Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

பெரும்பாலான பாலூட்டிகள் பார்வையாலும் குரல் யூகங்களாலும் தங்கள் வகையை அடையாளம் காண்கின்றன. கூட்டம் கூட்டமாக வாழும் பாலூட்டிகள் இன்னொரு உயிரைப் பார்த்தும் முகர்ந்தும், மற்றவற்​றைத் தெரிந்து​கொள்கின்றன. பூச்சிகள், சுவையாலும் மனத்தாலும் தங்கள் இனத்தை அறிகின்றன. பறவைகளோ பார்வையாலும் பாட்டாலும் உணருகின்றன.  மீன்களோ, ஒலியையும் கொஞ்சம் ஒளியையும் வைத்து அறிகின்றன. மின்மினிப் பூச்சிகள் இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கு. ஆண் பூச்சிகள், இனத்துக்குத் தகுந்தவாறு வித்தியாசமாக ஒளிரும் ஆற்றலைப் பெற்றிருக்​கின்றன. எது தங்கள் சாதி என்று பகுத்தறியவும், தங்கள் வகையைச் சார்ந்த பெண் பூச்சிகளை ஈர்க்கவுமே இந்த ஏற்பாடு. சில பூச்சிகள் அவற்றை உண்பவற்றை ஏமாற்ற இறகு​களில் வித்தியாசமான வண்ணங்​களை விரித்து வைத்து, அவற்றின் சுவையான உடலைக் காத்துக்கொள்கின்றன. மொனார்க் வண்ணத்துப் பூச்சிகள், சுவையில்லாத பட்டாம்பூச்சிகளின் வண்ணத்தை மிமிக்ரி செய்து பறவைகளிடம் இருந்து தப்பிக்கின்றன.

இப்படி ஒவ்வொரு உயிரினமும் வெவ்வேறு வகையால் மற்றவற்றை அறிகிறது. மனிதன் எப்படி அறியப்படுகிறான்?  

மனிதன் மாறி விட்டான்!

நம் உடல் ஒரு கடல். அது ஒரு நுண் பிரபஞ்சம். அறிவுக்கு அகப்படாத அதிசயம். நம் சொந்த உடலைப் பற்றியே நாம் இன்னும் அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். மனித உடல், இயற்கை சலித்துச் சலித்துச் செய்த இனிய உருவம். அதை இன்னும் முழுமையாக அறிய முடியாமல் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். கடலுக்குள் தேடுவதும் காட்டுக்குள் தேடுவதும், வெளியே இருந்து செய்கிற முயற்சி. உடலுக்குள் தேடுவது படைப்பு ரகசியங்களை அறியும் சாகசப் பயணம்.

கனடாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவரான  ஃபிரடெரிக் கிரான்ட் பேன்டிங், நீரிழிவு நோய்க்கான மருந்தை முதன்முதலில் தயாரித்தார். முதலில் நாய்களிடம் ஒரு பரிசோதனையை நடத்தினார். அப்போதுதான் கணையநீர் சுரப்பியில் (பேங்க்ரியாஸ்) சிறு தீவுகளைப்போல லாங்கர்ஹான்ஸ் என்கிற சுரப்பி இருப்பதைக் கண்டுபிடித்தார். அது இன்சுலின் என்கிற திரவத்தைச் சுரப்பதையும் அறிந்தார். இன்சுலின் சர்க்கரையை ஆவியாகச் செய்வதால், நம் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரில் சர்க்கரை இல்லாமல் இருக்கிறது என்பதை அவர் உணர்ந்தார். அதன்பிறகு  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் ஒருவனுக்கு அளித்தார்.

அடுத்தநாள் காலை அந்த நோயாளிக்குத் தொலைபேசி செய்தார். மறுமுனையில் இருந்து வந்த குரலில்,  புத்துணர்ச்சிப் புலப்பட்டது. அந்த நபர், முதல் நாள் மாலை ஒரு மாயாஜால மருந்து தன் உடலில் செலுத்தப்பட்டதாகவும், அதன்மூலம் உடல்நிலை சீரானதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். அந்தக் கண்டுபிடிப்பே அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வழிவகுத்தது.

மனித உடல் என்பது பல விசித்திரங்களின் தொகுப்பு. உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அவசியமான பணி ஒன்றை ஏற்றுக்கொண்டு ஓயாமல் உழைக்கின்றன. உறுப்புகள் ஓய்வெடுத்தால், உடல் வாய்வெடுத்துவிடும்.  உறுப்புகளுக்கு மட்டும்தான் வாய்தா இல்லை.

இத்தனை நுட்பங்கள் நம் உடலில் எப்படிப் புகுந்துகொண்டன?

நம் நெருங்கிய உறவினர் என்று பார்த்தால் சிம்பன்சிதான். நம்முடைய மரபணுவும் சிம்பன்சியின் மரபணுவும் 98.4 சதவிகிதம் ஒத்துப்போகின்றன.  வித்தியாசம் 1.6 சதவிகிதம்தான். கொரில்லாவுக்கும் நமக்கும் 2.3 சதவிகிதம்தான் வேறுபாடு. இந்தக் குறைந்த மரபணு மாற்றத்தில் இத்தனை முன்னேற்றங்கள் நம் உடலில் ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.  நம் சிவப்பு ரத்த அணு, சிம்பன்சியின் 287 யூனிட்டுகளோடு ஒத்துப்போகின்றன. அப்படிப் பார்த்தால் ஜேரெட் டைமண்ட் கூறுவதைப்போல 'நாம் சிம்பன்சி குடும்பத்தின் மூன்றாம் இனம்’. அவ்வளவுதான்! எப்படி இந்த மூன்றாம் இனம் உலகம் முழுவதும் பரவி உலகத்தைத் தாண்டி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என்பது சுவாரஸ்யமான ஆராய்ச்சி.

கணக்கற்ற அண்டங்கள் இருக்கும்போது பூமியில் மட்டும் எப்படி உயிர் வந்தது என்ற கேள்வியில் இருந்து தொடங்கினால்தான் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். கோல்டிலாக் விதிகள் பூமிக்குக் கச்சிதமாக பொருந்தியதால்தான், உயிர் இங்கு தோன்றியது. சரியான அளவுக்கு வெப்பம், எண்ணற்ற வேதியியல் கூறுகள், உயிர் தோன்றத் தேவையான திரவம் என்ற மூன்றும் பூமியில் ஏற்பட்டபோதுதான், வேதியியல் கூறுகள் கன்னாபின்னாவென்று இணைந்து உயிர் தோன்றியது. நுண்ணுயிரில் இருந்து மரபுக் கூறுகள் மாற்றமடைந்து பலவித உயிர்கள் உருவாகத் தொடங்கின. பனியுகத்தின்போது மரங்களில் இருந்து சமவெளிக்கு வந்த குரங்குகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டன. அவை சூழலுக்கேற்ப கிளைகளாகப் பிரிந்தன.

தாவ முடியாத சூழலில் வேட்டையாடி உயிர்வாழத் தள்ளப்பட்ட ஓர் உயிரினம் உருவானது. அந்த இனம் பழங்களை நம்பி வாழ முடியாது. புலிகளோடும் ஓநாய்களோடும் போட்டிபோட முடியாது. நகங்கள் இல்லை, கூர்மையான பற்கள் இல்லை. அது தன்னைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. நெருக்கடிகளின்போதுதான் நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஆற்றல் நம்மையும் அறியாமல் உடலில் இருந்து வெளிப்படும். பருந்து வருகிறபோதுதான் குஞ்சுகளைக் காப்பாற்ற கோழி பறந்து எதிர்க்கிறது அல்லவா? அதனைப்போல!  

இந்த இடைப்பட்ட இனம் இரண்டு கால்களில் நிற்க முயன்றது.  கொரில்லாவும் சிம்பன்சியும்கூடப் பின்னங்கால்களில் நிற்க முடியும். ஆனால், கொஞ்சம் நேரம்தான்.  இந்த இடைப்பட்ட குரங்கு மனிதன் இரண்டு கால்களில் நின்று நின்று பயிற்சி எடுத்து, முதுகுத்தண்டு அதற்குத் தோதாக வளைய, இப்போது அதில் முன்னேற்றம் பெற்றான்.  

அப்படிச் செய்யும்போதெல்லாம் கைகள் இரண்டும் விடுதலையாயின.  அவற்றைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டாவதாக, கூட்டமாக வாழ்ந்தால்தான் பலமான எதிரியை சமாளிக்க முடியும். எனவே, கும்பல் கும்பலாக வாழத் தொடங்கினான். மூன்றாவதாக, தந்திரமாக இருந்தால்தான் தப்பிக்க முடியும். எனவே, எதிரிகளைக் காட்டிலும் தந்திரமாக வாழக் கற்றான். அதற்கு அவனுடைய விடுபட்ட கைகள் உதவின.  

கைகளைக் கொண்டு கல்லில் ஆயுதங்கள் வடித்தான். மரத்தில் கட்டைகள் உருவாக்கினான். நெருப்பை அறிந்தான். அவன் சுயநலமாக இருப்பதற்கு, சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் சாத்தியம் என்பதை அறிந்துகொண்டான்.  எனவே கூட்டத்துக்குள் இருக்கும் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் அனுசரிக்க ஆரம்பித்தனர். அவன் உடல் படிப்படியாக பரிணாம வளர்ச்சியடைந்தது.    அவன் மூளை பெரிதாகத் தொடங்கியது. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாய் நிமிர்ந்த மனிதன் உருவானான். ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்திக்கும் மனிதன் உருவானான். அவன் மூளை இப்போது சிம்பன்சியின் மூளையைப்போல மூன்று மடங்கு. 1,400 மில்லி லிட்டர். எல்லாம் அந்த 1.6 சதவிகித மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றங்கள்.  

நம்மைக் காட்டிலும் இன்னும் ஒரு சதவிகிதம் மரபணு மாற்றம் கொண்ட இன்னோர் இனம், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகத்தான்  போகிறது. ஒருவேளை அவ்வாறு ஓர் இனம் உருவானால், நியான்டர்தல் என்கிற ஆதி மனிதனை முற்றிலுமாக, க்ரோமேக்னன் என்கிற வளர்ச்சியடைந்த ஆதி மனிதன் முழுவதுமாக அழித்ததைப்போல நம் இனம் சுவடில்லாமல் போய்விடாதா? அதற்குள் எப்படி நாம் சுதாரித்துக்கொள்ளப்போகிறோம்?

 - அறிவோம்!

 விடை தேடுங்கள்... தொடரின் முடிவில் விடை தருகிறேன்!

 1. சிம்பன்சிகளுக்கு நெருங்கிய உறவினர் யார்?

அ) பாபூன் குரங்கு

ஆ) கொரில்லா

இ) ஒராங்குட்டான்

ஈ) மனிதன்

 2. நாம் சட்டை அணியும்போது முதலில் எந்தப் பக்க கையை முதலில் நுழைக்கிறோம்?

அ) ஆண்களாக இருந்தால் முதலில் வலது கை

ஆ) பெண்களாக இருந்தால் முதலில் இடது கை

இ) இருவருமே வலது கை மூலம்தான்

ஈ) ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரியாக!

 3. நட்சத்திர ஹோட்டல்களில் ஆறேகால் அடிக்குமேல் இருக்கும் உயரமான மனிதர், எடுப்பான மகுடத்தைப் போன்ற தலைப்பாகையுடன் நின்றிருப்பது எதனால்?

அ) விடுதிக்கு கம்பீரத்தை அளிப்பதற்கு

ஆ) விருந்தினர்களின் பாதுகாப்புக்காக

இ) ரவுடிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்காக

ஈ) அவ்வளவு கம்பீரமானவர் நம் காரின்

கதவைத் திறக்கும்போது, நம்மையும் அறியாமல்

நம் தன்முனைப்பு திருப்திபடுவதற்காக.

 4. மனிதப் புலன்களில் முதன்மையானது எது?

அ) சுவைத்தல்

ஆ) கேட்டல்

இ) நுகர்தல்

ஈ) பார்த்தல்

 5. நம் உடலில் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து தேய்மானம் அடைகிற உறுப்பு எது?

அ) மூளை

ஆ) இதயம்

இ) பல்

ஈ.) அனைத்துமே

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு