Published:Updated:

நான் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்ட கரகாட்டக்காரி!

மெளனம் கலைக்கும் மோகனா

பிரீமியம் ஸ்டோரி

கரகாட்ட மோகனாவின் கண்ணாமூச்சு ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

நான் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்ட கரகாட்டக்காரி!

'ஆட்டக்காரங்களுக்கு கால்தான் முக்கியம்’ என்று சொல்வார்கள். நீதிமன்றத்தில் சரணடைய வந்த மோகனாவோ வலது கால் முழுக்க கட்டுடன் வீல் சேரில் உட்கார்ந்திருந்தார். மோகனாவுடன் அவரது அக்கா நிர்மலாவும் வந்தார். அவரையும் செம்மரக் கடத்தல் வழக்கில் போலீஸ் தேடி வந்தது. மோகனா, நிர்மலா இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கரகாட்ட மோகனாவை அவரது வழக்கறிஞர் பாபுராஜ் மூலமாகத் தொடர்புகொண்டோம். சிறையில் இருக்கும் மோகனாவுக்கு சில கேள்விகளைக் கொடுத்து அனுப்பினோம். அதற்கு பாபுராஜ் வழியாக பதில் கொடுத்திருந்தார் மோகனா. நமது கேள்விகளும் மோகனாவின் பதில்களும்....

''மோகனாம்பாள்தான் உங்கள் நிஜப்பெயரா... வேலூரில் என்ன தொழில் செய்துவந்தீர்கள்?''

''இல்லை... மோகனாதான் எனக்கு வீட்டில் வைத்த பெயர். கரகாட்டம் ஆட வந்ததால், மோகனாம்பாள் என்று நானே என் பெயரை மாற்றிக்கொண்டேன். ஆரம்பத்தில் நான் கரகம் எடுத்து ஆடினேன். இப்போது வயதாகிவிட்டதால் என்னிடம் பயிற்சி பெற்ற கிராமியக் கலைஞர்களை வைத்து கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கூத்து என்று விதவிதமான கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.''

''ஏன் திடீரென தலைமறைவானீர்கள்?''

''எனக்கு சில மாதங்களாகவே முட்டியில் கடுமையான வலி இருந்தது. நடக்கவே மிகவும் சிரமமாக இருந்தது. டாக்டர்களிடம் காட்டினேன். மூட்டு மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அந்த சூழ்நிலையில்தான் ஒருநாள் கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். முட்டியில் பலமான அடிபட்டுவிட்டது. சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து ஆபரேஷன் செய்துகொண்டேன். அந்த சமயத்தில்தான் போலீஸ் என் வீட்டுக்குள் புகுந்திருக்கிறது. என்னைத் தேடியிருக்கிறது. நான் வீட்டில் இல்லாததால், போலீஸ் என்னை ஏதோ கடத்தல்காரி போல சித்திரித்துவிட்டது. அதனால்தான் சிகிச்சைக்குப் பிறகு கோர்ட்டில் சரண்டராகிவிட்டேன்.''

''வேலூரில் உங்கள் வீட்டில் போலீஸ் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும் நகைகளையும் கைப்பற்றியுள்ளதே... அவை யாருடையவை?''

''என்னுடைய பணம்தான். கரகாட்டம் ஆடி சம்பாதித்தது. அப்படி வரும் பணத்தை வட்டிக்கும் விடுவேன். அதில் என்னுடைய வருமானம் அதிகமானது. என்னிடம் மொத்தம் 100 கலைக்குழுக்கள் இருக்கின்றன. இந்தக் குழுக்களில் தமிழ்நாடு மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். மூன்று மாநிலங்களிலுமே உள்ள முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் கரகாட்டம் என்றால் என்னைத் தொடர்புகொள்வார்கள். நான்தான் ஊருக்குத் தகுந்த மாதிரி குழுக்களைப் பிரித்து அனுப்புவேன். ஒரு குழுவுக்கு ஒன்றரை லட்சம் வரைகூட சம்பளம் வாங்கியிருக்கேன்.

ஒருகாலத்தில் மோகனாவோட கரகாட்டத்தைப் பார்க்கணும்னு பல மைல் தூரத்தில் இருந்தும்கூட வருவாங்க. கரகாட்டக்காரன் படம் வந்தபோது எல்லாம், 'மாங்குயிலே...பூங்குயிலே...’ பாட்டுக்கு நான் ஆடுறதை விடிய விடியக்கூட உட்கார்ந்து பார்த்திருக்காங்க. கரகத்தைத் தூக்கி தலையில் வைத்தால் ஆடி முடிக்கும் வரை கையில் தொடவும் மாட்டேன். இறக்கி வைக்கவும் மாட்டேன். இப்போதும் என்னிடம் இருக்கும் கரகாட்டக் குழு எல்லா ஊர்களுக்கும் போகிறார்கள். அவர்களை நான் வழிநடத்தி வருகிறேன்.''

''செம்மரக் கடத்தலில் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், கைப்பற்றப்பட்ட பணம் செம்மரக் கடத்தலில் உங்களுக்குக் கிடைத்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்களே?''

''போலீஸ் சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை. வட்டித் தொழிலிலும், கரகாட்டத்திலும் சம்பாதித்த பணம் அது. அத்தனைக்கும் என்னிடம் கணக்கு இருக்கிறது. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பேங்க்கில் போய் எனக்குப் பணம் போட்டு வைக்கத் தெரியாது. அதனால்தான் நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் வீட்டில் வைத்திருந்தேன். போலீஸ் என் வீட்டில் இருந்து எடுத்துக்கொண்டு போன பணத்துக்கு வரி கட்டச் சொன்னாலும் கட்டுவதற்குத் தயாராக இருக்கிறேன்.''

''செம்மரக் கடத்தலில் உங்கள் அக்கா மகன் சரவணன்தான் முக்கியக் குற்றவாளி என்று போலீஸ் அடையாளம் காட்டுகிறதே?''

''அதெல்லாம் எனக்குத் தெரியாது. சரவணனை நான் பார்த்து பல மாதங்கள் ஆகின்றன. அவனிடம் நான் பேசுவதுகூட கிடையாது. எப்போதாவது வீட்டுக்கு வருவான். செலவுக்குப் பணம் கேட்பான். நானும் கொடுப்பேன். மற்றபடி எதுவும் தெரியாது.''

''செம்மரக் கடத்தல் தொடர்பாக போலீஸ் கைதுசெய்த தி.மு.க பிரமுகர் பாபு உங்களுக்குப் பழக்கமா?''

''பாபுவா..? யார் என்று எனக்குத் தெரிய வில்லை. அந்தப் பெயரை நான் கேள்விப்பட்டதும் இல்லை. ஆளை நேரில் பார்த்தால்தான் அவர் எனக்குப் பழக்கமா இல்லையா என்று சொல்ல முடியும்.''

''உங்களுக்கு கொலை மிரட்டல் வந்ததால்தான் நீங்கள் சரணடைந்தீர்கள் என்றும் சொல்கிறார்களே?''

''எனக்கு கொலை மிரட்டலும் வரவில்லை. நான் தலைமறைவும் ஆகவில்லை. மூட்டு வலி பிரச்னையில் ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில் ஏதேதோ நடந்துவிட்டது. உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் நான் சரண்டர் ஆனேன். என்னை யார் மிரட்டப் போகிறார்கள்? அதற்கெல்லாம் நான் பயப்படும் ஆளும் இல்லை.''

''உங்களை இந்த விவகாரத்தில் சிக்கவைத்தவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?''

''என்னுடைய எதிரிகள்தான். என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கரகாட்டம் ஆட முடியவில்லை என்றாலும், மற்ற கலைஞர்களை ஆடவைத்து இவ்வளவு சம்பாதிக்கிறாளே என்று என்மீது பலருக்கும் பொறாமை. நான் இந்த தொழிலைவிட்டுப் போக வேண்டும் என்பது என் எதிரிகளின் எண்ணம். அதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தனர். என்னைப் பழிவாங்கிவிட்டனர். நான் சத்தியத்துக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்ட கரகாட்டக்காரி. சட்டப்படி இந்தப் பிரச்னையை எதிர்கொள்வேன். என் மீது தவறு இல்லை என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்.''

மோகனாவை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க முயற்சித்து வருகிறது. 'செம்மர கரகாட்டம்’ இப்போதைக்கு ஓயாதுபோல!

- நா.இள.அறவாழி

படம்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு