாதங்களைப் பொய்யாக்கி வழக்கில் உண்மையை நிலைநாட்ட பெரிதும் உதவியர் சந்திரசேகரன் என்பது இந்தத் தலைமுறை அறியாத தகவல். 

1967 ம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் சமயம். அண்ணா தலைமையிலான திமுக தமிழகம் முழுவதும் பரபரப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. அந்தத் தேர்தலில் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர், பரங்கிமலை தொகுதியில் நிறுத்தப்பட்டிருந்தார். தன் தொகுதிக்கு வேறு ஒரு பொறுப்பாளரை நியமித்துவிட்டு கட்சியின் முக்கியஸ்தர்களின் தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்துவந்தார் எம்.ஜி.ஆர். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருந்தநிலையில் ஜனவரி 12 ந்தேதி காலை தன் தொகுதியில் வாக்கு சேகரித்தார் எம்.ஜி.ஆர். பிற்பகலில் அவரது ஓய்வு நேரம் என்பதால் தன் ராமாவரம் இல்லத்திற்கு திரும்பினார். மேலும்  அன்றையதினம் 'பெற்றால்தான் பிள்ளையா'  படத்தில் ஃபைனான்ஸ் பிரச்னை தொடர்பாக சில விஷயங்கள் பேச அதன் தயாரிப்பாளர் வாசுவும் நடிகர் எம்.ஆர். ராதாவும் வருவதாக அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னபடியே அன்று மாலை அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு வந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களை வரவேற்று ஹாலில் அமரவைத்தார். சம்பிரதாயமான தேநீர் உபசரிப்புக்குப்பின் அவர்கள் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர்.

வந்தவர்கள் இருவரும் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால் அவர்களுக்குத் தொந்தரவு தராமல் வீட்டில் இருந்தவர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த பயங்கரச் சத்தம் கேட்டது. எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரின் குரலும் அந்த இல்லத்தைக் குலுக்கியது. அதைத்தொடர்ந்து  'பாவி மனுஷா, இப்படிப் பண்ணிட்டியே' என வாசுவின் குரல் கேட்டது. ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை உணர்ந்து  பதறியடித்து ஓடிவந்தனர் அனைவரும். ஹாலில் குண்டு காயத்துடன் எம்.ஜி.ஆரும் ராதாவும் துடித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர் மட்டும் சற்று சுயநினைவில் இருந்தார். அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. 'ஆஸ்பத்திரிக்கு போகணும்... வண்டியை எடு" என தன் வளர்ப்பு மகன் அப்புவிடம் கத்தினார் எம்.ஜி.ஆர். 'அண்ணனை ஒண்ணும் பண்ணிடாதீங்க...அவரையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போகணும்' என சாய்ந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறு மைனர் ஆபரேஷன் நடந்தது. இதற்கிடையே எம்.ஜி.ஆர் சுடப்பட்ட தகவல் காட்டுத்தீயாகப் பரவி தமிழகமே என்ன ஆகுமோ காத்துக்கிடந்தது. எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு எதிரே இருந்த ராதாவுக்குச் சொந்தமான மாட்டுப்பண்ணையைக் கொளுத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். இரு தினங்களுக்குப் பின்பே இருவருமே ஆபத்தான கட்டத்தைத் தாண்டியதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தேர்தல் நேரம் என்பதால் எம்.ஜி.ஆர் குண்டுகாயத்துடன் இருக்கும் படத்தைத் திமுக தன் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி திமுக ஆட்சியில் அமர்ந்தது என்பது வரலாறு.

இதுதொடர்பாக எம்.ஆர் ராதா மீது கொலை முயற்சி வழக்கு பதிவானது. எம்.ஜி.ஆர் தன்னைத் துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காக தான் திருப்பிச்சுட்டதாக (defence ) எம்.ஆர். ராதா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா இருவரின் துப்பாக்கியும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரே மாடல் துப்பாக்கிகள் என்பதால் போலீஸார் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர். இதை நிரூபிப்பதற்காக அன்றைக்கு தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக இருந்த பி.சந்திரசேகரனை உதவிக்கு அழைத்தது தமிழக அரசு. வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருமே திரையுலகப் பிரமுகர்கள் என்பதோடு தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால் அப்போதைய முதல்வர் அண்ணா சந்திரசேகரனை அழைத்து, ' இந்த வழக்கு சாதாரண வழக்காக இல்லாமல் தடய அறிவியல் முறையில் நிரூபிக்கவேண்டிய அவசியம் உள்ள வழக்கு. உங்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி வழக்கின் உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனால் சந்திரசேகரன் இதில் முழு மூச்சாக உண்மையை வெளிக்கொணர உழைத்தார்.

எம்.ஆர்.ராதாவின் கூற்றைப் பொய்யாக்கி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகளும் (இருவரது உடலிலும் பாய்ந்த தலா ஒரு குண்டு) எம்.ஆர்.ராதாவின் துப்பாக்கியிலிருந்து வெளியானவை என நிரூபிக்க உதவியது பி.சந்திரசேகரன் தலைமையிலான தடய அறிவியல்துறை.

சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால் தண்டனைக்காலத்திற்குள் நன்னடத்தைக் காரணமாக எம்.ஆர்.ராதா திமுக காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். (எம்.ஜி.ஆர் கருணாநிதி மோதலுக்குக் காரணமாக அரசியல் ஆய்வாளர்கள் சொல்லும் காரணங்களில் இதுவும் ஒன்று. தன்னைச் சுட்ட எம்.ஆர்.ராதாவை தண்டனைக்காலத்திற்குள் விடுவித்ததால் கருணாநிதி மீது எம்.ஜி.ஆருக்கு வருத்தம் உண்டானதாகச் சொல்வார்கள்)
இந்தச் சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகியிருந்த சமயம், சந்திரசேகருக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து ஒருநாள் போன் வந்தது. மொலாஸஸ் எனப்படும் சர்க்கரை கழிவு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்பதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர் அழைப்பதாக சொல்லப்பட்டது. 

அந்தச் சந்திப்பு முடிந்து சந்திரசேகர் கிளம்பியபோது எம்.ஜி.ஆர் அவருடன் கொஞ்சம் தனியே பேச வேண்டும் என்றார். எம்.ஜி.ஆரின் நினைவுகள் 10 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றன. எம்.ஆர்.ராதாவினால் தான் சுடப்பட்ட சம்பவத்தைச் சந்திரசேகருடன் பகிர்ந்துகொண்ட அவர், அந்த வழக்கு வெற்றிபெற உதவியதற்காக சந்திரசேகரனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். “அது நடந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டாலும் எனக்கு நீண்ட நாள்களாக மனதில் ஒரு சந்தேகம் உள்ளது. நான், ராதாண்ணன் இருவருமே மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டோம். ஆனால் சினிமாக்காட்சியைப் போல இருவருமே பெரிய ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டது எப்படி, ஒரு பாமரனைப்போல் இன்னமும் இது என் மனதில் குழப்பத்தைத் தந்துகொண்டிருக்கிறது இந்த விஷயம்” என்றார். 

அதற்கு பி.சந்திரசேகரன் எம்.ஜி.ஆருக்கு அந்த வழக்குக் குறித்து மிக நீண்ட விளக்கம் அளித்தார். “ பொதுவாக ஒரு துப்பாக்கியின் விசை அழுத்தப்பட்டதும் அதனுள் இருந்து வெளிவரும் குண்டு அதனுள் வெடிமருந்து எரிவதனால் உண்டாகும் வெப்பத்தின் காரணமாக விரிவடைந்து barrel என சொல்லப்படும் துப்பாக்கிக்குழலின் உள்பகுதியை உரசிக்கொண்டு பாயும்.

அப்போது துப்பாக்கிக் குழலின் முகப்புப் பகுதியில் லேசான கோடுகளை உருவாக்கும். இது துப்பாக்கிக்குத் துப்பாக்கி வேறுபடும். ஒன்று மற்றொன்றைப்போல் இருக்காது. அதேபோல் ஒரே துப்பாக்கியில் இருந்து எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் அது ஒரே மாதிரியாக அடையாளத்தையே பெற்றிருக்கும். ஒரே துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் அத்தனை குண்டுகளின் மேற்பகுதியிலும் ஒரே மாதிரியான உரசல் கோடுகள் தென்படும். இதன் அடிப்படையில் இருவரது உடலிலிருந்தும் எடுக்கப்பட்ட குண்டுகளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட துப்பாக்கியில் பொருத்தி மைக்ராஸ்கோப்பில் வைத்துப் பார்த்தபோது, அந்த 2 குண்டுகளும் ஒரே துப்பாக்கியில் இருந்து வந்தவை என்பது உறுதியானது. இதன்பின் அந்தத் துப்பாக்கி யாருடையது என்ற கேள்வி எழுந்தது. காவல்துறையுடன் உதவியுடன் வேறொரு சோதனை மூலம் அது எம்.ஆர். ராதாவுக்குச் சொந்தமானது எனக் கண்டறிந்தோம்” என வழக்கின் முடிச்சை அவிழ்க்கக் காரணமான விஷயங்களை முதல்வர் எம்.ஜி.ஆருடன் பகிர்ந்துகொண்ட பி.சந்திரசேகரன், தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சந்தேகத்துக்கு விளக்கம் தந்தார். 

“ எம்.ஆர்.ராதா அந்த சம்பவத்திற்கு பயன்படுத்தியது ரிவால்வர்  ரக துப்பாக்கி. பித்தளை அல்லது தாமிரக்குப்பியிலான இதன் ரவைகள், இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு பக்கம் மூடிய அமைப்புடன்  வெடிமருந்து அடைக்கப்பட்டிருக்கும். திறந்திருக்கும் பக்கத்தில் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். மூடிய அடிப்பாகத்தில் 'தாக்கப்படும்  பாகம்' ஒன்று இருக்கும். துப்பாக்கி விசை இதனை தாக்கியவுடன் அதிலிருந்து தீப்பொறி கிளம்பி வெடிமருந்தை கொளுத்தும். எரிகிற வெடிமருந்துக்கு மிக குறுகிய இடமே குப்பியினுள் இருப்பதால்  அங்கு ஒரு பேரழுத்தம் உருவாகி அதன்காரணமாக குண்டு துப்பாக்கியிலிருந்து சீறிக் கிளம்பும். குப்பியினுள் தரப்படும் அழுத்தத்திற்கு தக்கபடிதான் குண்டின் வேகம் கூடும், அல்லது குறையும். எனவே துப்பாக்கிக் குண்டின் வேகத்தை நிர்ணயிப்பது குப்பியில் இணைக்கப்பட்டிருக்கும் குண்டு பிடிப்புதான். 

ஆனால் இத்தனை சக்தி மிக்க துப்பாக்கியால் சுடப்பட்டும் நீங்கள் இருவரும் பிழைக்கக் காரணம், சுடுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரவைகளின் தன்மை. இந்த ரவை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை.  இதை ராதா தன் வீட்டின் மேஜை டிராயரில் ஒரு தகர டப்பாவில் போட்டு வைத்திருந்திருக்கிறார். அந்த மேஜை டிராயரில் வேறு பல பொருள்களையும் அவர் வைத்திருந்ததால் தினமும் அதை பலமுறை திறந்து மூடவேண்டியதிருந்தது. சராசரியாக ஒரு நாளைக்கு 10 முறை திறந்து மூடினாலும் இந்த 15 வருடத்தில் அவர் ஐம்பதினாயிரம் முறைக்கு மேல் திறந்து மூடியிருந்திருக்கவேண்டும். 

ஒவ்வொரு முறையும் திறந்துமூடும்போது தகர டப்பாவில் இருந்த குண்டுகள்ஒன்றோடோன்று உரசியும் அடிபட்டும் அவற்றின் மேல் பிணைப்பாக இருந்த குழாயின் பிடிமானம் தளர்ந்துபோய்விட்டது. இதனால் குண்டின் பிடிப்பு, அழுத்தம் குறைந்து அதன் ஊடுருவும் சக்தி குறைந்துபோய்விட்டிருந்தது. இதனால்தான் அது தன் முழுச் சக்தியை வெளிப்படுத்தமுடியாமல் போனது. ஒரு கட்டத்திற்கு மேல் அது உடலை ஊடுருவாமல் தேங்கி நின்றது. இருவருக்கும் ஆபத்து இல்லாமல் போனது. நீங்கள் எமனை வெல்ல இதுதான் காரணம்” என சந்திரசேகர் எம்.ஜி.ஆரின் சந்தேகத்தைத் தீர்த்துவைத்தார். எம்.ஜி.ஆர் தடய அறிவியலின் முக்கியத்துவத்தை உணர இது காரணமானது.  
இப்படி நீதியை நிலைநாட்ட ஒரு வழக்கிற்கு பேருதவியாக தடய அறிவியல் துறை இருப்பதை அறிந்துகொண்ட அவர் தன் ஆட்சிக்காலத்தில் தடய அறிவியல் துறையின் மேம்பாட்டுக்குத் தாராளமாக உதவிகள் புரிந்தார்.

1984 ல் எம்.ஜி.ஆர் பக்கவாதம் தாக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவருக்குக் காந்த சிகிச்சை அளிக்கப்பட முடிவெடுத்தபோது துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் தொண்டையிலேயே குண்டுத்துகள்கள் தங்கிவிட்டதைக் கண்டுபிடித்தனர். அது உலோகமாக இருக்கும்பட்சத்தில் காந்த சிகிச்சையளிப்பது எம்.ஜி.ஆரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அதை உறுதி செய்ய சந்திரசேகரைத்தான் அணுகினார்கள். அவர் அவை உலோகம் அல்ல என உறுதியளித்தபின்னரே எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தடய அறிவியல் துறை வரலாற்றில் சந்திரசேகர் விட்டுச்சென்ற தடயத்தை யாராலும் அழிக்கமுடியாது!

அடுத்த கட்டுரைக்கு