Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

னிதன் தினமும் எழுச்சி பெற்று வருகிறான். ஆனால் மனிதம்..?

ஒவ்வொரு நொடியும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த  வருத்தமே 'மனிதர்களின்’  வரவு செலவுக் கணக்கில் விஞ்சி நிற்கிறது. இரக்கம் ஏன் தேய்ந்து போகிறது? இதயம் ஏன் தொய்ந்து போகிறது? என்ற கவலை சமூக அக்கறையுள்ள அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது. இந்த வருத்தமும் அக்கறையும் இப்போதுதான் இருக்கிறதா? அல்லது முன்பும் இருந்ததா?

'இன்றைய இளைஞர்கள் அகந்தை​யுடன் இருக்கிறார்கள்; அவர்கள் பெரியவர்கள் பேச்சை மதிப்பதில்லை; ஆசிரியர்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதில்லை’  என்று அங்கலாய்த்துக்​கொண்டார் ஒருவர். இவர் நம்முடைய சமகாலத்தவர் அல்லர்.

சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த சாக்ரடீஸுக்கு இப்படி ஒரு வருத்தம் இருந்தது. எனவே, 'காலம் கெட்டுப்போன புலம்பல்’ காலந்தோறும் உண்டு. ஆனால், இது வெறும் புலம்பல் மட்டும்தானா? உண்மை அதற்குள் ஒளிந்துகொண்டு இருக்கத்தானே செய்கிறது. நாம் ஏன் இப்படி மாறிப்போனோம்?

நம் உடலில் லேசாகக் கீறினால் நம்முடைய குரங்குத்தனம் வெளிவந்துவிடும். ஏனென்றால், நம் நாகரிகம் என்பது மேம்போக்கான ஏற்பாடு; அழியும் முகப்பூச்சு. அதனால்தான், 'குரங்குகளிடம் இருக்கும் குரங்குத்தனத்தைக் காட்டிலும், மனிதனிடம் இருக்கும் குரங்குத்தனம் அதிகம்’  என்றார் நீட்ஸே.

குரங்குகளின் குரங்குத்தனம் ஓர் எல்லைக்குட்​பட்டது. ஆனால், மனிதனின் குரங்குத்தனம் எல்லையற்றது!

மனிதன் மாறி விட்டான்!

ஒரு வீட்டில் மேசையில் இருந்த கத்தியை ஒரு குரங்கு எடுத்துக்கொண்டு ஓடியது. வீட்டில் இருந்த அனைவரும் பயந்தனர். குரங்கைத் துரத்தி ஓடினர். பிடிக்க முடியாமல் பதற்றப்பட்டனர். அங்கிருந்த பெரியவர் ஒருவர், 'பயப்படாதீர்கள்! குரங்கு எடுத்தால் கவலைப்பட வேண்டியது இல்லை. மனிதன் எடுத்திருந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும்’ என்றார். கொஞ்சநேரத்தில் எடுத்த இடத்தில் கத்தியை வைத்துவிட்டு குரங்கு சென்றுவிட்டது. ஆனால், மனிதன் எடுத்துச் சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும். யாராவது கற்பனை செய்ய முடியுமா? ஏனென்றால், குரங்குகள் அணுகுண்டுகளைத் தயாரிப்பது இல்லை; தன்னுடைய இனத்தையே அழித்துப் பழி தீர்ப்பது இல்லை.

மனிதனின் வன்மமும் சுயநலமும் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புடையவை. 'சிறந்தவை நீடிப்பது இல்லை; தகுந்தவையே தம்மைத் தக்கவைத்துக்கொள்கின்றன’ என்ற பரிணாம வளர்ச்சியின் தத்துவத்தை டார்வின், மால்தூஸிடம் இருந்து பெற்றார். நம்மை 'மூன்றாவது சிம்பன்ஸி’ என்று ஜேரட் டைமண்ட் அழைப்பார். நம்முடைய மரபணுக்களில் இன்னும் நம்முடைய பழைய நினைவுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. நம்முடைய உணவு, செயல்பாடு என்று அனைத்திலும் நம்முடைய உடலமைப்பு பெரிதும் பங்களிக்கிறது. உடலே மனத்தைப் பாதிக்கிறது. மனம் பாதிப்பது சூழலால். உடலை பாதிப்பது மரபுவழிச் சரடு. மனிதன் மாறிவிட்டான் என்று சொல்வதற்குக் காரணம் உடலமைப்பு, மனம் ஆகியவற்றின் மாற்றங்களால்தான்!

இன்று மனத்தின் பல பிரச்னைகளுக்கு நம் ஜீன்களே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மது அருந்தத் தூண்டுவதற்கும், அதை கெட்டியாகப் பிடித்துக்கொள்வதற்கும் நம் உடலில் உள்ள குறிப்பிட்ட ஜீனே காரணமாக இருக்கிறது. அந்த ஜீன் இருப்பவர்கள் மதுவை முகர்ந்துகூட பார்க்காமல் இருந்தால், தப்பித்தார்கள். முகர்ந்துவிட்டால், மூழ்கியே விடுவார்கள்.

நம் கரு வளர்ச்சியில் நாம் மீன்கள், தவளைகள் எனப் பலவற்றின் கருவைப் போன்ற தோற்றங்களை அடைந்து உதிர்த்துக்கொண்டே வருகிறோம். சிறிது நேரம் நாமும் ஒரு செல் உயிராக இருக்கிறோம். நம் உடலுக்குள் லட்சம் ஆண்டுகளுக்கு மேல் நாம் அடைந்த மாற்றங்கள் இருக்கின்றன; அவை நம் ஆழ்மனத்தைத் தாக்குகின்றன. அவை செய்கைகளாக வெளிவருகின்றன. கொஞ்சம் சீண்டினால் உண்மை இயல்பு வெளிவந்துவிடுகிறது. நம் பிறப்பு, வளர்ப்பு அனைத்துமே உடலால் தீர்மானிக்கப்படுகிறது.

மனிதன் அடையும் வளர்ச்சியின் மறுபக்கமே, அவனுடைய வீழ்ச்சியின் தொடர்ச்சி. நாம் பல்கிப் பெருகவும் சிந்தித்து வளரவும் புதியன படைக்கவும், நிலையாகத் தங்கி விவசாயம் செய்யத் தொடங்கியதே காரணம். ஆனால் அப்போதுதான் நம் நோய்களும் உண்டாயின. நகரங்கள் பெருகின; ஜன சந்தடி கூடியது. நம் அறிவு, மருந்துகள் கண்டன; ஆயுள் அதிகரித்தது. உயிரை முட்டுக்கொடுத்து நிற்க வைக்கக் கற்றுக்கொண்டோம்.

நம் நாட்டில் 1920-ம் ஆண்டு வரை பிறப்பும் அதிகம்; இறப்பும் அதிகம். அதற்குப் பிறகு ஏற்பட்ட நச்சுயிர்க் கொல்லிகளின் உபயோகத்தால் இறப்பு குறைய, பிறப்பு அப்படியே நீடிக்க மக்கள்தொகைப் பெருக்கம். நாம் நெருக்கடியில் வாழும் நகர நெரிசலில் மாட்டிக்கொண்டோம். நம் அடிப்படை சுயநலம் சுருண்டு படுத்திருந்தது; இப்போது படமெடுக்கத் தொடங்கிவிட்டது.

இப்போதும் திறமையானவன் அல்ல; தகுந்தவனே தாக்குப்பிடிக்கும் இயற்கைத் தத்துவம். ரிச்சர்ட் டாகின்ஸ், 'சுயநல ஜீன் கோட்பாடு’ என்று கூறுவார். ஒரு மரபணு தன்னைக் கூடிய மட்டும் பெருக்கிக்கொள்வது பற்றியே அதிக முனைப்பு காட்டும் என்பார். அந்த அடிப்படையே, நம் பிறப்பும் வாரிசுகளும் பாரம்பரிய நீட்சியும். நாம் இயல்பில் சுயநலமானவர்கள். நாம் சுயநலமற்று இருப்பதும், சுயநல நோக்கம் குறித்தே. நம் உடலில்கூட மூளையை 'சுயநல மூளை’ என்பார்கள். நாம் உண்ணும் உணவில் முதல் 20 விழுக்காட்டை மூளை உறிஞ்சிக்கொள்ளும். அப்போதுதான் மற்ற அவயங்கள் இயங்க அது ஆணைப் பிறப்பிக்க முடியும். மூளையின் சுயநலம் உடலுக்கு உபாயமே தவிர அபாயம் அல்ல.

உடலின் சூட்சுமமும், அது உணர்த்தும் குறியீடுகளும் மனித இனத்துக்குப் பொதுவானவை. உடல்மொழியில் ஆங்கிலம், தமிழ் என்ற வேறுபாடு இல்லை.

நிற்கும்போதும் அமரும்போதும் கால்களை மடக்கும்போதும் கைகுலுக்கும்போதும், நாம் செய்கிற பல செயல்கள் ஒருவகையில் நம்முடைய உள்ளத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. நம் உதடுகள் பேசுவதைவிட உடல் பேசுவது அதிகம். நம் சொற்கள் சொல்வதைவிட நம் சைகைகள் உணர்த்துபவை நிறைய. நம் ஒவ்வொரு உடலசைவுக்குப் பின்னும் ஒரு பரிணாம வளர்ச்சிக் காரணம் உண்டு.

மனிதன் மாறி விட்டான்!

பாபூன் குரங்குகளிடம் இருக்கும் தலைமைப் பண்புகள் பத்தும் மனிதனிடமும் காணப்படுவதாக டெஸ்மண்ட் மாரிஸ் 'மனித உயிரியல் பூங்கா’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். நம் உருவ அமைப்புக்கும் புருவ அசைவுக்கும் பின்னால், பல லட்சம் ஆண்டுகள் இருக்கின்றன.

'மனிதனுக்கு சாகும் அவா உண்டு. சாகும் வேட்கையை வெல்லவே அவன் பிறரை சாகடிக்கின்றான்’ என்பார் சிக்மண்ட் ஃப்ராய்ட். தற்கொலைகள்கூட மரபணுத் தொடர்பு கொண்டவை என்பது அண்மைக் கண்டுபிடிப்பு.

நாம் மாணவனாக இருக்கலாம்; ஆசிரியராக இருக்கலாம்; அதிகாரியாக ஆகலாம்; தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்; பெண் பார்க்கச் செல்லலாம், பணியாளர்​களைத் தேர்வுசெய்யச் செல்லலாம்.

இப்படி எத்தனையோ சூழலில் ஒருவருடைய உடல் உணர்த்தும் குறிப்புகளைக்  கொண்டு நம்முடைய பணியை எப்படிச் செம்மையாக செய்வது, எதிரே இருப்பவர் நம்பகமானவரா என அறிவது என்று உடலில் தொடங்கி உடல் மொழி மூலம் உள்ளம் தொடும் முயற்சியே இந்தத் தொடர்.

அடுத்தவர் நேசிக்கும் மனிதராக மாற எப்படிப்பட்ட தோற்றம் தேவை?

எந்தப் புன்னகை உண்மையானது?

ஒவ்வொரு மனித உடலுக்கும் ஒரு வாசம் உண்டு தெரியுமா?

எதிரே இருப்பவர் நம்மிடம் பேச ஆர்வமாக இருக்கிறாரா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?

கெட்ட செய்தியைக் கேட்டால் வயிறு கலக்குகிறதே, எதனால்?

நுகரும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம். ஏன்?

நாம் அனைவருமே கீழே விழுவதுபோல ஒருமுறையாவது கனவு கண்டிருக்க வேண்டுமே... எதனால்?

சிலரைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்​போகிறதே... ஏன்?

பேசாதபோதும் நம் உடல் எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கிறதே...  அதை நாம் அறிவோமா? - என்றெல்லாம் உங்களோடு பகிர்ந்துகொள்ள​வே இந்தப் பயணம்.

பிரபஞ்சத்தைப் போல பிரமாண்டமான உடலை அறிய ஒரு குவியாடியோடு வந்திருக்கிறேன்;

கண்களையும் இதயத்தையும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

அன்புடன்

உங்கள் நண்பன்

இறையன்பு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு