Published:Updated:

பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு –திருச்சி கலெக்டர் உறுதி

பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு –திருச்சி கலெக்டர் உறுதி
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு –திருச்சி கலெக்டர் உறுதி

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ், விவசாய  நிலங்களை வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உதுமான் முகைதீன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர்கள் ஜெயராஜ், பெரியகருப்பண், பால்ராஜ், சகிதமாக திருச்சி கலெக்டர் ஆய்வு செய்தனர்.

அப்போது கலெக்டர் ராசாமணி,“ திருச்சி மாவட்டத்தில் தற்போதுள்ள நீர் ஆதாரங்களைக் கொண்டு குறுவை பருவத்தில் நெல் பயிர் 5900 ஏக்கர் பரப்பளவிலும், பயறு வகை பயிர்கள் 1600 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின்கீழ் டெல்டா பாசன பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரமுள்ள குழாய்கிணறு மற்றும் வடிமுனை குழாய் மூலம் பாய் அல்லது தட்டு நாற்றங்கால் அமைத்து இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 4 ஆயிரம் வீதம் பின்னேற்பு மான்யமாக ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

            குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் உழவுப்பணியை வேளாண்மை பொறியியல் துறையின் உழவு இயந்திரங்கள் மூலமாகவோ அல்லது விவசாயிகளிடம் இருக்கும் சொந்த உழவு இயந்திரங்கள் மூலமாகவோ உழவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உழவுப் பணி மேற்கொண்டதை துறை அலுவலர்கள் உறுதி செய்த பின்னர் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 500 வரை பின்னேற்பு மானியமாக அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5ஏக்கர் வரை உழவுப்பணிக்கான மானியத்தொகை வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த 22777 விவசாயிகளில் 15338 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூபாய் 25.81 கோடி காப்பீடு நிறுவனத்தால் முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் இன்று வரை 9509 விவசாயிகளுக்கு ரூபாய் 22.63 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

            இந்தியாவிலேயே தமிழகம் தான் சோலார் ஒளி சக்தியை பயன்படுத்துவதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. வேளாண்மைக்குப் பெரிதும் உதவக்கூடியதாகவும், முக்கியமாக பாரம்பர்ய எரிசக்தி பயன்பாட்டிற்கு மாற்றாகவும் சோலார் ஒளி சக்தி திட்டம் உள்ளது. மேலும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாத வகையிலும், கச்சா எண்ணெய் பயன்பாட்டினை குறைக்க உதவும் வகையிலும், மின் சேமிப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்திற்கும் இத்திட்டம் பெரிதும் உதவுகிறது.

     சோலார் பம்பு அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கூடுதல் மானியமாக 50 சதவிகிதம் வழங்குகிறது. மத்திய அரசு 30 சதவிகிதம் வழங்குகிறது. மீதமுள்ள 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் பங்களிப்பு தொகையாக செலுத்தி தங்கள் நிலத்தில் சோலார் பம்பை அமைத்துக் கொள்ளலாம்.

     திருச்சி மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டு வரை 110 சோலார் பம்புகள் அமைக்க ரூபாய் 3 கோடியே 26 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது. 2017-18ஆம் ஆண்டிற்கு இத்திட்டம் 90 சதவிகிதம் மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது” எனக் கூறினார்.