Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

ஓர் எலி ஏன் சீக்கிரம் செத்துப்போகிறது? ஒரு பட்டாம்பூச்சியின் வாழ்நாள் ஏன் நாட்கணக்கில் மட்டுமே இருக்கிறது? மனிதன் எப்படி இத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறான்? இவை எல்லாம் புதிரான தகவல்கள்.

எல்லா உயிர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் உள்ள இதயத் துடிப்புகள் சமமானவை. சில பிராணிகள் விரைவாகத் துடித்து முடிந்து போகின்றன. சில நிதானமாகத் துடித்து நின்று வாழ்கின்றன.

'உடலின் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) நிறையைப் பொருத்து அமைகிறது’ என்று க்ளீபர் என்பவர் கண்டுபிடித்தார். அதாவது, ஒரு பசுவைவிட அணிலின் எடை ஆயிரம் மடங்கு குறைவு. ஆயிரத்தின் வர்க்கமூலம் 31. முப்பத்தொன்றின் வர்க்கமூலம் 5.5. எனவே, பசுவின் இதயத் துடிப்பு அணிலின் இதயத் துடிப்பைவிட 5.5 மடங்கு குறைவு. அதனால், அது அணிலைப்போல 5.5 மடங்கு அதிக ஆண்டுகள் உயிர் வாழ்கிறது. இதுவே உயிர் ரகசியம்.

நாம் அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கு, நலிவடையும் பாகங்களைப் பழுதுபார்க்க நம் உடல் கற்றுக்கொண்டதுதான் காரணம். மிகவும் தாமதமாக இனவிருத்திச் செய்யும் பருவத்தை நாம் அடைவதற்கும் இதுதான் காரணம். ஓர் எலி இரண்டாம் பிறந்த நாளை கொண்டாடுவதுகூட கடினம். மனிதன் எளிதில் 82-வது பிறந்தநாளைக்கூடக் கொண்டாடிவிட முடியும்.  நம் வாழ்நாளை நீட்டிப்பதற்கு உடலை நாம் புரிந்துகொண்டது முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக ரத்தத்தைப் பற்றி!  

மனிதன் மாறி விட்டான்!

இதயம் எப்படி செயல்படுகிறது என்ற குழப்பத்தில் மனிதன் இருந்தபோது, அதில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஃபேப்ரிகஸ். பெரிய வெய்ன்களில் பெரிய வால்வு இருப்பதைக் கண்டுபிடித்தார். அவை எப்படி பணியாற்றுகின்றன என்பதையும் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். ஆனாலும், வெய்ன்கள் மூலமாக ஒரு திசையில்தான் ரத்தம் செல்ல முடியும் என்பதை உணர முடிந்தது. அதற்கு மேல் என்னாகிறது என்பதைப் பற்றி அவரால் அறிய முடியவில்லை.  

சில நேரங்களில் ஆசிரியர்கள் செய்ய முடியாததை, அவர்களின் மாணவர்கள் சாதித்துக் காட்டுகிறார்கள். ஃபேப்ரிகஸுக்கு ஹார்வி என்கிற மாணவர் இருந்தார். அவர், இதயத்தைக் கூர்ந்து படித்தார். ரத்தம் இதயத்துக்கு வெய்ன்கள் மூலமாகச் செல்வதையும், அவை திரும்பி வராதபடி வால்வுகள் தடுப்பதையும் கண்டுபிடித்தார். இதயத்தில் இருந்து ஆர்ட்டரிகள் மூலமாக ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு வெளியே செல்வதையும், அந்த ரத்தம் திரும்பி வராமல் இருக்க ஆர்ட்டரியில் வால்வு இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். ஒரு ஆர்ட்டரியை ரத்தம் ஓட முடியாதபடி கட்டினால், இதயம் உப்புவதைக் காண்பித்தார். வெய்னைக் கட்டினால் இதயம் உப்பாமல் இதயத்துக்குப் பக்கவாட்டில் இருக்கும் ஒரு பகுதி உப்புவதைக் காண்பித்தார்.

1628-ம் ஆண்டு 72 பக்கங்களே கொண்டே ஹார்வியின் புத்தகம் வெளியானது. எல்லா குறிப்புகளிலும் தன் முதல் எழுத்தைப் பதிவுசெய்வது ஹார்வியின் வழக்கம். அவருடைய குறிப்புகள் இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 1615-ம் ஆண்டே ரத்தச் சுழற்றியைப்பற்றி கண்டுபிடித்திருந்தாலும், 15 ஆண்டுகள் கழித்து தயக்கத்தோடுதான் வெளியிட்டார் என்பது புரிகிறது. அது மருத்துவத் துறையின் ஒரு புரட்சிகரமான புத்தகம்.

பழமைவாதத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடிய மருத்துவர்கள், ஹார்வியைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஹார்வி இருக்கும் வரை ஆர்ட்டரியையும் வெய்ன்களையும் இணைக்கும் ரத்தக்குழாய்களைப் பற்றிய நுண்மை கண்டுபிடிக்கப்படவில்லை.  

உடல் என்பது ஒன்றுக்கொன்று பின்னப்பட்ட செயல்பாட்டுக்கூறுகளின் ஒருங்கிணைப்பு என்கிற கருத்து உருவாக, ஹார்வியின் கண்டுபிடிப்பு உதவியது. ஆர்ட்டரிகளையும் வெய்ன்களையும் இணைக்கிற நுண்குழாய்கள் மார்செல்லோ மால்ஃபிகியால் கண்டுபிடிக்கப்பட்டது. மைக்ராஸ்கோப்பைக் கண்டுபிடித்த பிறகுதான் அது சாத்தியமானது. அவரே லென்ஸ்களைப் பயன்படுத்தி உடல் பற்றிய நுட்பங்களைக் கண்டுபிடித்தார். கேப்பிலரிஸ் என்கிற நுண்குழாய்கள் மூலம் பல பரிமாற்றங்கள் நடப்பதை அவர் கண்டுபிடித்தார்.

ஆன்டன்வான் லீவான் ஹுக் என்கிற ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்ராஸ்கோப்புகளைக் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்.  தட்டுப்படுவதையெல்லாம் அவர் அந்தக் கருவியில் வைத்துப் பார்ப்பது வழக்கம். அப்படி, தலைப்பிரட்டையின் வாலிலும், தவளையின் காலிலும் ரத்தச்சுழற்சியை முதலில் அவர் கண்டுபிடித்தார். ஒருநாள் தேங்கிக்கிடந்த சாக்கடை நீரைத் தன்னுடைய மைக்ராஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது, வெறும் கண்ணுக்குத் தெரியாத சில நுண்ணுயிர்கள் தென்பட்டன. அவற்றுக்கு உயிர் இருப்பதற்கான அத்தனை லட்சணங்களும் தெரிந்தன. அவற்றை அவர் 'அனிமல்க்யூல்’ என்று அழைத்தார். அதுவே பின்பு, 'முதல் விலங்குகள்’ என்று பொருள்படும் புரோட்டோசோவா என்கிற கிரேக்கச் சொல்லைத் தரித்துக்கொண்டது. அதன் மூலமே மைக்ரோபயாலஜி என்கிற புதிய அறிவியல் பிரிவு பிறந்தது.  

ராபர்ட் ஹுக் என்கிற இங்கிலாந்து விஞ்ஞானி, உயிரியல் வளர்ச்சியில் மைல்கல்லாகக் கருதப்படும் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை முன்வைத்தார்.  அவர் மைக்ராஸ்கோப்களால் வசீகரிக்கப்பட்டவர். அவற்றின் மூலம் பார்த்தவற்றை அவர் அழகான ஓவியங்களாகத் தொகுத்து 1665-ம் ஆண்டில் மைக்ரோக்ராஃபியா என்கிற புத்தகத்தை வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் இருந்த ஓர் ஓவியத்தைப் பற்றிய முக்கியத்துவத்தை அவரே அப்போது உணரவில்லை. கார்க் மரத்தின் ஒரு துண்டை மைக்ராஸ்கோப்பில் பார்த்து அவர் வரைந்திருந்த ஓவியமே அது. அதில் சின்ன செவ்வக அறைகளால் ஆன ஒரு சித்திரம் இருந்தது. அதற்கு செல் என்று பெயரிட்டார். செல் என்றால் சிறிய அறை என்று பெயர்.  

18-ம் நூற்றாண்டில் மைக்ராஸ்கோப்களின் வளர்ச்சி போதிய அளவு எட்டியதும் உயிரியல் கண்டுபிடிப்புகள் தேங்க ஆரம்பித்தன.  1820-ம் ஆண்டு அக்ரோமேட்டிக் மைக்ராஸ்கோப்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது மறுபடியும் உயிரியல் பாய்ச்சலில் செல்ல ஆரம்பித்தது.  

விஞ்ஞானிகள் சில நேரங்களில் இல்லாதவற்றையும் கற்பனை செய்துகொள்ளத் தொடங்கினர். கண்ணுக்குத் தெரியாதவற்றை எல்லாம் பார்க்க முடிந்ததும், ஆர்வத்தின் உந்துதலால் எதை எதையோ சொல்லி காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டனர். விந்துவில் மனித உருவங்கள் இருப்பதைப்போல படங்கள் வரைந்து காண்பித்தனர். அந்த மனித உருக்குள் இன்னொரு மனித உரு ஒளிந்திருப்பதைப்போல எல்லாம் காட்சிப்படுத்த ஆரம்பித்தனர் இது பரிணாம வளர்ச்சிக்கு முற்றிலும் தடையான ஒன்று.

இந்தக் கருத்தை நோக்கி எதிர்க்கணையை முதலில் செலுத்தியவர், காஸ்பர் ஃபிரடெரிக் உஃல்ப் என்கிற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி. அவர் 1759-ம் ஆண்டு தன் 26-ம் வயதில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். 'செடியின் வளரும் தண்டு பாகுபடுத்தப்பட்ட, பொதுவான படிவங்களைக் கொண்டுள்ளது. அது வளர வளர பாகுபாடு அடைந்து ஒரு பகுதி மலராகவும், இன்னொரு பகுதி இலையாகவும் மாறுகிறது. அதைப்போலவே முட்டைக்குள் இருக்கும் கரு வளர வளர பாகுபாடு அடைந்து தலை, சிறகு, கால் போன்ற கோழிக்குஞ்சின் பாகங்கள் உருவாகின்றன’ என்பதை அவர் ஆய்வு செய்தார். சிறிது சிறிதாக சிறப்படைவதும், தனி பாகங்களாக உருவாவதும் நடக்கின்றன என்பது அவரால் முன்மொழியப்பட்டது.  

ஜேவியர் பிகாட் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர், 'உடம்பின் ஒவ்வொரு பகுதியும் குறிப்பிட்ட தோற்றத்தைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அவற்றில் இருக்கும் செல்களின் தொகுப்பே’ என்றார். அதை அவர் திசுக்கள் என்று அழைத்தார். அவரே ஹிஸ்டாலஜி என்கிற திசு இயலை தொடங்கிவைத்தவர். மனித உடலின் உறுப்புகள் வெவ்வேறு திசுக்களால் ஆனவை. இதயத்தில் இருக்கும் திசுக்களும், கல்லீரலில் இருக்கும் திசுக்களும் வேறுபட்டவை.  

ராபர்ட் ஹுக் முன்வைத்த செவ்வக செல்களின் உள்ளே பிசுபிசுவென்ற திரவம் இருப்பதை, செகஸ்லோவேக்கியாவைச் சேர்ந்த பர்க்கின்ஜி என்கிற விஞ்ஞானி முன்வைத்தார். முட்டைக்குள் இருக்கும் உயிருள்ள கரு பொருளை அவர் புரோட்டோபிளாசம் என்று அழைத்தார்.  

செல்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட உயிரியல் அறிஞர்கள், உயிருள்ள திசுக்கள் எல்லாவற்றிலும் அவை இடம்பெற்றிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தனர். ஷ்வான் என்பவர் தாவரங்கள் மட்டுமல்ல, விலங்குகளும் செல்களால் நிர்மாணிக்கப்பட்டவை என்கிற கருத்தை முன்வைத்தார்.  ஒவ்வொரு செல்லும் ஒரு மெல்லிய சவ்வால் மூடப்பட்டிருக்கிறது என்பதையும் அவர் முன்வைத்தார். ஷ்லீடன், ஷ்வான் என்கிற இருவருமே சைட்டாலஜி என்கிற செல்கள் பற்றிய புது அறிவியல் கிளை தொடங்க காரணமாக இருந்தார்கள்.  

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கொல்லிக்கர் என்பவர் முட்டையும், உயிரணுவும் தனித்தனி செல்கள் என்பதை முன்வைத்தார். கண்ணுக்குத் தெரிகிற மாதிரி இருக்கும் பறவைகளின் முட்டையும் தனி செல்தான் என்பதையும் அவர் தெரிவித்தார். சினையான முட்டையும் தனி செல்லே என்பதை அவர் உறுதிப்படுத்தினார். விலங்குகளுக்குள் உள்ள வேறுபாட்டை அவற்றின் செல்களின் வளர்ச்சி மூலம் அறிந்துகொள்ள முடியும்.

ரத்தமும் பணமும் ஒரே குணமுடையவை. இரண்டும் சுழற்சியில் இருந்தால்தான் ஆரோக்கியம்!

விடை தேடுங்கள்...

தொடரின் முடிவில் விடை தருகிறேன்!

1. உங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தினரை சாப்பிட அழைக்கிறீர்கள். எப்படி பரிமாறுவீர்கள்?

அ) எல்லா பதார்த்தங்களையும் இலையில் வைத்து நிரப்பிய பிறகு சாப்பிடக்  கூப்பிடுவேன்.

ஆ) வந்த பிறகு பதார்த்தங்களைப் பரிமாறி ஈ மொய்க்காமல் பார்த்துக்கொள்வேன்.

இ) விருந்தினர் அமர்ந்த பிறகு, ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும் சொல்லி அவர் அனுமதி பெற்று பரிமாறுவேன்.

2. உங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் நபர் வந்த ஐந்து நிமிடத்திலேயே சட்டையில் இருந்து கார் சாவியை எடுத்து பார்த்துக்கொண்டே இருக்கிறார். அதன் பொருள்.

அ) அந்த சாவிக்கொத்தின் அழகை நமக்குக் காட்ட விரும்புகிறார்.

ஆ) புதிதாக கார் வாங்கியிருப்பதை நமக்கு சூசகமாகச் சொல்ல விரும்புகிறார்.

இ) அவர் உடனடியாகப் போக வேண்டும் என உணர்த்துகிறார்.

3. உங்கள் பணியாளர் தவறு செய்தால்?

அ) நான் கண்டிப்பானவன் என உணர்த்த அனைவர் முன்பும் கண்டித்து மற்றவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவேன்.

ஆ) முதல் முறை மன்னிப்பேன்

இ) தனியாக அழைத்து கண்டிப்பேன்.

ஈ) எழுத்து மூலம் எச்சரிக்கை தருவேன்.

4. எப்போதும் அலுவலகம் பற்றியே பேசிக்கொண்டிருப்பவர்கள்

அ) உழைப்பு போதை கொண்டவர்கள்

ஆ) செய்யும் தொழிலே தெய்வம் என நினைப்பவர்கள்

இ) டென்ஷன் பேர்வழிகள்

ஈ) நிர்வாகத் திறன் அற்றவர்கள்

5. நல்ல தகவல் தொடர்பாளராக இருப்பதற்கு முக்கியமான தகுதி

அ) சரளமாகப் பேசும் திறன்

ஆ) உடல்மொழியோடு பேசுதல்

இ) பார்வையாளருக்கேற்ப பேசுதல்

ஈ) கவனித்தல்

- அறிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு