Published:Updated:

மனிதன் மாறி விட்டான்!

மனிதன் மாறி விட்டான்!

பிரீமியம் ஸ்டோரி
மனிதன் மாறி விட்டான்!

ஒருவர் தொலைபேசியில் உரையாடும்போது அவருடைய உரையாடலைக் கேட்காமலேயே... தொலைவில் இருந்தே அவர் யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ளலாம். தலையைக் குனிந்துகொண்டு பேசினால், 'மேலதிகாரியிடம் பேசுகிறார்’ என்று பொருள். நேராக வைத்துக்கொண்டு பேசினால், 'தனக்குக் கீழ் பணிபுரிபவரிடம் பேசுகிறார்’ என்று பொருள். தலையை அசைப்பதை மட்டும் மும்முரமாக செய்தால், 'மனைவியிடம் பேசுகிறார்’ என்று பொருள். முதுகைத் திருப்பிக்கொண்டுப் பேசினால், 'காதலியிடம் பேசுகிறார் ’ என்று பொருள். இப்படி எளிதில் சொல்லிவிட முடியும்.  இரண்டு பேர்  ஓரிடத்தில் அமர்ந்து பேசும்போது, யார் மேலதிகாரி என்பதை ஒருவருடைய தோரணையில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்.  ஒய்யாரமாக அலட்டிக்கொள்ளாமல் பேசுபவர் அதிகாரி. அவர் பேசுகிற அபத்தங்களையும் அர்த்த சாஸ்திரத்தைக் கேட்பதைப் போல் குறிப்பெடுப்பவர் பணியாளர். சாரு ரங்னேங்கர் சொல்வதைப்போல, 'யார் அடுத்தவர்கள் நேரத்தை அதிகம் வீணடிக்கும் உரிமை பெற்றவரோ, அவரே மேலதிகாரி’!

நாம் நிற்கிற தோரணை நம்முடைய மனநிலையை வெகுவாகப் பாதிக்கும். கைகளை இடுப்பின் மேல் வைத்திருப்பதைப்போல பெரும்பான்மையான சிலைகளைப் பார்க்கலாம். அது அதிகாரத்துக்கான தோரணை. இடுப்பில் கைவைத்து நெஞ்சை நிமிர்த்தி நேராக நின்றால், அது தலைமைப் பண்பைக் குறிக்கிறது. அது தோரணையோடு நின்றுவிடாமல் உடலில் பல மாற்றங்களையும் செய்கிறது. ஆதிக்கத் தோரணையில் நிற்கும்போது ஊக்க சக்தியை அளிக்கிற டெஸ்டோஸ்டிரான் என்கிற ஹார்மோன் அதிகம் உற்பத்தியாகிறது. பயத்தை ஏற்படுத்தும் கார்டிசால் உற்பத்தி குறைகிறது. பனிந்து, குனிந்து, குழைந்து ஒரு கையை வாயில் வைத்து அடங்குகிற தோரணையில் ஒருவர் நின்றால், அவருக்கு டெஸ்டோஸ்டிரான் குறைந்து கார்டிசால் அதிகமாகிறது.  அவர் இன்னும் பதற்றப்படுகிறார். அப்படிப்பட்டவர் குட்டக் குட்ட குனிகிறார்.  

மனிதன் மாறி விட்டான்!

நாங்கள் ஐ.ஏ.எஸ் ஆளுமைத் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு ஒரு பயிற்சி அளிக்கிறோம். தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு, ஐந்து நிமிடங்கள் நேராக நின்று நெஞ்சை நிமிர்த்தி சுயமனோவசியம் செய்யச் சொல்கிறோம்.  அப்படிச் செய்த பிறகு உள்ளே போனால் உறுதியாக ஆளுமைப் பண்போடும் அழுத்தம் திருத்தமாகப் பதில்களைச் சொல்ல முடியும்.  மனம் மட்டும் உடலை பாதிப்பது இல்லை; உடலும் மனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கம் மனநிலையில் மறுமலர்ச்சியை  அளிக்கிறது.  அது நடத்தையாக வெளிப்படுகிறது. அது பயன்களை அள்ளித் தருகிறது.  எனவே, நாம் நிற்கும் தோரணையும், நடக்கும் தோரணையும் நம் வாழ்க்கையே மடைமாற்றம் செய்யக் கூடியது.

மொழி என்றால் நாம் பெரும்பாலும் சொற்களைக் கொண்ட பேச்சு மொழியையே கற்பனை செய்துகொள்கிறோம். நம்மைப் பொறுத்தவரை எழுத்தும் வார்த்தைகளும் ஒலியுமே சொற்கள்.  நம் தகவல் பரிமாற்றத்தில் ஏழு சதவிகிதம்தான் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.  38 சதவிகிதம் நம்முடைய குரல் ஒலியின் அளவு, சொற்களின் வேகம் கொடுக்கிற இடைவெளி ஆகியவற்றைப் பொருத்து அமைகிறது.  

ஒருவரிடம், 'நீ ஆஸ்திரேலியா போகிறாயா?’  என்பதை ஒரு காகிதத்தில் எழுதி கேட்டால் ஒரே பொருள்தான். ஆனால் ஏற்ற இறக்கங்களோடு இதே கேள்வியை கேட்கிறபோது அது வினாவாக இருக்கலாம், வியப்பாக இருக்கலாம், 'புருடா விடுகிறாயா?’ என்கிற எண்ணம் தொனிக்கலாம், 'உன்னை எல்லாம் யார் ஆஸ்திரேலியாவில் அனுமதிப்பார்கள்!’ என்கிற நக்கல் இருக்கலாம், இப்படி ஒரே வாக்கியத்தை உச்சரிக்கும் விதத்தின் மூலம் அதில் நட்பையோ, பகைமையையோ காட்ட முடியும்.

அடுத்ததாக 55 சதவிகிதம் உடல் மொழியின் மூலம் வெளிப்படுத்துகிறோம். தொட்டுக்கொள்வது, நெருங்கி வருவது, பேசும்போது பார்க்கிற திசை,  சைகைகள், தலையசைவு, உடற்தோரணை, முகபாவனை, கண் அசைவு போன்றவற்றின் மூலம் நாம் கணக்கற்ற தகவல்களைத் தெரிவித்துக் கொண்டே இருக்கிறோம். இது மனிதர்களிடம் மட்டும் இல்லை; உயிரற்றவற்றோடும் இருக்கிறது.  

ஒருவர் புதிதாக வாங்கிய காரின் முன்பு ஒரு காலை வைத்து நின்றால், இது என்னுடைய கார் என்று அவர் சொல்லாமல் உணர்த்துகிறார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு அந்த தோரணை இருக்காது.  காரணம் ஷாப்பிங் போகும்போது, அந்த கார் அவருடைய மனைவியினுடையது,  பள்ளிக்கூடம் போகும்போது குழந்தைகளுடையது,  கோயிலுக்குப் போகும்போது மாமனார் மாமியாருடையது, பெட்ரோல் போடும்போது மட்டும்தான் அவருடையது என்கிற உண்மை நான்கு மாதங்களில் அவருக்குப்  புரிந்துவிடும்.  'ஒரு நாளைக்கு நாம் பயன்படுத்தும் சொற்களைப் பதிவுசெய்து கேட்டால், அது 11 நிமிடங்களுக்குத்தான் வரும்’ என்கிறார் ஒரு மொழியியல் அறிஞர். இது வெளிநாடுகளுக்குப் பொருந்தும். நம்மூரில் திருமணம் நடந்ததில் இருந்து ஏற்பட்ட சம்பவங்களை ஜாடைமாடையாகக் காட்டி சண்டை போட்டுக் கொள்ளும் தம்பதியருக்கு இது பொருந்தாது என்றே நினைக்கிறேன்.  

உடல் மொழிகள் மனிதனுக்கு மாத்திரம் இல்லை, விலங்குகளுக்கும் உண்டு.  ஒரு நாய் குரைப்பதை வைத்தே அது வெகுநாள் கழித்து எஜமானரைப் பார்த்துக் குரைக்கிறதா, திருடனைப் பார்த்து குரைக்கிறதா, சாப்பாடு வேண்டி குரைக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம். நாயை வளர்ப்பவர்களுக்குத்தான் நாயால் புன்னகைக்க முடியும் என்கிற உண்மை தெரியும். பலமான நாய் தன்னுடைய எல்லைக்குள் வரும்போது முதலில் குரைத்து எதிர்ப்பு தெரிவிக்கும். நோஞ்சான் நாய் இனிமேல் ஒன்றும் முடியாது என்பதை உணர்ந்த பின்பு, மல்லாக்கப் படுத்துக்கொண்டு ஒப்புக்கொள்வதைப் பார்க்கலாம்.

மொழி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.  வட்டார வழக்கும் உண்டு.  'இங்கிலாந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் ஒரே மொழியால் பிரிந்த இரு நாடுகள்’ என்று பெர்னாட்ஷா குறிப்பிடுகிறார்.  உச்சரிப்பில் மட்டுமல்ல; எழுத்து அமைப்பிலும் இரண்டு நாட்டு ஆங்கிலத்துக்கும் வேறுபாடு உண்டு.  அமெரிக்காவில் முதல் மாடி, இங்கிலாந்தில் தரைதளம். அங்கு பேக்கேஜ், இங்கு லக்கேஜ்.  மொழிகள் மனிதனை இணைத்ததைவிட பிரித்தது அதிகம்.  

பால் எல்க் மேன் என்கிற உளவியல் அறிஞர், கற்கால மனிதர்களைப்போல இன்றும் நியுகினியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களை ஆய்வுசெய்வதற்காகச் சென்றார்.  அங்கே அவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகளுக்கும், நியூயார்க்கில் தன்னை படுநாகரிகமாகக் காட்டிக்கொள்ளும் மக்கள் வெளிப்படுத்திக்கொள்ளும் உணர்ச்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். எனவே உடல் மொழி என்பது உலகப் பொதுமொழி.  அவற்றை சரியாகப் புரிந்துகொண்டு கற்றால், நம்முடைய பலப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்.  

சாப்பாட்டுத் தட்டை வேகமாக வைப்பது ஒரு விதமான உடல் மொழி.  கதவை இழுத்துச் சாத்திக்கொண்டு வீட்டைவிட்டு புறப்படுவது இன்னொரு விதமான உடல் மொழி. சில உடல் மொழிகள் பரிணாம வளர்ச்சியோடு தொடர்புகொண்டவை. ராமாயணத்தைப் படித்தால் சுக்ரீவன், கும்பகர்ணனின் மூக்கையும் காதையும் கடித்துவிட்டு வந்ததைப் பார்க்கலாம்.  இன்றும்கூட வானரங்கள் பற்களை அதிகம் பயன்படுத்துகின்றன. அவை கோபத்தை வெளிப்படுத்தப் பற்களை

மனிதன் மாறி விட்டான்!

உபயோகிக்கின்றன.  நாமும்கூட கோபம் வந்தால் பற்களைக் கடிப்பது அதனால்தான்.  இன்னும் நம்மிடம் குரங்குத்தனம் எஞ்சி இருப்பதற்கு அது அடையாளம்.  

'மூளை விஞ்ஞானத்தின் மார்கோ போலோ’ என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன், எப்படி புன்னகை ஆரம்பமானது என்பது குறித்து எழுதியிருக்கிறார். மனிதக் குரங்கினங்களில் எல்லைப் பகுதி எது என்கிற போட்டி  வந்துவிட்டது.  ஒரு மனிதக் குரங்கினம் வாழும் பகுதிகளில் மற்றொரு மனிதக் குரங்கினம் தப்பித் தவறி நுழைய நேர்ந்தால், அதைத் தொலைவில் பார்த்த உடனேயே அந்தப் பகுதியைச் சார்ந்த விலங்கு தன்னுடைய கோரைப் பற்களைக் காட்டி 'கடித்துவிடுவேன்’ என்று பயமுறுத்தும். உடனே அந்த எதிராளியும் 'எனக்கும் கோரைப் பற்கள் இருக்கிறது. ஜாக்கிரதை’ என்று பதிலுக்குப் பல்லைக் காட்டும். அருகில் வந்த பிறகு தன் குழுவைச் சார்ந்தது என்று தெரிந்ததும், அந்தப் பல்லைக் காட்டுவது புன்னகையாக மருவியது.  இந்தப் பண்பை பரிணாம வளர்ச்சியில் மனிதன் தக்க வைத்துக்கொண்டான். 'நீ ஆபத்து இல்லாதவன். நானும் பல்லைக் காட்டுகிறேன்’ என்பதில்தான் ஒரு தற்காப்புக்காக புன்னகை தொடங்கியது. இப்போதும் நாம் மேலதிகாரியைப் பார்த்தால் புன்னகைப்பது ஒரு பாதுகாப்புக்காகத்தான்.  

நம்மை அறியாமல் நாம் சிலவற்றைச் செய்துகொண்டிருக்கிறோம். நம் இரண்டு கைளையும் கோக்கும்போது எப்போதும் ஒரே ஒரு கையின் கட்டை விரலைத்தான் இன்னொரு கட்டை விரலின் மீது வைக்கிறோம். இது நம்மை அறியாமலேயே நடக்கிற ஒன்று. இந்த இரண்டு கட்டைவிரல்களுக்குகூட எது முதன்மையானது என்கிற போட்டி. சிலர் வலது கட்டை விரலையே மேலே வைப்பார்கள். அவர்களை சிறிது நேரம் இடது கட்டை விரலை மேலே வைக்கச்சொல்லி அமரச் செய்தால், அவர்களால் இயல்பாகப் பேசவே முடியாது. அதைப்போலவே கைகளை மடக்கும்போதும் எந்தக் கையை மேலே வைக்கிறோம் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலர் முழங்கையைப் பிடிக்கிற மாதிரி கையை மடிப்பார்கள். சிலர் தோளுக்குக் கீழே பிடித்துக்கொள்ளுமாறு கைகளை மடக்குவார்கள்.  அதைப்போலவே கால் மீது கால் போடுவதிலும் ஊருக்கு ஊர் வித்தியாசம் உண்டு. இந்த உடல்மொழியைப் புரிந்துகொள்வதன் மூலமாகத்தான் மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியும்.

அறிவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு